ஸ்ரீலலித லாவண்யம்

ஸ்ரீலலிதலாவண்யம்
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களின் தமிழ்வர்ணனை

ஆக்கம்:
ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன்
(1978 இல் விடயல்கருப்பூரில் எழுதியது)

ஓம் சக்தி                                                                                                                           ஜெயசக்தி

காமாக்ஷி சரணாம் போஜம் பாவயந்தம் ஸதாஸ்ருதி!
அனந்தாநந்தநாதம் தம்ஸத்குரும் சித்தயே ஸதா!!

உலகில் உயரவான பொருள் சக்தி வைபவம் தான். சக்திவைபவம் விரிவானதால் ஈண்டு அது சுருக்கமாய் அமைந்திருக்கிறது. அருள் அமைப்பிலே ஒரு நியதியைக் காணலாம்.

அன்னை ஆவிர்பாவம் – வாநவர் துதி – ஸ்ரீநகரவர்ணனை – பண்டவதம் – மந்த்ரஸ்வரூபம் – காமகலாவிளக்கம் – ஷடாதாரக்கடப்பு – நிர்க்குண ஸகுணஆராதனை – மஹாவாக்யத்துட்பொருள் அவளே……என்றபடி அமைந்துள்ள இவ்விளக்கம் ஸ்ரீலலிதா மஹாத்ரிபரசுந்தரியின் குணலாவண்யத்தைக் கூறுதலான் இது லலிதலாவண்யம் எனப் பெயர் பெறுகிறது.

இதனைப் படித்துணருங்கால் ஆத்மன் தன் இருதயக்குகையில் குடிகொண்டிருக்கும் நித்யானந்தத்தை நிச்சயம் உணரலாம். எதனையும் அருளும் குருசரணங்களில் ஆத்மஸமர்ப்பணம்.

ஸ்ரீலலிதலாவண்யம்

அருள் விலாசம் ஆன்மாவின் எழுச்சியை உண்டு பண்ணுங்கால் பராசக்தி குணங்களை பாரில் பரப்ப விரும்பி எழுந்த எண்ணக் கூட்டத்தினை எழுத்தில் வடிக்க அருட்சக்தி வழி செய்கிறது.

உணர்ச்சியின்பம் உருவத் தோற்றத்திற்கு வழி வகுக்கிறது. இறையின்பம் – ப்ரபஞ்ச உற்பத்தி. அல்லல் மலிந்து உயிர்கள் அல்லலுறும் காலை ஆண்டவன் பிரபஞ்சத்தில் – உலகில் உருக்கொண்டு உலவி – அறத்தை நிலைநிறுத்தி வருகிறான் என்பது ஆன்மீக உலகம் நன்கு அறியும். இறைத்தன்மை பொதுவானது. அதை ஆண் என்றோ பெண் என்றோ கூறமுடியாதல்லவா. அல்லல்படும் ஆன்மாக்கள் எந்தப்பெயர் கொண்டு அதை விளிக்கின்றனரோ அப்பெயரில் அவ்வுருவில் அது உலகில் தோன்றுகிறது. தத்துவத்தையும், வேதாந்தத்தையும், நாம் புரிந்து கொள்ள வேனுமானால் அதற்கு புராணத்தின் துணை அவசியம் தேவைப்படுகிறது. கதை மூலம் கருத்தினை உணரவைப்பது என்பது அறிவுரையின் அங்கம்.

ஆண்டவன் வானின்றிழிந்து வையகம் வந்தான் என்றால் – வான் எங்குள்ளது? அதன் தூரம் என்ன என்றெல்லாம் நாம் கதைபடிக்கும் போதோ புராணம் கேட்கும் போதோ விசாரிப்பதில்லை. ஆகாசத்திலிருந்து இறைவன் வருகிறான் என்றால் ஆகாசம் எங்குமுள்ளது இறைவனும் எங்குமுள்ளவன் – எங்குமுள்ளவன் எங்கிருந்து வருவது – என்பதெல்லாம் தத்துவவாதம். தத்துவம் அறிய தரணியோர்க்குப் பொழுதில்லை.
இறைச்சக்தி தன் ஒருசக்தியை தரணியில் பரப்பி ஒரு ஜீவனாக உருவெடுத்து – அல்லல் நீங்கவும், இன்பம் பெறவும் வழிசெய்கிறது. உலகில் மனித இனத்தில் அவதாரம் செய்து அதாவது இறங்கி வந்து தன் நிலையலிருந்து இறங்கிவந்து அவதார காரியத்தை செய்து முடித்து மறுபடியும் சக்தியுடன் கூடுகிறது. இதுபோல் தேவர்கள்துன்புற்றபோது இறைவன் அவர்களது துன்பம் துடைக்க அவதாரம் செய்திருப்பது புராணங்கள் மூலம் புரிகிறது.

முக்கட்பெருமான்மோனத்தவத்தை காமக்கலைஞன் மன்மேத்தேவன் மலரப்புகொண்டு தாக்கிய போதில் முக்கட்சுடர் அவனை முழுச்சாம்பலாக்கி நிற்க – தேவர்கள் காமக்கலைஞன் முக்கிய முணர்ந்து காலகாலனைக் கண்டு கழறிநிற்கும் வேளையில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதச்சாம்பல் – பண்டாசுரனாக வடிவெடுத்து தேவர்களை வருத்திய விருத்தாக்தம் வையகம் அறிந்த ஒன்று.
சொல்லடங்காத்துயருற்ற தேவர்கள் வேண்டிய தெய்வமெது என்றால் – அன்னை பராசக்திதான். கஷ்டம், துயரம் வந்தகாலையில் அதனை நீக்கும் மாபெரும் சக்தி – அன்னைதானே!‘அம்மா’ என்றழைத்தால் அருகே ஓடிவந்து அரவணைக்கும் குணம் அவளுக்குத்தானே உண்டு. குற்றத்தை மன்னிக்கும் குணம் தாய்க்குணம் அல்லவா! முதலில் வணங்கும் உறவும் தெய்வமும் அவளேதானே!

ஆகவேதான் ஆதிமுதல் அன்னையை அனைவரும் சரணம் எனப்பிடித்தார்கள்.
அன்னை ஆராதனம் அதிசிறப்பாக நடைபெற்றதன் முடிவிலே – பராசக்தி – கனிந்த தீயின் ஜொலிப்பிலே – ஒருமுகப்பட்ட த்யானத்தின் உணர்விநாலே – தன்னையே தீயில் இடுபொருளாகக்கொண்டு நிற்கும் சரணாகதியின் மத்தியிலே எழுந்த மாபெரும் சக்தி – அக்னிப்பிழம்பு – ஒளிச்சோதிவடிவம் ஓர் உருக்கொண்டு லலிதமான பொன்னுடலோடு கூட லலிதையெனப் பெயர் தாங்கி தரிசனம் தந்தாள். இந்த நிலை தேவியாகத்தின் முடிவிலே தோன்றுவதொன்று.

இங்கு பஹிர்யாகத்தின் முன் – பஹிர்முகமாக வேண்டிய தெய்வம் தன் உருக்கொண்டு எழுந்தது. இதையே அந்தர்யாகமாக – ஆத்மயோகமாக செய்யும் நிலையிலே – நீயே ஆத்மனாக, நீயே யோகியாக, நீயே தெய்வமாக, நீயே எல்லாமாக ஆவது அனுபவ சித்தாந்தம். ஆன்றோர் சத்தியவாக்கு. உண்மை உணர்ந்த நெஞ்சில் ஒளித் தோற்றமுண்டு. இங்கு உண்மைத் தெய்வத்தை உணர்ந்த போதில் ஒளித்தோற்றமாய் – இறைவி தோன்றினாள். தோன்றிய தெய்வத்தை தோத்திரம் செய்தனர் தேவர்கள்.

“எல்லையில்லாத பொருளுக்குத்தான் எல்லையற்ற சௌந்தர்யம் உண்டு தாயே!உன் சௌந்தர்யம் எல்லையற்றதம்மா! அசோகம், சம்பகம் முதலான மலர்களின் நறுமணத்தை உடையவளே. அம்மணம் உன் கூந்தல் கொடுக்கிறதம்மா!கஸ்தூரிக்கு உன் நெற்றியில் இருப்பதால் தானேபெருமையோ!காமக்கலைஞனின் வீட்டு தோரணம் தான் உன் புருவங்களோ! வெண்ணிற முகத்தில் வீசும் ஒளி நீரில் உறவாடி நீந்தும் மீன்கள் போன்றுள்ளதே என் நேத்திரங்கள். நாசியின் அழகை நட்சத்திர ஒளியை துள்ளி வீசும் உன் மூக்கணி காட்டுகிறதே! பிரபஞ்சத்தையே உன்னுடலாகக் கொண்டதால் சூரியசந்திரர்கள் உன் காது தோடுகளாக திகழுகிறார்களே! என் கன்னக்கண்ணாடியில் பிரபஞ்சம் பிரதிபலிக்கிறதே அம்மா!பவழம் போன்ற திருவருள் கொண்ட தாயே! காணக் கண்கூசும் உன் பல் வரிசையழகு சுத்தவித்தையே முளைவிட்டது போன்றுள்ளதே அம்மா! மூகனையும் பேசவைக்கும் வாசனை தாம்பூலமணம் மனதை கொள்ளை கொள்கிறதே! உன் குரல் நாததெய்வம் ஸரஸ்வதியின் வீணை ஒலியையும் மிஞ்சுகிறதே அம்மா! உன் மென்முருவல் எங்களை மட்டுமா சொக்க வைக்கிறது – காமேசனையும் மயக்குகிறதே தாயே! மங்கள சூத்திரத்துக்கு மகிமை அது உன் கழுத்தில் இருப்பதால் தானே தாயே! காமக்கலையின் சூக்ஷ்மபிந்து காமேசனையும் கலங்க வைக்கிறதடி! உன் திருவுடல் தாங்கிய ரத்தின பட்டாடையின் ஒளி உள்ளுருப்புக்களின் உயர்வழகை உள்ளளத்தில் உணர்த்தி உவகை கொள்ள செய்கிறதம்மா! அக இருளைப் போக்கும் குருவருளாய் புறஇருளைப் போக்கும் ரத்தின தீபங்களாய் ஒளி வீசித் திகழும் உன் திருவடித் தாமரைகளுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் அம்மா!

……. என்று பலபடித்தாய் தோத்திரம் செய்து முடித்தனர் தேவர்கள்.
காமேச்வரனை மணம் கொண்டாள் காமேச்வரி. உடல் பாதி உயிர் பாதியல்லவா! சிவமும் சக்தியும் சேர்ந்தொன்றாய் இருப்பது நியதியல்லவா! இருக்குமிடம் ஏற்றமிது எழில் நகரம். அதற்குத்தான் ஸ்ரீநகரம் என்ற திருநாமம். இதனையே மனக்கோட்டையில் கண்டு களிக்கவேணும்.

எந்தமனதில் காணுகிறோமோ அதுவே ஸ்ரீநகரத்தின் பிராகாரமாகும். மனம், புத்தி, அஹங்காரம் இம்மூக்கட்டும் மூன்றாகவும்: – ஒளிகொண்ட கதிரவன், தன்னொளி கொண்ட சந்திரன், மன்மததேவன்இவர்களின் ஒளி மூன்றாகவும் – நவரத்தினங்கள் உலோகங்கள் இவைகளினாலானது 19 ஆகவும் ஆக 25 மஹா பிராகாரங்களையுடைய ரத்தினத்தீவில் அமைந்த அந்நகரத்தின் ஸ்வரூபம் இது. மேருமலை உச்சிகரத்தில் உறைபவள் ஸ்ரீநகரத்தின் நடுநாயகியாம் நம்தேவியவள். அவளது வீட்டுக்கு சிந்தாமணி என்கிறார்களே! ஏனென்றால் பக்தன், ஸாதகன் சிந்தித்த எதனையும் ஸித்தித்து கொடுக்கும் திறமுடைய அவளது திருமந்திரத்துக்கு வாசஸ்தனமாக அது உடையதாலோ என்னமோ?

பிரம்மம் ஒன்றுதான் ஆனால் ஒன்றைப் பலவாக்கும் அவளது சத்தி இங்கு பிரம்மத்தையே ஐந்தாக்கி தனக்கு பிரம்மபீடமாக ஐந்துபிரம்ம ஆசனமாக அமைத்துக் கொண்டாளாம்.

பத்மம் என்றால் யானை என்ற பெயரை அறிவோம். இங்கு பெரிய பெரிய யானைகள் நிறைந்தகாடு. அந்தக்காட்டில் இருப்பவளாக அன்னையைச் சொல்கிறார்கள். மனமே ஒருகாடு. அதில் யானையின் நிறம் போன்று அனேக கரும்புள்ளிகள். அதன் மத்தியில் தான் இறைவியின் ஒளி வடிவம் உள்ளது. இதனைத்தான் மஹாபத்மாடவியில் அமர்ந்து காட்டுகிறாலோ!மேலும் நானாவித கதம்பமரங்கள் அடர்ந்த வனத்தில் வசிக்கிறாளாம். நானாவிதமான எண்ணக் கூட்டத்தில் தவிக்கும் புத்தி மாதிரி உள்ளது அந்த கதம்பவனம்.

துளிஅமிர்தம் பெற தேவர்கள் பட்ட பாடு நமக்கு தெரியும். பாத்திரத்தில் பெற்ற அமிர்தத்தை உண்டு சிறந்தவர் வானவர். இங்கோவெளில் அதே அமிர்தம் கடலாக சமுத்திரமாக நிறைந்துள்ளது. அதன் மத்தியில் ‘அவள்’ இருக்கிறாள்.கங்கையை, காவிரியைப் பூஜிக்கிறோம். இவைகள் நீர்நிலைகள். இதனைப் போல் அமிர்த நிலையையில் உள்ள அமிர்தத்தைப் பூஜிக்க வேண்டாமா? பூஜிக்கும் முறையும், விதானமும் அன்னை அருள் பெறும் உபாஸகஉலகம் நன்கறியும். அன்னை அருள்கொண்டு அமிர்தம் பருகும் மஹாவைபவம் அது. ஸ்ரீஸுதாதேவியின் சுகானந்த அருளை சூக்ஷ்மமாய் உணர்ந்து அவளில் மூழ்கும்ஆனந்த நிலை அவளருளால் அடையத்தக்கது. இங்கு சொல்லில்லை, பொருளில்லை, உணர்வில்லை, உருவமும் இல்லை. எல்லையற்ற ஆனந்தம் அனுபவ ஸித்தாந்தம் அது.

இப்படிப்பட்ட நிலையிலே நிலைகொண்டிருக்கும் நிமலையானவள் ‘காமாக்ஷி’ என்று பெயர்பெறுகிறாளே!அக்ஞானமும், அகங்காரமும் மிகுந்த மனம் படைத்த ஜீவன் ஆங்காரம் மிகுந்து ஆர்ப்பரிக்கிறது. அக்ஞானத்தால் அகந்தை மூடியிருக்கிறது. இவ்விருட்டு நீங்க ஓர் ஒளி வீசுகிறது. ஒளிக்கற்றைகள் பட்டவுடன் அக்ஞானமும், அஹங்காரமும் மடிகிறது அல்லது மறைகிறது. இதனை புராண உருவகப்படுத்திநோமானால் பண்டாசுரன் என்ற பெயர் பெற்ற அசுரன் தன் மமதையால் தேவர்களை துன்புறுத்திய காலை, அதாவது காமனைளால் பிறந்த பண்டன் காம வெறிகொண்டு அலைந்தகாலை பூவுடல் கொண்ட லலிதை பாசம். அங்குசம், பஞ்சபாணம் பூட்டிய கரும்புவில் இதனால் பண்டாசுரனை வதம் செய்கிறாள். இங்கு ஞானஉணர்வில் தெளிய வேண்டுவது அஹங்காரம், அழிவு. அகங்காரம் அழிந்து அக்ஞானம் நீங்கி ஒளி உருக்கொண்டுவிட்டால் அதுதானே முத்தி – அதுதானே மோக்ஷம் அதுதானே வீடுபேறு. பராணத்திலே வரும் அசுரவதம் நிகழ்ந்து தேவர்கள் இன்புற்றனர். காமபிந்துவிலிருந்து கிளம்பிய ஆசுரகுணம் காமங்களுக்கெல்லாம்,இவ்வுலக, அவ்வுலக ஆசைகளுக்கெல்லாம் மிகத்தொலைவில் – நிலைபெற்று அவைகளில் ஆட்படாத நிலையில், அவைகளை அருளும் தன்மையில் அமைந்து நிற்கும் ஸ்ரீகாமாக்ஷியால் வதம் செய்யப்படுகிறது என்பதைத்தான் இங்கு சூக்ஷ்மமாய் உணர வேணும்.

பார்வையாலேயே காமங்களையெல்லாம் ஆள்பவள், பார்வையாலேயே துன்பங்களையெல்லாம் போக்குபவள். பார்வையாலேயே முத்திப்பேற்றை அருளுபவள் என்றேல்லாம் அவள் சிறந்து விளங்குகிறாள். காமங்களை கொடுப்பவளும் அவள்தான். காமங்ளை நீக்குபவளும் அவள்தான். ஜன்ம ஜன்மாந்திரங்களில் ஆத்மன் அனுபவித்த விஷையானுபவங்கள் அவனிடத்திலே ஊறி லேசில் அவனை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. அவளருளால் இந்த விஷையானுபவ இச்சை நீங்கி ஆத்மாபிவிருத்திக்கு எண்ணம் ஏற்படுகிறது. ஆக விஷய இச்சை நசித்த இடத்திலே ஆத்ம இச்சை பிறக்கிறது என்பது தான் இங்கு உணரவேணும்.

எங்கும் பரந்துள்ளது பரவளி. இதனை அறிய பிரம்மாண்ட தத்துவம் அல்லது பிரபஞ்ச தத்துவம் புரிய வேணும். இதுவே உடற்கூறு அமைப்பிலும் பிண்டாண்டதத்துவமாய் சுருங்கி நிற்கிறது.

பிரம்மாண்ட தத்துவத்தை பராசக்தியாய் உருவகப்படுத்தினால் அவ்வுருவம் மூன்று பாகமாய் தெரியும். முகமண்டலம், கழுத்துமுதல் இடுப்புவரைஇடைமண்டலம், திருவடிமுடியக்கடை மண்டலம் என்று கூறலாம். அவளை ஆராதித்து அதாவது அவளின் மந்திரத்தை நாத்தழும்பேற நவின்று நலம்பெற்ற மகான்கள் அவளின் மந்திரமே அவளின் உடல் என்று கண்டு தெளிந்தார்கள். அந்த மகாமந்திரத்தை, மூன்று கூறாய் முன் நின்ற மந்திரத்தை,முதல்கூறுஅவளின் முக மண்டலமாயும் நடுக்கூறு இடைமண்டலமாயும், கடைக்கூறு பாதம்வரை உள்ள பகுதியாயும் தியானிக்க வேண்டுமென்று கூறியுள்ளதை உணர குருவருள் வேண்டும்.
மகாமகிமை பொருந்திய மந்திரங்களை கூறுபோட்டு அதன் குணங்களை விளக்கும் தனிப்பெருந்தகுதி மகான்களுக்கே உண்டு. தனியொரு வியக்தி தரணியில் சொல்ல தாயருள் வேண்டும் என்பது உறுதி.

அவளே எல்லாவற்றிற்கும் மூலம் மூலமாய் நின்றவளை காலத்தால் வணங்குகிறோம். வாக்பவம், காமராஜம், சக்தி என்ற முப்பிரிவு மந்தரத்தால் முதல்வியின் முழுஉடலை முப்புரிவாய் வணங்குகிறோம். இதனை அறிய வேணும் என்பது ஆன்றோர் வாக்கு. சூக்குமத்திற்குள் ஒரு காரணம் உண்டு என்பது தத்துவமல்லவா ? அக்காரணத்தை விளக்கப்போகுங்கால் ஒரே பிந்துவாய் பொலிவோடு தன் ஒளிகாட்டி நிற்கிறது. பின் அதுவே இரண்டாகி வசீகரண சைதன்யமாய அவ்யத்தமாய் வசீகரித்திருக்கிறது. பின் ஒரே பிந்து மூலமாய் ஜகத் காரணமாய் ஸ்தூலக்கண் காணா துரீயமாய்த் தோன்றுகிறது. ஒரே பிந்து பராசக்தி. இரட்டை பிந்து அவளும் இந்த பிரபஞ்சமும். மறுபடி ஒரே பிந்து விஷையானுபவம் மிக்க ஜீவன். தொடர்புடைய இம்மூன்றையுமே இடைவிடாத சுத்தசைதன்யம் ஒட்டி வைத்திருக்கிறது. அந்த சுத்தசைதன்யம் ஜீவசைதன்யமாய் ஜீவனின் மூலாதாரத்தில் புரிபோல சுருட்டிய நிலையில் இருப்பதாய்க்கண்டு தெளிந்த அறிஞர் கூற்று.உணர்ந்தால் அது கூற்றாயில்லாமல் சத்யம் எனத் தெளியலாம்.

ஸ்தூலமாய் விளக்கப்பட்ட மந்திரஸ்வரூபமும் சூக்ஷ்ம-காரணமாய்ப் புரிந்த வைபவமும் கண்டபின்பு, மூலாதாரத்தில் முழுக்கனலாய் சுயம்ஜோதி சைதன்யம் ஓங்காரமாய் எழும். அடுத்தடுத்த ஆதாரங்களிள் ஆங்காங்கே நின்று அது புரிவிக்கும் உணர்வெல்லாம் அல்லது அது கடந்து செல்லும் நடப்பெல்லாம் வாசிக்கட்டிலே நின்று ஆசையறுத்த யோகிகளுக்கே வெளிச்சம். இருந்தும் யோகியுமல்லாமல் போகியுமல்லாமல் ஆகிவந்த பரம்பரையில் தேடியடைந்த தெளிவினாலே சிறிது தெரியும் தன்மையும் உண்டு.

உச்சிக் கமலத்தில் ஓங்காரமாய் நின்று பிச்சிக்கலையாள் பெருக விடும் அமிர்தத்தை திகட்டாமல் பருக தேனமுதாளின் திருவடிகள் தண்ணுதலில் தெரிய வேண்டும். இதையே கண்டவர் விண்டிலர் என்று கூறுமாப் போலே அந்நிலையில் பெறும் அனுபவம் ஆனந்த அனுபவம். ஆனந்தத்தை உணர்த்த அகராதியில் வார்த்தைகள் இல்லை. இதுவே பேரனுக்ரஹம்.

சதாசிவ பதிவ்ரதையாய் இருந்து அனுக்ரஹம் செய்கிறாள். ‘அபேத பாவனம் ஸ்ரீசக்ரபூஜனம்’ என்கிறது உபநிஷதம். ‘நானே நீ நீயே நான்’ கொடுப்பதுமில்லை கொள்வதுமில்லை. மங்களத்தைக் கொடுப்பதும் அவள். அவளேதான் மங்களம்‘திக்குதிசை தெரியாமல் துணையில்லாமல் புகுந்திருக்கும் ஜீவனே!உனக்குப் பயமில்லையா? உன் பயத்தைப் போக்கி தனிவழி செல்லும் உன்னோடு தக்கதுணையாய் நின்று அமுதாட்டி அரவணத்து அழைத்துச் செல்கின்றாயே அம்மா! கனமான பாவமூட்டை கட்டுச்சோறாய் பாரமாய் அழுத்துகிறதே! அதனை லேசாக்கும் நித்தம் அவனையே அச்சோற்றை உண்ணச் செய்து பாவத்தைக் கரைத்து அவனை லேசாக்கி, லேசான நின் திருவடித்தாமரைகள் இரண்டையும் ஜீவனின் சிரசிலே தாங்கவைத்து குருவருளாய் குணமருளும் சிவபத்தினி! உன் செந்திருபாதங்களுக்கு சிறிய ஆன்மா சொந்தமடிதாயே ! என்றெல்லாம் வணங்கும் ஆத்மனுக்கு பக்தனுக்கு திருவனுக்ரஹம் செய்து விடுகிறாள் அன்னை.இவளை பக்தன் அன்னையாக மட்டுமா வணங்குகிறான். இல்லை. சுகாம்பரபெருவெளியாகவும் சிந்தனையிலே கண்டு வணங்குகிறான். இந்த குணமல்லாத, பெயரில்லாத, ஆதாரமில்லாத, குற்றமில்லாத, மாறுதலில்லாத, கூறுபோடமுடியாத, விருப்பு வெறுப்பு இல்லாத என்றுமே அழிவில்லாமல் நிலைபெறும் படியான பிரபஞ்சக்கட்டில் கட்டுப்படாத ஸ்தூலஸூக்ஷ்ம காரணம் மூன்றுமல்லாத, தனக்கு அதிபதி யாருமல்லாத, கவலை, காமம் எதுவுமற்ற நிர்மலமான ஒரு ஆனந்தத்தை ஆயிரம் பேர் சொல்லியும் துதிக்கிறானே! பிழையெல்லாம் போக்கி, சித்தம் அஹங்காரம் இதில் தெரியும் தூசிகளையெல்லாம் துடைத்து, அதை பாராசக்தி நித்தியமாய் உறையும் புனித இடமாக ஆக்குவதற்கு இந்த ஸ்ரீவித்யாஆராதனம் சிறந்துவிளங்குகிறது.
இவ்வாறு ஸச்சிதானந்த ரூபிணியாய் இருப்பவள் ஸகுணமாய் அன்னை வடிவத்தில் அடி மனதில் தோன்றி 64 விதமான உபசாரங்களை ஸ்தூலமாய் பெற்று ஸாதகனை ஒரு உபாஸககர்மாவில் இழுத்து அதனில் சிறக்க வழிசெய்பவலும் அவளே!
சுத்த சிவம் ‘சிவோஹம்’ பாவனையால் ஜகத்மாரணமாகிறது. இந்த ஜகம் முக்கூட்டு பிரபஞ்சமானது. இம்மாதிரி அநேக அகிலாண்டகோடி பிரம்மாண்டங்களையெல்லாம் இவள் இச்சையால் நடைபெறுகிறது. சிவோஹம் பாவனை சிவத்துக்கு ஏற்படவில்லையானால் அது செத்தசிவம் தான். அம்மாதிரி செத்தசிவம் ஐந்தை தான் தன் ஆஸனத்திலே அமைத்து ஆயிரம் கண்களுடன் ஆயிரம் பாதங்களுடன், படைத்தல்கடவுள் முதல் அணுவரை அவளே படைத்து, காத்து, அழித்து, உலகில் நடைமுறைச் சட்டங்களை வகுத்து (வர்ணாச்ரமம்) வேதங்களின் சிரஸிலே தன் பாத தூளியால் ஸிந்தூரப் பொட்டை இட்டு சிறக்கும் செல்வியவள். வாருணீ மதுவால் பெறும் ஆனந்தத்தேனை பருகச்செய்து மகிழ்வைக் கொடுக்கும் அவள் விஜயா முகூர்த்தத்தில் சிறக்கப்படுகிறாள். இருளைப் போக்கி ஞானம் அருளும் மஹாவாக்யம் கூறும் லட்சியப் பொருள் அவளே. தத்வம்அஸி. அம்மாவை ‘ஆயி’ என்று அழைக்கிறோம். ஞானிகள் ‘ஐயை’ என்று அழைக்கிறார்கள். இதுவே மகா வாக்கியத்தின் இருவேறு சொற்கள் என்பது புலனாகிறது. பாவனையில் செய்யும் பூசனையில் உலகிற்கு தந்தையாய் வாராஹியைக்கூறி அம்மாவாக குருகுல்லாவையும் கூறியிருப்பதை உபநிஷதம் உணர்விக்கிறது. மேலும் அஜபா காயத்ரீ ஸ்வரூபத்தில் ‘ஹம்ஸ’ மந்திரத்தின் உச்சாரணத்தால் சிறப்பவள். இவ்வாறு பலபடித்தாய் ஸ்வருப வர்ணங்களும் ஸித்தாந்த சொற்களுமாய் கூறப்பட்டதேவி குண்டலினிச் சக்தியாய் மூலாதாரத்தில் ஸாகினியாய் குடிகொண்டிருக்கிறாள். 16 தள விசுக்தியில் டாகினியாவும் 12 தளஅனாகதத்தில் ராகினியாயும், பத்துதள மணிபூரகத்தில் இரக்தவர்ண லாகினியாகவும்,ஆறுதளகமல ஸ்வாதிஷ்டானத்தில் காகினியாகவும் இருதள ஆக்ஞையில் ஹாகினியாய் வெள்ளை நிறத்துடனும் பிரகாசிக்கிறாள். 1000 இதழுடைய உச்சியில் உள்ள பிரஹ்மரந்த்ரம் என்ற நிலையில் யாகினியாய் சகலவிதகுண வர்ண பேதங்களாலும் பிரகாசிக்கிறாள்.
வாசனா விமர்சத்தால் இந்த பிறவி அடைந்திருக்கும் ஜீவன் தான் பிறவியை ஸபலமாக்கிக்கொள்ள அவளை தோத்தரிக்க வேண்டியவனாக இருக்கிறான். அவளுடைய நாம ஜபத்தினாலோ அவளுடைய மஹாமந்த்ர ஜப ஸித்தியினாலோ அவளுடைய ஸ்வரூப தரிசன பாக்கியத்தினாலோ குருவருளால் இப்பிறவி நோயை தீர்த்து கொள்ளுகிறான். நீ எவ்வழியில் ஆராதித்தாலும் அவ்வழியில் அவள் உன்னை நடத்தி செல்கிறாள்.

சாதகன் செய்யும் தீவ்ர பயிற்சியினாலே அவளை அறிந்து அவளது கருணையினாலே சிறந்து, தன் அக்ஞான இருட்டை போக்கிக்கொண்டு ஒருவராலுமே மீறமுடியாத அவளது ஆணைகளுக்கு உட்பட்டு எல்லாமே அவளது இடங்களாக இருந்தாலும், ஒருமனப்பட்ட அவளது ஸான்னித்தியத்தை ஸ்ரீசக்ரத்தில் கொண்டு ஸம்வித் ஸ்வரூபமான ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸ்வரூபமாய் அவனுக்கு நலம் நல்குகிறாள். ஸாதகனைஅது பரம மங்கலமான ஒரு நிலையில் அமைக்கிறது. மலரும் மணமும் சொல்லும் பொருளும் அக்நியும்உஷ்ணமும் பிரிக்க முடியாததுபோலே சிவத்தையும் சக்கியையும் பிரிக்க முடியாது. ஒரே வடிவினளான சௌந்தர்மான லலிதையை உன்மனதில் கண்டு கண்டு உள்ளம் நெக்குருகி அதனால் உடல் புளகாங்கிதம் அடைந்து ஒருமைப்பட்டு நிற்கும் ஒரு உத்தம வேளை ஆத்மனுக்கு எது ஸத்தியமாய் ஸித்தித்துக் கொடுக்குமோ, அப்படிப்பட்ட குருசரணக்ருபா பலத்தை வேண்டி குவலயத்தில் இக்குணங்கள் சிறக்கும்படியான ஒருநிலை ‘அருட்சக்தி’யால் அமைகிறது.

image_pdfimage_print