சக்தி வாக்கியம்

ஜயசக்தி.

சக்தி வாக்கியம்

(சந்தம் : சிவவாக்கியம்)

வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம்
பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம்
வாதம் வந்தபோது நம் வலியை நீக்கும் மந்திரம்
லலிதை லலிதை என்னும் மந்திரம் சாத்திரங்கள் ஓதுமே (1)

பாத்திரங்கள் பரப்பி வைத்து பூஜை செய்வார் பாரிலோர்
காத்திர மிவ்வுடல் என்று காத்திடுவ தெங்கனே
பாத்திரங்கள் பரப்பி வைக்கும் பூஜகரே கேளுமின்
பரத்தின் சக்தி லலிதையை பார்த்திடும் உம்முளே (2)

பிண்டமிதில் ஐம்பதை பொருத்தி வைப்பார் பூஜகர்
அண்டமிதில் அறிவு வந்து அமர்ந்தவா ரதெங்கனே
அண்டமிதில் உள்ள அறிவை நீர் பிண்டமுள்ளே பொருத்தினால்
கண்டகண்டமான மாய்கைமுன் மீண்டு வரலாகுமே(3)

கலியின் கோலம் என்றுமே காலம் வீணாய் செய்வரே
கலியின் கோலம் என்றிடில் கர்மயோகம் பொய்யதோ
பலிதமாகும் மந்திரம் பார்த்து கூற வல்லீரேல்
லலிதையென்னும் இன்பம் வந்து லீலையைச் செய்யுமே(4)

க வில் தொடங்கும் வித்தையை காதில் சொன்னார் குருவுமே
தாவும் மனத்தினை திருப்பி உள்ளே காணுவீர்
தாவும் மனத்தை திருப்பி உள்ளே கண்டபின்
மேவும் லலிதை திரு நகரில் ஆக்ஷி செய்யலாகுமே(5)

ஸ்ரீநகரம் சகத்தை விட்டு தூரமென்று கூறுவார்
ஸ்ரீநகரம் சென்று வந்தோர் ஜகத்தில்
ஆரும் உள்ளரோ
சரீரமிதினுள்ளே ஸ்ரீசக்கரத்தை அறிவீரேல்
ஸ்ரீநகரம் உம்முள்ளே சொலிக்கும் லலிதை வசிப்பளே(6)

தொல்லை தொல்லை என்று வாழ்வினை கூறுவார்
இல்லை இல்லை என்றுமே லலிதை வேதம் கூறுமே
தில்லை உள்ளே வசிக்கும் சிவன் சேர்ந்தவாரதெங்கனே
எல்லை இல்லை லலிதையும் எம்முளே இருப்பளே(7)

மண்ணும் கல்லும் வைத்து வீடு மேலே மேலே கட்டுவார்
கண்ணும் கருத்தும் அதிலே வைத்து காலமதை கழிப்பரே
மின்னும் லலிதை மேனி தன்னில் மெய்யாய் வாழ்வதறிந்திடில்
விண்ணில் உள்ள தெய்வத்தை வீட்டில் காணலாகுமே(8)

அஞ்சு அஞ்சு புலனை வைத்து ஆசையை அடைவரே
அஞ்சு அஞ்சு புலனும் உள்ளே ஆனவாறு அறிவரோ
அஞ்சு அஞ்சு புலனும் லலிதை கையில் ஆயுத மாகுமே
கொஞ்சி கொஞ்சி குலாவிடும் குழந்தையாக மாறுவார்(9)

அவித்தையும் அனாதியோ அகண்ட சக்தி அனாதியோ
தவித்திடும் தாபத்தால் தோன்றும் மனம் அனாதியோ
பவித்திடும் பிராரப்தம் போகமும் அனாதியோ
குவித்திடும் கொற்றவை கண்முன் நிற்கும் காட்சியே(10)

சண்ட முண்டனைக் கொன்ற சண்டிகை லலிதையே
விண்டுரைக்கும் வேதத்துள் விளங்குகின்ற லலிதையே
மாண்டுகை உபனிஷத்தில் மேவுகின்ற லலிதையே
மாண்டு போகும் மாந்தர்காள் போற்றுமின்கள் போற்றுமின்(11)

என்புதோல் போர்த்த உடல் இறவாது போகுமோ
கண்புரைத்துப் போகுமுன் கொற்றவளை காணுமின்
விண்ணுறையும் தெய்வத்துள் வைத்தாரே வள்ளுவர்
மண்ணுறையும் மாந்தரே மறவாது போற்றுமின்(12)

அன்பு கொண்டு வாழ்வதே மனித வாழ்வின் இலக்ஷியம்
வம்பு செய்யும் பேதைகாள் வேதாந்தம் கேளுமின்
அம்பு போன்ற அஞ்சு புலன் அவளின் கை ஆயுதம்
நம்பு நம்பு என்று சொல்லும் நாலுவாக்கியம் நவிலுவீர்(13)

ரக்தபீஜன் வேறல்ல ரத்தம் கொண்ட உடலிது
பக்தி செய்யும் மாந்தருக்கு பளிச்சென்று தெரியுமே
சக்தியவள் செய்வளே சம்ஹாரம் மனமிதை
உக்திகொண்டு பாருமின் உன்னுள்ளே லலிதையை(14)

காலம் காலம் என்று காலம் கடத்தும் பேதைகாள்
காலம் வித்தை கருமம் வித்தை குணத்தாலே பாருமின்
ஓலம் கொண்டு ஓடிடும் அவித்தையும் உம்முளே
பாலமாக இதுக்குமந்த குருவின் பாதம் உண்மையே(15)

லலிதை என்று சொல்ல சொல்ல லபிக்குமே ஆனந்தம்
லலிதை என்று சொல்ல சொல்ல தோன்றிடும் லக்ஷியம்
பலிதமாக ஆகிடும் பரகதியும் கதித்திடும்
சலிக்கும் வாழ்வின் சங்கதி சித்தத்தில் தோன்றிடும்(16)

அருக்கியம் தன்னை ஆவஹிக்கும் ஆன்றபெரிய அன்பரே
அருக்கியம் என்பதிங்கே ஆன்மஞான தீர்த்தமாம்
அருக்கியத்தை வைத்து நீர் ஆற்றும் பூஜை என்பது
திருக்கு திருசயம் அறிந்திடும் வேதாந்த காரியம்(17)

முழிப்பு வந்த எழுந்த பின்னர் கனவு பொய்யாய்ப் போகுமே
விழிப்பில் காணும் வியனுலகு வேறாக தோன்றிடும்
கழித்த காலம் கண் நொடியில் கரைந்திடும் மறைந்திடும்
அழிக்கும் உடல் மாய்ந்திடும் அதற்குள் அவளை அறிவீரே!(18)

தந்திரத்தின் சூக்குமம் தரணியிலே உயர்ந்தது
தந்திரத்தின் சூக்குமம் தரணியோர்கள் அறிகிலார்
தந்திரத்தின் சூக்குமம் தரணியோர்கள் அறிந்திடில்
சந்திரனும் சூரியனும் சுற்றும் வகை தெரியுமே(19)

வலது கண்ணும் இடது கண்ணும் சந்திரனும் சூரியன்
பலவகையாய் தோன்றுமிந்த பாரும் அவள் படைப்புதான்
தலையிலே வைத்து போற்றும் பாதுகையின் பொருளவள்
கலைந்திடாத உள்ளத்தில் கருத்து தோன்றலாகுமே(20)

ஆதிசிவன் பத்தினி அஹம் பதத்தின் நாயகி
வேதியர்கள் போற்றுகின்ற வேதத்தின் சிகையவள்
பாதிமதி சூடி நிற்கும் பைந்தவத்தின் பொருளவள்
சோதியான சுடரிலே சோபிக்கும் சுந்தரி(21)

அன்பிலே தோய்ந்து நிற்கும் அம்பிகையின் வழியிது
வம்புசெய்யும் மனிதருக்கு தோன்றாத வழியிது
சம்புநாதர் சொல்லிய சஹஸ்ரார வழியிது
தும்புரு நாரதர் தினம் செல்லும் வழியிது (22)

காமம் வேண்டாம் என்று சொன்னால் கொடிய மனசு கேட்குமோ
சாமம் நாலு வேதமும் சாத்திரங்கள் பல இருக்கையில்
நாமம் சொல்லி நல்லவளின் தாளை பற்றுமின்கள் பற்றுமின்
சேமம் வந்து சேர்ந்திடும் சகத்தில் நன்றாய் வாழலாம் (23)

நாளும் கோளும் சுற்றியே நாட்கள் போக்கும் மாந்தரே
நீளும் கர்மம் குறையுமோ நாட்கள் நகர்ந்து போகுமே
நாளும் கோளும் சுற்றி வரும் நாயகியின் பாதத்தை
கோளும் செம்மையாகுமே நலங்கள் யாவும் சேருமே (24)

பைந்தவத்தின் பைங்கிளி பேதம் போக்கும் தாயவள்
ஐந்தவிக்கும் அரசியாம் அருட்சக்தி ஆனவள்
சைந்தவியின் கண்ணனின் சகோதரியை போற்றுமின்
பந்தமெல்லாம் அகன்றிடும் பாதையும் புரிந்திடும் (25)

அன்பு என்று அரற்றுவார் அவனியிலே உள்ளவர்
அன்பு வைத்த உடலிது அந்தகனின் சொத்தலோ
அன்பு வைத்த உடலுக்குள் ஆண்டவளைக் காணுமின்
வம்பு இன்றி விலகிடும் யமனும் கண்ணில் மறையுமே (26)

ஆயிரம் பேச்சு பேசும் அகிலத்தின் மாந்தர்காள்
ஆயிரம் நாமங்கள் அவளுக்கென்று உள்ளது
ஆயிரம் நாமத்தை அறிந்து கூற வல்லீரேல்
போய் விடும் வினையெலாம் போக்கிடம் வேறில்லையே (27)

அன்னையோட மந்திரம் அநாதியான மந்திரம்
சென்னியிலே வைத்து சீவர் தினம் ஜெபிக்கும் மந்திரம்
சன்னதியாம் குருக்கள் செவியில் செப்பினிற்கும் மந்திரம்
கன்னல் போன்று காதினிக்கும் காதிவித்தை வித்தையே (28)

சதாசதா சுந்தரியை செப்புவோர்கள் சீடர்கள்
நிதானமாக நித்தியம் நாவில் ஊரும் மந்திரம்
சதாசிவன் சன்னதியில் சேர்த்து வைக்கும் மந்திரம்
இதாமிதாம் மபிராமியின் ஈகாரமான மந்திரம் (29)

ஆயிரங்கள் ஆயிரங்கள் அநேகமுண்டு வித்தைகள்
பாயிரங்கள் பாயிரங்கள் பாரிலுண்டு பாடல்கள்
தாயவளின் வித்தைக்கீடு தாரணியில் வேறுண்டோ
சேய்கள் நம்மை காத்து நிற்கும் சேருமின்கள் சேருமின் (30)

நோய்நொடிகள் நீக்குகின்ற அவுஷதமாம் அவள்பெயர்
காய்கறிகள் ஆக்குகின்ற காமினியும் அவளுரு
வாய் வழியே வீழும் ஜன்மவேரழிக்கும் வித்தையாம்
தாய் வழியே வந்த ஜன்மம் தாய் வழியே தீர்ந்திடும் (31)

ஆதிசிவன் அன்று செய்த அநாதியான பூஜையை
நேதி நேதி நேதி என்று கூறி மறை மதிக்கும் பூஜையை
பாதி உடல் பத்தினியை பராவென்னும் பூஜையை
வேதிகட்டி ஆற்ற வல்லார் வியனுலகில் உள்ளரோ (32)

நீரை நடுவில் நாட்டுவைத்து நீண்ட பூஜை செய்குவீர்
பாரை தன்னுள் பார்த்து வைக்கும் பாதையை அறிவீரோ
பாரை தன்னுள் பார்த்து நிற்கும் பூஜை தன்னை செய்திடில்
நீர் நிரப்பும் மாத்திரைகள் நம்முள் கூடலாகுமே (33)

குசுகுசுத்து கூறுவீர் பசுக்கள் என்று அகற்றுவீர்
மசமசக்கும் மாய்கையை மாற்றும் வித்தையல்லவோ
நசநசத்து போகும் உடலில் நாட்டமதை போக்கிடில்
கசகசக்கும் கன்மங்கள் கோடி தூரம் ஓடுமே (34)

சந்தனத்தால் மண்டலங்கள் சாற்றும் பூஜை செய்குவீர்
உந்தும் மனம் உண்மையிலே ஊறும் மண்டலமல்லவோ
உந்தும் மனம் தன்னை ஒரு க்ஷணம் ஒடுக்கினால்
சந்தனமாய் மணக்குமே சாற்றும் பூஜை அதுவலோ (35)

பரந்து பரந்து காரியம் பலகோடி செய்கிறீர்
விரிந்து பரந்த வியனுலகில் வீணான செயலதே
பரமான பராபக்தி பாவனையாய் செய்திடில்
உரமாகும் சக்தியால் உயர்வுகொண்டு உய்வரே (36)

ஆறுகாலம் செய்யும்படி ஆகமங்கள் கூறிடும்
காருகாலம் வந்தபின்னர் கார்மேகம் பொழியுமே
பேருகாலம் வந்தவுடன் சேயும் வந்து விழுந்திடும்
நேரம் காலம் இல்லையாம் மேருபூஜை செய்யலாம் (37)

களத்தகத்து காணியில் நெற்பயிர் உலர்த்தலாம்
மனத்தகத்து மேருவை தினம்தினம் பொருத்தலாம்
சினத்தகத்து அகற்றினால் சின்மயம் தோன்றிடும்
உளத்தகத்து செய்யும் பூஜை உயர்விலும் உயர்ந்தது (38)

ஊதல்காற்று வீசுகையில் உடலது நடுங்கிடும்
ஊக்கமது பெருகினால் உள்ள நடுக்கம் நீங்கிடும்
தேக்கமறு நினைவினால் தார்ட்யம் கைகூடிடும்
வாக்கமரும் தேவியும் வைராக்கியம் வந்திடும் (39)

ஐம்புலனும் மலரது அவனியில் மணந்திடும்
தும்புரு நாரதர் அலைந்திடும் மனமதே
சம்புநாதர் ஆடிடும் சபையும் அந்த அசபையே
வம்புபேச்சை விலக்கினால் வேதப்பொருள் விளங்குமே (40)

(வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம்)