மதுமதியின் கடிதங்கள் – கடித வடிவில் அமைந்த நாடகம்
(நாடக ஆக்கம் – வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்)
ஆதாரம் – குறிப்பு : ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தில் 448 வது நாமா “ஸ்வஸ்தி மதி” என்பது
உலகவிவகாரம் உண்மையல்ல. இருப்பது போல் தோன்றும். உண்மையானது-ஸத்தானது, பரப்ரஹ்மம் ஒன்றே. இதுவே தான் ஆத்மா. இதன் முறைப்பெண்ணாக வர்ணிக்கப்படுகிறது.
“ஸ்வஸ்திமதி” -என்ற பெயர் (இது ப்ராதிபாஸிக ஸத்யம்)
“விஷயா” – இது வ்யாவகாரிக ஸத்யம். (ஆத்மாவின் காதலியாக வர்ணிக்கப்படுகிறது).
“மதுமதி” – புத்தியின் உருவகம்.
கடித வடிவில் அமைந்த நாடகத்தில் இடம்பெறும் கதா பாத்திரங்கள்:
மனமோஹனன் : கதாநாயகன் (சஞ்சலத்தோடு கூடிய மனம்)
ஸ்வஸ்திமதி : கதாநாயகி
(ஏகரூபமாக வ்யாவஹாரிகத்திற்கும், பிராதிபாஸிகத்திற்கும் விலக்ஷணமாய்ப் பாரமார்த்திக ஸத்தாரூபமாய் உள்ள ஆத்மா. கதாநாயகனின் முறைப்பெண்)
விஷயா: கதாநாயகனின் காதலி (பஞ்சேந்த்ரிய விஷயங்கள்)
மதுமதி : கதாநாயக, நாயகிகளின், தோழி (புத்தி)
இடம் : காயாபுரி (அவர்கள் வசிக்கும் நகரம்)
மனமோஹனனுக்கு மதுமதி எழுதுவது,
ஒ மனமோஹனா ! உன் போக்கு மிகவும் விசித்திரமாய் இருக்கிறது. நீ குழந்தையாய் இருந்தபோதிலிருந்தே என் நண்பன். அப்போதெல்லாம் நீ என் அருகிலேயே இருப்பாய். இப்போதெல்லாம் நீ எதைப்பார்த்தாலும் அது வேண்டும்-உடனே வேண்டும் என்று சொல்லி அதையடைய பாடுபடுபிறாய் அது கிடைத்ததும் இன்னொன்று. அதற்குப் பிறகு மற்றொன்று இப்படி நீ ஓடிக்கொண்டே இருக்கிறாய்.
இப்போது நீ ஒரு இளைஞன். “ விஷயா” என்ற பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ளப்போவதாகப் பேச்சு அடிபடுகிறது ““விஷயா” உன்னைத் தன் வசப்படுத்திக்கொண்டுவிடப்போவதாகவும் கேள்விப்படுகிறேன்.
ஓ மனமோஹனா! ஸ்வஸ்திமதி என்ற முறைப்பெண் ஒருத்தி இருப்பதை நீ மறந்துவிட்டாய் போலும்! அவள் உனக்காகவே வெகுநாட்களாகக் காத்துக்கொண்டிருக்கிறாள். நீ ஒரு நாள் நிச்சயம் அவளை சந்திப்பாய் என்று எண்ணி உலகத்தாரின் கண்களுக்குத் தெரியாமல் அவள் உன்னைச் சுற்றிக்கொண்டு இருக்கிறாள்.
அவள் நிலைமையைப் பொருமல்தான் நான் இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். உடனே அவளை சந்திப்பாய் என்றும் உன்னைக்கேட்டுக்கொள்கிறேன். மற்றவை நேரில்.
இவண், மதுமதி
தோழி மதுமதிக்கு,
உன் கடிதத்தை எனது அவசரமான பல வேலைகளுக்கு இடையே நான் பார்க்க நேர்ந்தது உன் அதிர்ஷ்டமே! உன் கடிதத்தைப் பார்த்தும் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. எனக்கு நீ கூறியபடி “ஸ்வஸ்திமதி’ என்ற எந்த முறைப்பெண்ணும் இருப்பதாகத் தெரியவில்லை. விஷயாவும் நானும் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கிறோம். நான் செல்லும் வேகத்திற்கு ஈடுகொடுக்க அவள் ஒருவளாலேயே முடியும். அவள் வசத்தில் நான் இருப்பதாக எழுதியிருந்தாய். உண்மையில் விஷயா தான் என் வசத்தில் இருக்கிறாள், மேலும் அவள் பல்வேறு ஆபரணங்களை அணிந்துகொண்டு எவ்வளவு அழகுடன் இருக்கிறாள் தெரியுமா ? ஸ்வஸ்திமதி என்ற முறைப்பெண் நீ கூறியபடியே நான் அறியாமல் இருந்தாலும், அவளுக்கு இத்தகைய சிறப்புக்கள் ஏதேனும் உண்டா ? சொல். விஷயாவையே நான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.
எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. எனவே தொடர்ந்து கடிதம் எழுதி என்னைத் தொந்தரவு செய்யாதே.
இவண்,
மனமோஹனன்.
நண்பன் மனமோஹனனுக்கு மதுமதி எழுதியது:-
ஒ! மனமோஹனா, உனக்கு என்ன ஆயிற்று ? ஸ்வஸ்திமிதியுடன் கூடி விளையாடி இன்புற்றதையெல்லாம் நீ மறந்து விட்டாய் போலும்! உன் இதய குஹையில் “அவள்” எப்போதும் இருப்பதாக அல்லவோ பெரியவர்கள் கூறுகிறார்கள் ! நீயானால் அவளைப் பார்த்ததே கிடையாதது போல் பேசுகிறாயே! உன் அருகிலேயே அவள் “இப்போதும்’ இருக்கிறாள் என்பதே என் தீர்மானம் “விஷயா’ விடமே உன் முழு கவனமும் இருக்கையில் நீ எங்ஙனம் ஸ்வஸ்திமதியை காணஇயலும்? விஷயாவைக் கண்டு வியந்து பல விதமாய் கூறினாய்! அதெல்லாம் நீயாக கற்பனை செய்து கொண்டவை. அவள் ஒரு மாயக்காரி. அவள் இதற்கு முன் பலரை மயக்கி “காலன்” என்ற தன் அண்ணனிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறாள்! அவள் அண்ணன் மிகக் கொடியவன், பாரபட்சமில்லாமல் அனைவரையும் தனது சிறையில் அவர்களை அடைத்து விடுவதே அவனது தொழில்! ஸ்வஸ்திமதி அவளிடமிருந்து முற்றிலும் வேறான ஸ்வபாவமுடையவள் அவள் அத்தகைய மாய வேலைகளை அறியாத சாதுப்பெண். மிகுந்த அடக்கமுடையவள்.விஷயாவை சிறிது மறந்து விட்டு ஸ்வஸ்திமதியின் சிறப்பாக, நான் கூறுவதை சற்று பொறுமையுடன் கேள்:-
விஷயா பல்வேறு ஆபரணங்களைப் பூண்டிருப்பதாகக் கூறினாயல்லவா ? உண்மையில்
அவை ஸ்வஸ்திமதிக்குச் சொந்தமானவை. “முன்பொரு நாள்’ அவை அவளால் கவர்நது செல்லப்பட்டன. ஆனாலும் ஸ்வஸ்திமதி இயற்கையான அழகுள்ளவள். அவளுக்கு அணிகலன் எதுவும் தேவையில்லை. அவளை ஒருமுறை நீ கண்டிப்பாக சந்தித்தாயானால் நீ உண்மையை உணர்ந்து இன்புறுவாய். எனவே ‘விரைவில்’ அவளை சந்தித்து உண்மையை அறிந்து ஆனந்தமடைவாயாக என்று உன்னை கேட்டுக்கொள்கிறேன்.
இவண், உன் நலம் நாடும்,
மதுமதி.
ஓ! தோழியே !
நீ உன் “அறிவு’ வன்மையினால் என்னை சலனப்பட வைக்கிறாய். மேலும் எனக்கு *சஞ்சலம்’ என்ற நோய் வேறு ஏற்பட்டிருக்கிறது ! ஆனாலும் விஷயா என்னை வந்துபார்க்காமல் அவள் பாட்டிற்கு மகிழ்ச்சியாக உலவி வருகிறாள். அவள் என்னைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. என்றாலும் அவள் மீது நான் வைத்த அன்பின் காரணமாக. அவளை என்னால் மறக்க இயலவில்லை. சஞ்சலத்தோடு கூடிய என்னை நீ வேறு பார்த்தால் ஸ்வஸ்திமதி என்னும் முறைப்பெண் உண்மையாகவே இருப்பாளோ என சந்தேகிக்கிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
உன் பதிலை ஆர்வமுடன் எதிர்நோக்கும்,
மனமோஹனன்.
சஞ்சலமே வடிவாக உடைய தோழன் மனமோஹனனுக்கு,
உன் நிலையைப் பார்க்க எனக்கு மிகவும் வியப்பாய் இருக்கிறது. நீ ஸ்திரமில்லாத புத்தியை உடையவன். சஞ்சலநோய் உனக்கு ஏற்பட்டதும் ஒருவிதத்தில் நல்லது என்றே
நினைக்கிறேன். விஷயாவின் உண்மை இயல்பை இப்போதாவது புரிந்து கொள்! அவள்
உன்னை எப்போதும் தனது அண்ணன் காலனிடம் பிடித்துக்கொடுக்கவே காத்துக்கொண்டிருக்கிறாள். அவளிடமிருந்து கவனத்தைத் திருப்பி உன் அருகில் இருக்கும் ஸ்வஸ்திமதியை உணர்ந்துகொள். அவளை நீ உன் கண்ணைத் திறந்துபார்த்தால் உன் நோயெல்லாம் தீர்ந்து மிகுந்த ஆனந்தம் அடைவாய். ஸ்வஸ்திமதியின் உறவினர் ஒருவர் கூடிய விரைவில் அங்கு வருகிறார். அவரை சந்தித்தால் உனது மயக்கமெல்லாம் தீர்ந்துவிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உனக்கு மேலும் எழுதுவதற்கு எதுவும் இல்லை.
இவண்,
மதுமதி.
அன்புத் தோழி மதுமதிக்கு மனமோஹனன் எழுதியது:-
தோழி மதுமதிக்கு,
மிகுந்த ஆச்சரியமான நாடகம் நடைபெற்றிருக்கிறது! நானும் நீயும் சண்டையிட்டுக்கொண்டதுதான் மிச்சம். நீ எழுதியிருந்தபடி ஸ்வஸ்திமதியின் உறவினர் (ஆத்மபந்து) இங்குவந்து எனது மயக்கத்தையெல்லாம் தீர்த்துவிட்டார். அவர் கூறிய சிறந்த வாக்கியங்கள் எனது சஞ்சல நோயை இருந்த இடம் தெரியாமல் விரட்டிவிட்டன. நீ எனது முறைப்பெண்ணை மற்றவர் கூறுவதை வைத்துக் கொண்டு புகழ்ந்துதள்ளியிருக்கிறாய். உண்மையில் நீ அவளைப்பார்த்ததே இல்லை போலும் ! நானும் எனது இயல்பாய் இருந்த மயக்கத் தன்மையினால் காண்பது யார் என்றே தெரியாத அளவுக்கு மயங்கி இருந்திருக்கிறேன்.
ஸ்வஸ்திமதியின் உறவினர் இங்கு வந்துபோது என் நிலை மிகவும் மோசமாக இருந்தது. என்னருகில் அவர் வந்து எனது சிரஸில் கை வைத்தார். அந்த க்ஷணமே எனது நோய் தீர்ந்த தோடல்லாமல் நான் முன்பிருந்ததைவிட தேஜஸ் உடையவனாகிவிட்டேன். எனது பார்வை தெளிவுபெற்றது. அந்தநிலையில் அவர் “ஸ்வஸ்திமதி’ என்று அழைத்தார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. என் கண்முன் ஸ்வஸ்திமதியும், விஷயாவும் ஒரே தோற்றத்துடன் காக்ஷி தந்தனர். ஸ்வஸ்திமதிதான் விஷயாவாக வேடமணிந்து நம்முடன் விளையாடி இருக்கிறாள் என்பதை அவர் கூற, உணர்ந்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் அடைந்தேன். இனி, எங்கள் இருவருக்கும் நடக்கும் விஷயங்கள் மிகவும் ரகசியமானவை. நான் கூறிய இவ்விஷயங்களில் உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் ஸ்வஸ்திமதியின் உறவினரை அண்டி உண்மையை அறிந்துகொள்.
இத்துடன்,
ஸ்வஸ்திமதியின் கணவன்.
புதிய கதா பாத்திரம் அறிமுகம் – அகண்ட் (அகண்டாகாரவருத்தி)
அன்புள்ள மனமோஹனனுக்கு!
நலம். நலமறிய நாட்டம். அங்கும் இங்கும் அலையும் உனது தொழில் இப்போது எப்படி இருக்கிறது? சஞ்சலமே இயல்பாக உடைய நீ தற்போது ஸ்ரீகுருவின் சொற்படி நடக்க விரும்புகிறாய் என நினைக்கிறேன். முன்பு ஸ்வஸ்திமதியின் உண்மையான இயல்பை அறிந்த நீ திரும்பவும் உலக வாழ்வில் மயங்கி விடாதே! இவ்விஷயத்தை சற்று தெளிவாக்கவே இக்கடிதம்.
இப்படிக்கு
மதுமதி
அன்புள்ள மதுமதிக்கு மனமோஹனன் எழுதியது.
உனது கடிதம் கண்டு ஸந்தோஷம். ஓர் மகிழ்ச்சியான செய்தி! எங்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என நீ தான் முடிவு செய்யவேணும். குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளது. மற்றவை உனது பதில் கண்டு.
இப்படிக்கு
மனமோஹனன்.
அன்புள்ள மனமோஹனனுக்கு!
இந்த உலகம் மித்யை என கூறுவர். ஈச்வரன் மாயையின் துணை கொண்ட ப்ரபஞ்சத்தை
தோற்றுவித்தார். மற்றும் அதனைப்படைத்து அதனுட் புகுந்தார். இந்த விஷயத்தை லலிதா ஸஹஸ்ரநாமம்- மித்யா ஜகத்அதிஷ்டானனா- என்கிறது. ஜகத் மித்யைதான் என்றாலும் அதற்கு அதிஷ்டானமாக ப்ரஹ்ம சக்தி விளங்குகிறது. இவ்விஷயம் ஸ்வஸ்திமதியின் உண்மை இயல்பை அறிந்தபோது உனக்கு விளக்கவேண்டும் என்று இருந்தேன். நிற்க. ஸ்வஸ்திமதிக்கும் உனக்கும் ஆண்குழந்தை பிறந்தசெய்தி கெட்டு மிக்க மகிழ்ச்சி. அதற்கு “அகண்ட்” (அகண்டாகாரவ்ருத்தி) என்று பெயர் வை. அகண்ட் வளர வளர உனக்கு பொறுப்புகள் அதிகமாகின்றன என்பதை உணர். உனது இயல்பான சஞ்சலத்தை நீ துறந்தால் தான் உன் இந்த பொறுப்புகளை சரிவர ஆற்றமுடியும்.
ஸத்ஸங்கம் என்ற சட்டையை அவனுக்கு அணிவித்தால் ப்ராரப்த குளிர் அவனை தாக்காது.
இப்படிக்கு
மதுமதி
(தொடரும்…)