கவிதை இதழ்

ஜயசக்தி!
சென்னையில் சென்ற 25-05-2007 இல் நடைபெற்ற ஸ்ரீபாலா மஹாமந்த்ர ஜப யக்ஞம் சமயம் “இடைமருதன்” என்கிற ஸ்ரீ M. கிருஷ்ணமூர்த்திஐயரால் ருதம்பரா ஞானஸபை சார்பாக வாசித்தளித்த கவிதை இதழ்

கண்ணிருந்தும் குருடனாக காதிருந்தும் செவிடனாக
மனமிருந்தும் மந்தனாக தணமிருந்தும் வறியவனாக
இனமிருந்தும் தனியனாக சினமிகுந்து சீரழியும் பாமரனே!
குணமிகுந்து நீ வாழ உனை நாடி வந்ததுவே! …… ஞான சொற்கொண்டல்

வான் வெளியில் மின்னுகின்ற உடுக்களிலும்
மோனமொழி பேசும் மேலான முனிவரிலும்
கானக்குயிலிலும் தேன்சொறியும் மலரிலும்
காணக்காண மகிழ்வூட்டும் கானசோலையிலுமிது……. ஞான சொற்கொண்டல்

நாணமிகு நங்கையரின் கனிவான குரலிலும்
நாணேற்றி வில்லாடும் நாடுகாக்கும் வீரத்திலும்
தானே நிறைந்திருக்கும் பரதேவி அறியாப்பாமரனே !
தானாக அறியவைக்க வந்ததுவே ……. ஞான ச் சொற்கொண்டல்

முக்குணபரிமாண முத்தொழில் புரிகின்ற
மும்மூர்த்தி செயற்பாட்டின் மூலவித்து பரதேவி
மூல மந்த்ர பெட்டகத்தின் அருள்மழைபெய்விக்க
காலபேதம் ஏதுமின்றி கடிதாக வந்ததுவே ……. ஞான ச் சொற்கொண்டல்

தில்லிக்கும் சென்னைக்கும் பாலம் கட்டி
துள்ளியோடிவந்து ஞாலம் தழைக்க
அள்ளித்தெளித்து விடும் அன்னையின் அருளமுதை
சொல்லிசொல்லி வசமாக்கும் …… ஞானச் சொற்கொண்டல்

மனித உருக்கொண்டு வந்தாளே பரதேவி !
புனித மேனியதில் புதுமை ஏதுமின்றி
வேட்டிசட்டையுடன் நம்மில் ஒருவராக
கட்டிக்காத்து உறவாடும் கவின்மிகுகருணை……. ஞானச் சொற்கொண்டல்

சுட்டெரிக்கும் வெய்யிலிலும் கொட்டுமழை சாரலிலும்
பட்டாலே மேனி சிலிர்க்கும் பனித்துளி தூரலிலும்
கட்டைவண்டி தவிர மற்றுமுள ஊர்துகளில்
நாட்டையே சுற்றி நலம் பரப்பும் நல்லவர்….. ஞானச் சொற்கொண்டல்

கெட்டி மேளம் கொட்டி கட்டியம் கூறாமல்
பகட்டின்றி பலவாறு ஏற்றம் செய் பாதமதை
விட்டிலாய் வீணே விளக்கினில் வீழாமல்
கெட்டியாய் பிடிப்பீர் மட்டிலா பக்தியுடன் …. ஞானச் சொற்கொண்டல்

தேவிக்கு நன்றி சொல்ல வேண்டுமெனில்
தேவிதாஸன் திருவடி சேவையொன்றே பொதுமன்றோ !
தாய்ப்பாலாய் பொழியுதம்மா பேரருளை நமக்காக
தாவிப்பறந்துவரும் தாய்க்கருணை …….ஞானச் சொற்கொண்டல்

ஞானப்பாலுண்ட தமிழ்க்குழவி சம்பந்தராய்
நாநிலத்தில் அருள்வாழ்வு வாழவேண்டின்
வானுலகம் போய்த்தேடவேண்டாம் பாமரனே !
பேணும் இக்குருபாத சேவையே கோடி பெறும் – அறிவாயே