சித்தர் வழியில் சின்மய பூஜை
மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை.
ஸம்ப்ரதாய குரு தோத்திரம்
மூலமூலமூலத்தை மனதில் கூறும் உபாசரே
மூலமான பேர்களை முன்னர் கூறவேண்டுமே
ஆலவேரின் மத்தியில் அமர்ந்து கூறும் மந்திரம்
காலகாலகாலமாய் காதில் வந்து விழுந்ததே
யாகமந்திர ப்ரவேசம்
பூபுரத்தின் வாயிலில் பாதம் வைக்கும் உபாசரே
ஸ்ரீபுரத்தின் சன்னிதியில் சோதியாக இருப்பதார்?
ஸ்ரீபுரத்தின் உள்ளுக்குள் சிந்தை தன்னை வைப்பீரேல்
அப்புரத்தின் அப்புறம் அஹத்தில் வந்து அமருமே
குரு பாதுகை
பாதமிடும் பாதுகை பரக்க பேசும் உபாசரே
பாதமிடும் பாதுகை சிரத்தில் வந்ததெங்கனே
வேதமிடும் வாக்கியம் வாக்கில் கூற வல்லீரேல்
நாதர் வந்து நோக்குவர் நாதம் கேட்கலாகுமே
ஆசன பூஜை
ஆற அமற ஆற்றவென்று அமர்ந்திடும் உபாசரே
ஆற்றும் பூசை மண்டலத்தின் ஆனமஹிமை அறிவீரோ
போற்றுகின்ற மந்திரம் போகும் இடம் அறிந்திட்டால்
கூற்று வந்து அழைத்திடும் கூத்து இங்கு நடக்குமோ
ஸங்கல்பம்
முப்பத்து ஆறையும் முணுமுணுக்கும் உபாசரே
இப்பத்து இந்திரியம் வசிக்கும் இடம் எவ்விடம்
தப்பத்து காலத்தை தாண்டி விடவல்லீரேல்
அத்தத்துவங்களும் அன்னை இமை மூடலே
கண்டா பூஜை
கணம் கணம் என்று மணி அடிக்கும் உபாசரே
கணப்பொதும் கருத்திலே காளி தன்னை வைப்பிரேல்
ஓடிடும் இராக்கதர் ஒடுங்கிடும் புலன்களே
குணங்கள் மூன்றும் கடந்து நீீவிர் இங்கே
உணர்விலே லயிப்பிரே
தீப பூஜை
ஒளியை ஏற்றி உயரத்தில் நிறுத்தி வைக்கும் உபாசரே
வளியை ஏற்றி உம்முடை வாசல் தன்னில் வைப்பிரேல்
களிப்பை எய்தி கருத்துளே கடவுள் வந்தமர்வளே
இருளை நீக்கும் இறைவியும்
உருவில் உம்முள் வருவளே
பூதசுத்தி
சுத்தி சுத்தி சுத்தி என்று மூக்கைத் தொடும் உபாசரே
சுத்தி சுத்தி சூழ நிற்கும் சொரூபத்தை அறிவிரே
வித்தை முத்தி தந்திடும் வீரனாக ஆவீரே
குத்தமில்லா குருஉரு உம்முளே கூடுமே
நியாசம்
அம்மோடு க்ஷம் வரை நியசிக்கும் உபாசரே
அம்மம்மா ஆயிரம் இடங்களில் நிறுத்திடில்
இம்மைக்கும் மறுமைக்கும் இழுத்தடிக்கும் மாய்கையும்
உம்மைவிட்டகன்றிடும் உண்மை உண்மை உண்மையே
பாத்திர(ஆ)சாதனம்
பலகையில் படம் போடும் பராசக்தி உபாசரே
உலகம் சுற்றும் மனமதை மண்டலமாய் எழுதிடில்
கலகம் யாவும் ஓய்ந்திடும் கவலையும் மறந்திடும்
வலயத்தின் மூன்றிலே வாகாய் மனம் நின்றிடும்
பலகையில் பாத்திரங்கள் வைத்திடும் உபாசரே
தூலமாக தொட்டு தொட்டு மூலமதை ஜபிப்பீரேல்
ஜலம்கூட விசேடமாய் இனிக்கும் வகை அறியலாம்
பால்குடிக்கும் குழந்தையும் பரம்பொருள் அறியுமே
சங்கு இடையில் ஸ்தாபிக்கும் சீர்மைமிகு உபாசரே
பொங்கும் கடலில் பொருக்கும் சங்கு பூசைகானதெவ்வகை
அங்கும் இங்கும் ஆர்பரிக்கும் அந்த மனம்
சங்குதான்
இங்கிதமாய் கண்டுவிட்டால் எல்லம் இறை காட்சிதான்
லக்குமியை இலகுவாக அழைத்திடும் உபாசரே
ஆகச்ச ஆகச்ச என்றழைத்தால் வருவளே
பூக்களை பாத்திரத்தில் பொறுமையாய் போட்டிடில்
தூக்கத்தில் கூட உந்தன் ஸ்வரூபத்தை அறியலாம்
வ்ருத்தி வ்ருத்தி வ்ருத்தி என்று வேய்ந்திடும் உபாசரே
வ்ருத்தி வந்ததெவ்விடம் வ்ருத்தி போனதெவ்விடம்
உருத்திரத்தின் உருவையேற்றி உரக்க கூற வல்லீரேல்
வருத்தி நிற்கும் விருத்திகள் விலகிபோகலாகுமே
திரவ்வியங்கள் ஐந்து ஐந்தாய் கிரஹித்திடும் உபாசரே
திரவ்வியங்கள் ஐம்புலன்கள் ஆன வகை அறிவீரோ
பரப்பி வைக்கும் பாத்திரத்தில் விசேடத்தில் ஒருதுளி
குருவினதாக்யயால் நம்மை தன்யனாக்குமே
அந்தர் யாகம்
கனத்திடும் இதயத்தில் கோலமிடும் உபாசரே
மனதினில் கோயில் கட்டி மாலை போட வல்லீரேல்
சினமது அகன்றுமே சின்மயத்தை உணரலாம்
தினம் தினம் தாயவள் தோன்றுவள் சிரத்திலே
மூலத்தை வாயுவால் முன்னேற்றி ஆரத்தில்
காலத்தை வென்றவளை கும்பிட்டு நின்றிட்டால்
ஆலத்தை உண்ணலாம் அமிழ்தாக மாறிடும்
நீலமான மூர்த்தியை கண்ணால் காணலாகுமே
ஆவாஹனம்
உள்ளதேது வெளியதேது உள்ளும் வெளியும் உம்முளே
உள்ளில் உள்ள மூர்த்தியை வெளியில் வைக்கலாகுமோ
கள்ளம் உள்ள மனதிலே காட்சி தோன்றலாகுமோ
வள்ளல் குருனாதன் சொன்ன வழியும்
பொய்தலாகுமோ
அஹம் அஹம் என்று உள்ளே ஆர்பரிக்கும் மூர்த்தியை
இஹத்தில் உள்ள வாயுவால் வெளிக்கொணர வேண்டுமே
தஹதஹக்கும் தாயவள் கண்ணெதிரே தோன்றுவாள்
கசகசக்கும் மனதிலே காட்சி தோன்றலாகுமோ
உபசாரம்
மணி மணியாய் கோர்த்து மாலை போடுகின்ற உபாசரே
உன்மணிதான் மாலை என்று உள்ளார உணர்வீரே
கண்மணியில் தோன்றும் காட்சிமனக்கண்ணால் பாருமே
பொன்மணியை தரித்துமே பராசக்தி தோன்றுவாள் .
குருமண்டல பூஜை
குருகுருக்கும் பார்வையால் குணத்தை தந்த குருவிடம்
துருதுருக்கும் மாய்கையும் தூரத்தள்ளிப் போகுமே
அருவருக்கும் அவித்தையும் ஆட்டம்
காணலாகுமே
சிறுவனுக்கும் சிறுவனாய் சிந்தை பாதம் வையுமே
மணமணக்கும் பாத்திரம் மனமென்ற பாத்திரம்
தொணதொணக்கும் வினையது தொலைந்து போகலாகுமே
சினமறுக்கும் சின்மயம் அருக்கியமாய்
ஆகுமே
கனவில் வந்த குருவுரு கண்ணில் தோன்றலாகுமே
திதி நித்யா
காலகால காலமாய் காத்திருந்த காலங்கள்
மூலமூலமூலமாய் முன்னிருக்கும் போதிலே
தூலதூலதூலமாய் துதித்து நிற்கும் உபாசரே
நாலும் நாலும் எட்டு என்று நாட்களும் கடக்குமே
பத்தினைந்து நித்தையும் பரத்தை சுற்றி நிற்குமே
உத்தி செய்து உன்மனியை உயரகாணும் உபாசரே
பத்திசெய்ய சொல்லுதே பத்ததியும் பாரிலே
மத்தியிலே மூணுகோணம் முறைமை காண முடியுமோ
சதுராயதனம்
கணபதியும் குணபதியும் நெடுமாலும் நடுவிலே
கணகணக்கும் சூரியன் குன்றில் வாழும் இளையவன்
பனியில் உள்ள பரசிவன் பஞ்சபூத பூஜையை
தனியாய் நின்று செய்வீரேல் தன்னை அறியலாகுமே
லயாங்கம்
அன்னை அன்னை அன்னையவள் அண்டையிலே இருக்கையில்
விண்ணில் செய்யும் வேதகோஷம்
வெளிக்கொணரலாகுமோ
தன்னில் நிற்கும் ஜோதியை பீஜமாய் அழைக்கயில்
உன்னில் வந்து நிற்பளே உணரவேண்டும் உபாசரே
ஷடங்கம்
மண்ணுக்குள்ளே வாசம் என்றால் மூக்கும் அதை முகருமோ
கண்ணுக்குள்ளே ஒளியும் வர காட்சி தோன்றலாகுமோ
விண்ணுக்குள்ளே வேதம் உண்டு மனதில்
காணலாகுமோ
பெண்ணின் உருவந்ததே பரம்பொருளாய் ஆனதே
ஆவரணம்
முதலாவரணம்
சதுரமான பூபுரம் சக்கரத்தின் அப்புரம்
மதுரமான மேல்புரம் நான்கான பேறுகள்
விதவிதமாய் வாடிகை வாகான முத்திரை
சிதராமல் மனதில் வைப்பீர் வித்தையின் உபாசரே
இரண்டாம் ஆவரணம்
பத்தினாறு இதழிலே பழகி நிற்கும் பரத்தினை
முத்துமுத்தாய் மந்திரம் மனதில் கூற வல்லீரேல்
மித்தையான உலகமிது மங்கி மங்கி மறையுமே
வித்தை வித்தை சிரியின் வித்தை விதவிதமாய் கூறுதே
மூன்றாம் ஆவரணம்
எட்டி எட்டி போய்விடும் உந்தன் மன மாசுகள்
கட்டி வைத்த சோறுகள் கூடகூட வாருமோ
முட்டி முட்டி மோதுமே துரியத்தின் முதலுமே
அட்டதளம் அறிவீரோ அம்பிகையின் உபாசரே
நான்காம் ஆவரணம்
தூங்கி தூங்கி நின்றிடும் துரியத்தின் நிலையதை
அங்கு வந்த ஆசானும் அன்பினால் அருள்வரே
பொங்கி வரும் பாக்களை புரிந்து கொள்ளும் உபாசரே
அங்கியாம் அவளினை அறிவினால் அறிவிரே
ஐந்தாம் ஆவரணம்
அஞ்சு அஞ்சு ஆனபொருள் ஆண்டவளின் கைமலர்
அஞ்சாதே என்று சொல்லும் ஆசானே ஆண்டவர்
துஞ்சாமல் தூங்குகின்ற துரீயத்தின் அடுத்தது
சஞ்சலங்கள் அகன்றிடும் சொரூபத்தை அறிவதால்
ஆறாம் ஆவரணம்
அருகிலே வந்து நின்றார் ஆரு நீ அறியென்றார்
கருவிலே குமியாத குரூப ஸதனமாம்
பெரும் படிப்பு படித்திடும் பழம்பெரும் உபாசரே
அரும்பொருள் தன்னைத் தரும் ஆசானை அடைவீரே
எழாம் ஆவரணம்
சொன்னசொல் சுரீரென்று தைத்திடும் மனதிலே
பண்ணி வைத்த பாவங்கள் பஞ்சாக போய்விடும்
தண்ணி வைத்து குடத்திலே தலையிலே சரித்தரே
கண்ணினால் தீட்சை செய்து கர்மத்தை தொலைத்தரே
எட்டாம் ஆவரணம்
அவித்தை தன்னை அழித்திடும் அன்னைகை ஆயுதம்
தவித்திடும் மனதை இங்கு மனனத்தால் மாத்துமே
பவித்திடும் பரம்பொருள் பார்க்க பார்க்க பரவசம்
குவிந்திடும் மனமதை குருவருள் மாற்றுமே
ஒன்பதாம் ஆவரணம்
நவ நவமாய் உள்ளதெங்கள் நாயகியின் மந்திரம்
பவபவமாய் பிறந்த பொய்மை போனஇடம் எவ்விடம்
தவதவமாய் ஏற்றுவோர்க்கு தலைமை இடம் பிந்துவும்
சிவசிவமாய் ஜொலிக்குது பார் சிந்தையின் மணிக்ருஹம்
பஞ்ச பஞ்சிகா
அஞ்சு அஞ்சாய் பீடம் போடு அன்னையின் உபாசரே
விஞ்சி நிற்கும் லலிதையும் வந்து அதில் அமர்வளே
கொஞ்சி பேசும் சிவனிடம் கூட நிற்கும் சக்தியை
நெஞ்சத்திலே அமர்த்தினால் அஞ்சிடும் மாய்கையது காத தூரம் ஓடுமே
ஆம்னாயம்
மந்திரங்கள் லக்ஷம் கோடி மனம் ஜபிக்கும் உபாசரே
விந்தையிலும் விந்தைதான் அதன் அருத்தம் தன்னை அறிவீரோ
அந்தமிலா மந்திரத்தை அழுத்தமாய் உரு ஏற்றினால்
பொந்திலே வசிக்கும் பாம்பு ஆரத்திலே ஏறுமே
ஷட்தர்சனம்
ஆறுஆறாய் வகுத்துவைத்தர் ஆறுகாட்டும் பூசையை
வேறுவேறாய் தத்துவங்கள் விளங்கினிற்கும் அதனுள்ளே
பேறுதரும் பூசையின் பூருவத்தை அறியவல்லீரேல்
ஆறும் வழிவிட்டகலுமே குழந்தையாக தெய்வம்வந்தருளுமே
ஷடாதார பூஜை
மூலத்திலே இருக்கின்ற முக்கண்ணன் புதல்வரை
மேலேற்றி நிற்கவைக்கும் மேலான உபாசரே
காலத்தில் கருத்தை வைத்து கடைமை ஆற்ற வல்லீரேல்
மேலேறும் குண்டலினி மேதினியை மறைக்குமே
தண்ட நாதா அர்ச்சனை
நம நம என்றருச்சனை நாவால் கூறும் உபாசரே
நானில்லை சீவனென்று நிறுத்தி கூற வல்லிரேல்
நமனுமில்லை இல்லை என்று நூறுகாதம் ஓடுமே
அரியும் இல்லை அரனும் இல்லை அன்னையிலே அடக்கமே
தூபம்
ஆளைதூக்க தூபம் காட்டும் அறிஞரான உபாசரே
வாசனை போகவென்று எண்ணம் ஏதும்
உள்ளதோ
கர்மவாசம் போகவென்று ஆணை இட வல்லிரேல்
மர்மமாக மறைந்திடும் மண்ணில் வாசம்
உண்மையே
தீபம்
நெய்யை கொண்டு தீபத்தை நீள காட்டும் உபாசரே
தூய்மை கொண்டு உள்ளொளியை
தரிசிக்க வல்லீரேல்
பொய்மை போனதெவ்விடம் புலன்கள் நின்றதெவ்விடம்
தாய்மை நெஞ்சில் தோணுமே
ஒளிரும் ஞானஒளி வீசுமே
நைவேத்தியம்
வடையும் அடையும் விதவிதமாய்
படைகின்ற உபாசரே
உடைமை எல்லாம் உண்மையில் நைவேத்தியம் அவளதே
கடமை என்பதவளிடம் காட்டி காட்டி நிற்பதே
தடைவை ஏழு மூலத்தால் தொட்டு காட்டு தாயிடம்
குலதீபம்
உள்ளுக்குள்ளே ஒளிரும் ஒளி வெளியினிலே வாருமோ
கல்லுக்குள்ளே கடவுள் காட்சி
காணும் வழி தெரியுமோ
அந்தர் ஜ்யோதி பஹிர் ஜ்யோதி
ஒன்றாகி போகுமோ
ஸந்ததமும் ஸாமயிகர் ஸத்துவத்தை
சேருமே
கர்பூர நீராஜனம்
எரியும்கர் பூரத்தை எதிரே காட்டும் உபாசரே
விரியும் இந்த புவனத்தை விட்டுவிடலாகுமோ
பிரியும் உடல் சூக்குமமும் போகும்வழி
தெரியுமோ
ஒளிரும்கர் பூரம் போல உந்தன்மனம்
கரையட்டும்
புஷ்பாஞ்சலி
புலன் ஐந்தும் புட்பங்கள் போட்டுவிடு
பாதத்தில்
வலம் வந்து வேதத்தை வாயில் கூற வல்லிரேல்
புலம்பெயரும் வினைகளும் பூவாக
மணம்வீசுமே
நலம் தருவாள் நாளுமே நவ நவத்தின் நாயகி
தோத்திரம்
பாடி பாடி பாடி பாடி தோத்திரம் செய்திடில்
கூடி கூடி கூடி கூடி கைவல்யம் வாருமே
தேடி தேடி தேடி தேடி திருவருள் கிடைத்தபின்
நாடி நாடி நாடி நாடி நாட்டம் மனம் மறையுமே
காமகலா த்யானம்
தாய்மை கொண்ட துணைவியை தேவியென்னும் உபாசரே
தூய்மை கொண்ட மனதிலே தாயும் இடம் கொள்ளுவாள்
ஈயும் மொழி மந்திரம் இதயம் காண வல்லீரேல்
போயும் போயும் கருக்குழி பின்பும் கண்ணில் தோன்றுமோ
வீரவீரவீரனென்று வாயில் சொல்லும் உபாசரே
தாரதாரதாரத்தை தாயாய் காண வல்லிரேல்
தீரதீரதீரனென்று தரணி மாந்தர் அழைப்பரே
பாரபாரபாரமான பூமிதன்னில் பிறப்பரோ
பலிதானம்
இரஹசியமாய் பலியினை தானம் போடும் உபாசரே
காமக்ரோத லோபத்தை கொன்று பலி
கொடுப்பீரேல்
ஸாமவேத ஸாரங்கள் சிந்தை வந்தமருமே
வாமபாக இறைவனுக்கு உகந்த பலியாகுமே
மந்த்ர ஜபம்
கரஷடங்கம் கையால் சுற்றும் காதிவித்தை உபாசரே
பரம்பொருளின் மூலமதை பக்குவமாய் ஜபிப்பீரேல்
வரம்தரும் தெய்வமது வாக்கில் வந்தமருமே
மராமரா என்றதும் இராம நாமம் ஆனதே
ஸ்வாசினி பூஜை
சக்தி சக்தி சக்தியென்று சிரம் தொடும் உபாசரே
உடலின் சக்தி உயிரின் சக்தி எந்த சக்தி கூறுமே
இடத்தின் சக்தி ஈசன்போல் இன்பம் காண
வல்லீரேல்
தடத்தின் முக்தி கரத்தினில் எழுந்து வந்தமருமே
சத்துருவை சம்ஹரிக்க சித்தம்கொண்ட உபாசரே
புத்துருக்கு நெய்போல சக்தி துணை இருக்கையில்
சத்துருவும் வாருமோ சங்கடங்கள் ஆகுமோ
மாத்துருவும் மாத்துவாள் மித்தை என்று மண்ணிதை
அழுகை செய்தரட்டுகின்ற குழந்தைமன உபாசரே
தொழுதெழுதால் அருள்தருவாள் துணவியான தாயவள்
பழுதுபோன்ற மாய்கையை பாம்பென்று பதறுவீர்
குழந்தை என்று உனை அழைத்து கூற்றதை கொல்வளே
ஸாமயிக பூஜை/தத்துவ சோதனம்
மண்டலத்தில் கூடி நிற்கும் மஹா மஹா உபாசரே
அண்டலத்தில் ஆன்மபூஜை அனுதினம் ஆற்றுவீர்
பிண்டலத்தில் பிரம்ம ஜ்யோதி பிரகாசிக்கும் பாருமே
உண்டுவைத்த உருண்டையாக உடலிதை சுமப்பதேன்
முப்பதின் தத்துவங்கள் மனம் ஸ்மரிக்கும் உபாசரே
உப்பதின் கரைவு போல உடல் கடல் சேருமே
தப்பாத தலைவன் வந்து தூது ஓலை அனுப்புமுன்
அப்பாதம் சேர்ந்து நின்று ஆன்மாவை சோதியும்
ஆணவத்தின் மலங்களை அமர்ந்து கூறும் உபாசரே
சாணியும் சாமியாகும் சுத்தவித்தை தெரியுமோ
பாணிபாத தத்துவத்தை பானம் வைத்து சோதித்தால்
தூணிலே வந்த சிம்மம் தரிசனம் தாருமே
குரு யஜனம்
ஹம்ஸ ஹம்ஸ என்று கூறி குருவணங்கும் உபாசரே
தம்மை தாமே தெரிந்து கொள்ள குருவினருள் வேண்டுமே
இம்மை மறுமை இரண்டும் தாரும் இனியபாதம் பணிந்திட்டால்
செம்மையான சிரத்தில் முத்தி சீக்கிரமாய் வாருமே
மூவுலகும் வசமாக்க முத்ரை போடும் உபாசரே
நாவதனை அடக்கிவிட்டால் நாலு வேதம் தெரியுமே
பாவத்தின் புண்ணியங்கள் ஜுஹித்திடும்
உபாசரே
கேவலம் குருகிருபையே கொடுத்திடும் சீவன்முத்தியை
ஆத்மானுசந்தானம் ஐக்கியம்
வாசிகட்டி வாயுவால் வெளியில் செய்த பூஜையை
மாசிலாத மனதினால் மீண்டும் மூலம் வைப்பரே
தூசிலாத அம்பரத்தில் தீதிலாமல் நின்றிடும்
பூசைசெய்த பரம்பொருள் திரும்ப வந்தமர்ந்ததே
சாந்திஸ்தவம்
ஒம்சாந்தி என்று சொல்லும் ஓம்கார உபாசரே
உம்மனத்தில் சாந்தி வந்தால் ஊரெல்லாம் சாந்தியே
நம்மைதான் நமக்குளே நாம் செய்தோம் பூசையை
கம்மென்று இருப்பதுதான் கடவுளரின் பூசையாம்
குலத்தினது ஈசரை கும்பிடும் உபாசரே
உலகமிது உமக்குள்ளே உருண்டு வருவதறிவீரே
உலகமிது உம்முளே சுழல்வதை உணர்ந்திடின்
திலகமிடும் உபாசரும் திரிபுரையாய் தெரிவரே
நான்கான வாக்கியம் நாவில் கொண்ட உபாசரே
நான்நான் எனஸ்புரிக்கும் நாதமே உபாசனை
என்னை என்னில் பூசை செய்து ஏகாந்தம் இருப்பதே
அன்னை அவள் பூசையாம் அதுவேதான் சமாதியாம்.
(ஸ்ரீ குருவருல்ளால் ஆக்கியது : நாகசுந்தரம்)