ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 3

ஜயசக்தி
ஆன்மபோதம் – 35 *புழுவண்டாதல்*

எல்லா விதங்களிலும் ஆத்மாவே தெரியும் நிலைக்கு நாம் ஆட்படவேணுமானால் நமது அப்யாசங்களை தொடரவேணும் என்பதை உறுதி செய்யவேணும். இடையில் இதற்கு ஒரு பழைய 100 ஆண்டு கால ஆத்மபோதநூல் பாடலில் கண்டவாறு சில விளக்கங்களை இங்கு சொல்லுகிறேன்.
அக்ஞான காரியங்களான வாஸனைகளினாலே கலங்கியிருக்கிற ஜீவனை ஆத்மஞானமானது வெகு காலபயிற்சியினாலே முன்புள்ள அக்ஞானத்தை தொலைத்துவிட்டு அதன் வழியே அந்த அக்ஞானகாரியங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாவற்றையும் அழித்துவிடும். கலங்கின ஜலத்தை தெளிவிக்கும் தேத்தாம்கொட்டை போல், தானும் நசித்துவிடும் என்று ஒரு உதாரணம் சொல்கிறார்.
தேத்தாம்கொட்டை என்பது இக்கால இளைஞர்களுக்கு தெரியாது. ஏன், பெண்களுக்குக்கூட புதிதுதான். பார்வைக்கு புளியங்கோட்டை போல இருக்கும். பெண்கள் முற்காலத்தில் ஆற்றுநீர், கிணற்றுநீர், குளத்துநீர் என்று எடுத்து வருவார்கள். (எல்லா நீர்நிலைகளிலும் தண்ணீர் நிறைய நிறைந்திருந்த காலம் அது) அது சிலசமயம் கலங்கி இருக்கும். அதில் இந்த தேத்தாம்கொட்டையை போட்டுவைத்தால் சுமார் இரண்டு மணிநேரம் கழித்து பார்த்தால் நீர் தெளிந்துவிடும். அதில் போட்ட தேத்தாம்கொட்டையும் காணாமல் போயிருக்கும். இதுபோல் விருத்தியானது அக்ஞான காரியங்களாக இருப்பதாலும் அந்த விருத்தியில் பிரதிபிம்பித்த ஞானம் ஆத்மபாசமான படியினாலும் அந்தஞானமும் ஆத்மாவிடத்கில் தானே ஐக்கியத்தை அடையும். அதாவது ஞானம் என்ற ஒரு நினைவும் விஷயமுமே சுத்தமாக போய்விடும்.
அந்த நூலிலேயே மேலும் ஒரு பாடல் வருகிறது..

சொற்பனம் போல்வதன்றோ தொடரும் ராகத்வேஷாதி
பற்று ஸம்ஸாரந்தான் பார்க்கினக்ஞானகால
முற்றுஞ்சத்தியமாத்தோன்று மோகந்தீர்ப்ரபோத காலம்
உற்ற நித்திரை தெளிந்தாலொழி கனா ஜகம்போற் பொய்யாம்

ராகம், த்வேஷம் இவைகளினாலே நிறைந்த ஸம்ஸாரமானது பொய்யாயிருந்த போதும் தனக்கு காரணமான அக்ஞானமிருக்குமளவில் உண்மையாயிருந்து பின்பு மஹாவாக்கிய அர்த்த சிரவணத்தை முன்னிட்டு உண்டான பிரஹ்மஸாக்ஷாத்கார திசையிலே நித்திரை தெளிந்த உடனே ஸ்வப்னஉலகம் பொய்யாவதுபோல அசத்தியமாக போய்விடும்.
அதிலேயே வந்த மற்றொரு பாடலில் சொன்ன ஒரு உதாரணம் மட்டும் இங்கே பார்க்கிறோம்.
எப்படி கிளிஞ்சலில் தோன்றிய வெள்ளி என்ற ஞானமானது அதிஷ்டான கிளிஞ்சலில் (அதனுடைய கருத்த பின்புறமும், முக்கோணம் முதலானதூம்) விசேஷ ஞானம் வராதவரை ஸத்தியமாக இருந்தது. விசேஷஞானம் வந்தவுடன் ஆரோபிதமான உலகஅறிவு அஸத்தியமாக போய்விடும். முதலில் சொன்னவாறு ஞானமும் ஐக்கியமான பின் மிஞ்சுவது என்ன! ஒன்றுமில்லை. அதுதான் ஜீவன் முக்திஸ்திதி. கொஞ்ச கொஞ்சமாக நாம் அந்தநிலையை எட்டி வருகிறோம். (வெறும் பாடம் – படிப்பு என்ற அளவில் மட்டுமே! நிறைய பயிற்சி தேவை)
மேலே சங்கரரை தொடருவோம்…..

ஜீவன்முக்தஸ்து தத்வித்வான்பூர்வாபாதிகுணான் ச த்யஜேத் |
ஸச்சிதானந்தரூபத்வாத் பவேத்ப்ரமரகீடவத் ||

சீவன் முக்தன் வித்வான் தேரு அதன் முன் தன்னை
மேவும் உபாதி குணம் விட்டு உடனே – மேவுவான்
தன்னுரு சத்சித்தின்பை தான்கீடம் வண்டின் உருத்
தன்னையுறல் போலத் தரி.

தனது உண்மை சொரூபத்தை உணர்ந்து ஜீவன்முக்தனான சிறப்பை அடைந்தவன், தனக்கு முன்பு இருந்த தேகம், மனம், புத்தி போன்ற உபாதிகளையும், ஸத்வ-ரஜ-தமோ குணங்களையும் நீக்கிவிட்டுத் தன் உண்மை ஸ்வரூபமான ஸச்சிதானந்த நிலையை அடைகிறான். வண்டினால் கொட்டப்பட்ட புழுவானது வண்டாகவே ஆவதுபோல உனது உண்மை நிலையில் நீ இருப்பாய்.

இதன் விரிபொருள்
ஸ்தூலமான நம் உடலும், மெலினமான நம் மனம், புத்தி போன்றவைகளும் நமது பாவனைகளாலும், எண்ணங்களாலும், செயல்களாலும் நாமே வரவழைத்துக் கொண்டதுதான். நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகின்றாய் என்பதால் “பிரஹ்மத்தையே ஸதா நினைத்துக் கொண்டிருப்பவன் பிரஹ்மமாகவே ஆகிவிடுகின்றான்” என்றாகிறது. இங்கு வேதஉபநிஷத் வாக்கியத்தையே சங்கரர் மற்றும் பகவான் இருவருமே சுட்டிக்காட்டுகிறார்கள்.
வண்டு தன்னை வந்து கொட்டுமே என்று வண்டைப் பற்றியே ஸதா நினைத்துக் கொண்டேயிருக்கும். ஆனால் அந்த வண்டு வந்துவந்து கொட்டுவதால் மட்டுமல்லாமல் புழு தன் ததேகசிந்தனையினாலுமே (அதே நினைவினாலே) வண்டாகவே மாறி விடுகிறது என்பதை இங்கு உவமையாக காட்டுகிறார்..
இதேபோல மனிதன் தன் மனம், புத்தி இவைகளின் துணைகொண்டு மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனித்தே காட்டும் தன் தேகத்தை ஒரு பொருட்டாக நினைக்காது, ஸதாசர்வகாலமும் ஆன்மாவைப் பற்றியே சிந்தித்து, அதையே த்யானித்து, அந்தப் பாவனையில் விடாப்பிடியாய் இருந்தால், வண்டால் பலமுறை கொட்டப்பட்ட புழு அதையே நினைத்து தானும் வண்டாகவே ஆனதுபோல இவனும் தன் ஆன்ம ஸ்வரூபத்தை நிச்சயம் உணர்வான்.
அந்த நிலையை ஒருவன் அடைவது என்பது அவனது வாழ்நாளின் இறுதியிலோ அல்லது இனி வரப்போகும் பிறவியிலோ என்பது அவசியமில்லை. இந்தப் பிறவியிலேயே அவனது உயிர் இருக்கும்போதே அது முடியும் என்பதைக் உறுதிசெய்ய *ஜீவன்முக்தன்* ஆகிவிடுறான் என்று சொல்கிறார்.
ராமகிருஷ்ணபரமஹம்ஸர் பகவான்ரமணமஹரிஷி, நமது காஞ்சிஸ்ரீபெரியவா போன்றவர்கள் இந்த யுகத்தில் நம் காலத்தில் நாம் நன்கறிந்த ஜீவன்முக்தர்கள் அல்லவா!
ஒருவன் படிக்கும்போது அதை ஞாபகத்தில் இருத்திக்கொள்ள திரும்பத் திரும்பப் படிப்பதும், படித்ததைச் சொல்லிப் பார்ப்பதும், படித்ததைச் சிந்தித்துப் பார்ப்பதும் போன்ற லோக அப்யாசங்கள்தான் ஆன்மீகஸாதனையிலும் முன்னேறு வதற்குமான வழிகள் என்று புரிகிறது.
முன்னது வெளிப்பார்வை கொண்டு செய்யப்படுவது, பின்னது சிந்திப்பது என்பது உட்பார்வை கொண்டு சிந்திக்க வேண்டியது.
முதலில் காணப்படும் இந்த தேகத்தை பொருட்படுத்தாமல் இருக்கணும்.
முன்பே சொன்னேன், பகவான் ரமணர் ஆபரேஷனுக்கு முன் “மயக்கமருந்து அவசியமில்லை, இந்த தேகம்கட்டை போன்றதுதான், அதைத் தாராளமாகக் கத்தி கொண்டு அறுக்கலாம்” என்று சொன்னதாத படிதிருக்கிறோம். எல்லா ஸாதகர்களுக்கும் இப்படி முடியுமா என்று கேட்டால் அது எல்லோருக்கும் முடியாத விஷயம் என்பது நடைமுறை. ஆனாலும் உலகியல் வாழ்க்கையில் அவசியத் தேவை என்கிறபோது ஒருவன் தன் தேகநிலையைப் பொருட்படுத்தாது கூட தன் கடமையைச் செய்துமுடிக்கிறான் என்பது நாம் அனுபவமாக பார்க்கிறோம். இதுபோன்ற மனநிலை ஸாதகனுக்கு முதலில் இருந்தால் பழகப் பழக தனக்கு தேகம் இருப்பதும் தெரியாமல் போகும். பகவானுக்கு ஆபரஷன் முடிந்ததும், “தங்களுக்கு வலியே இல்லையா?” என்று கேட்டவருக்கு “அதற்கென்ன, வலி இல்லாமல் போகுமா என்ன, அது பாட்டுக்கு இருக்கு” என்று சொன்னார்களாம் பகவான். அத்தகைய வலிபொருட்படுத்தாத மனோநிலை நமக்கு வேண்டும். அது மனதாலேயே தேகத்தைக் கட்டுப்படுத்துவது. மனஸை தனியாக வைத்து “நானை” தனியாக வைத்து பார்த்திருக்கிறார்.
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற மஹான் இருந்து இப்படி ஒரு அனுபவம் இருந்திருந்தால் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. நமது அதிர்ஷ்டம் பாருங்கள். நமது பாக்கியம் வெறும் நூல் வாயிலாக தெரிந்துகொள்ளாமல் தங்கள் அனுபவம் மூலமாக நம் காலத்தில் நம் கண் எதிரே தேகபற்றை நீக்கி ஜீவன்முக்த நிலையை வாழ்ந்து காட்டிய பகவான் ரமணமஹரிஷி, பரமஹம்ஸர், பெரியவா போன்றவர்களை அடைந்தது எத்தனை பாக்கியம்.
இதுபோல எது வேண்டுமோ அதைப்பற்றி மட்டுமே நினைக்கவேணும்.
அடுத்து புத்தியால் அலைபாயும் மனத்தையும், ஆன்மாவைப் பற்றிய ஒரே ஒரு சிந்தனையை வைக்கவேணும். பின் கூர்மையான புத்தியையும் கட்டுப்படுத்துவது என்ற நிலையை அடையவேணும். இப்படி ஒவ்வொன்றாக சிந்தித்து செயல் படவேணும். எவ்வளவுக்கு எவ்வளவு நமது சிந்தனைகள் ஆழமாகப் பாய்ந்து நமக்குள்ளே வாஸனைகளைத் கொண்டுவருகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவைகளை விடுவிக்க நமது அப்யாசங்களும், முயற்சிகளும் தேவைப்படும். அதற்காகவே ஏற்பட்டது நமது ஸ்ரீவித்யை. இதில் உபதேசம் தொடங்கி, ஜபம், பூஜை, நியாசம், பாராயணம், ஹோமம் என்றபடி ஒவ்வொரு நிலையிலும் இந்த ஜீவன்முக்த நிலைக்கு நம்மை குருநாதர் அழைத்து செல்கிறார். நாமும் இந்த ஜீவன்முக்தநிலையை லக்ஷ்யமாக வைத்தே ஸாதனையை செய்ய வேணும்.
“இந்த உபாஸனை நமது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை நீக்கவோ, இன்னொருவரை மகிழ்விக்கவோ, படாடோப பூஜை-ஜபம் செய்து பிறரை மலைக்க செய்யவோ இல்லவே இல்லை.”
இதை உணர்ந்து உங்கள் உபாஸனையை தொடருங்கள். இதுபற்றி நிறைய சிதானந்தஅலையில் உள்ளன. எதிலும் போலவே இதிலும் விடாமுயற்சி வேண்டும்.
இறுதியில் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உபாதிகள் அகல, நல்லது-கெட்டது போன்ற எதனையும் அலசிக் காணும் குணங்களும் நம்மை விட்டொழிய வேணும். ஆன்மாவைப் பற்றிய சிந்தனை ஒன்றினால் மட்டுமே ஆன்மாவாகவே அமர்ந்திருக்கும் நமது இயல்பான நிலை நமக்கு நிச்சயம் வந்தடையும். ஆனாலும்கூட அது நமக்கு புதியதாக வந்துள்ள நிலை அல்ல என்பதை அதை அனுபவிக்கும் ஆன்றோர்கள் நமக்குக் சுட்டிக்காட்டி அருளுகின்றனர்.
தொடருவோம்……

ஆன்மபோதம் – 36 *மோஹக்கடலும்-ஞானியின் நிலையும்*

இன்று ஒரு மஹாத்மாவின் ஜயந்தி! நாமும் இங்கே பல மஹாத்மாக்களைபற்றி பார்த்து வருகிறோம்.
நேற்று பலர் உங்கள் பக்திமிகுதியினாலும், அன்பினாலும், உங்கள் குருவை ஜீவன்முக்தாராக போற்றினீர்கள். இது உங்கள் நிலையில் சரியாக இருக்கலாம். குரு என்பவர் அப்படித்தான் இருக்கவேணும். ஆனால் நான் இன்னும் ஸாதகனே! ஆதலால் நானும் உங்களுடன் சேர்ந்தே இந்த பாடம் படிக்கிறேன். ஆனால் உண்மையான ஜீவன்முக்தர்கள் பற்றி நேற்று சொன்னேன். அவர்களெல்லாம் முன்பு இருந்தவர்கள். அதன் தொடர்ச்சியாக இன்று சில சொந்த, பிரத்யக்ஷ அனுபவ சிந்தனைகள் சொல்கிறேன். உண்மையான *ஜீவன்முக்தர்* இவரே! இது மிகையில்லை.
இங்கு உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். யார் தெரியுமா? உங்களுக்கு நன்றாக தெரித்தவர்கள் தான். நமது *ஸ்ரீகாமேஸ்வரிமாதாவே*! அவள் உடல் நலிவடைந்த நேரம். உடம்பிலோ தாங்கமுடியாத வலி உபத்ரவம். நித்தியபடி குடும்ப காரியங்களை பற்றியோ, அல்லது எதிர்காலம் பற்றியோ எந்தவிதமான பேச்சும் இல்லை. அவளுக்கு வலி இருப்பது எங்களால் உணர முடிந்ததே தவிர அவளுக்கு எங்கே-எப்படி வலிக்கிறது என்று ஒருநாள் ஒருபொழுதுகூட சொன்னவளில்லை. (இதனை நம்மில் குடும்பத்தார் தவிர சிலர் கூட இருந்தவர்கள். பார்த்தவர்கள் உண்டு.. மிகையாக நான் சொல்லவில்லை.)
ஆனால் டாக்டர் கொடுத்த பல நிறங்கள் கொண்ட மாத்திரைகள் கண்டிப்பா சாப்பிடுவாள். காலை 5, மதியம் 5, மாலை 3 எனவும் சாப்பிடவேணும். காலை 5 ஐ கையில் எடுப்பாள். அப்படியே வாயில் மொத்தமாக போட்டுக்கொண்டு விடுவாள். அப்போது சொல்லுவாள் – *நீங்க ஆவரணபூஜை செய்வேளே! அப்ப ஒவ்வொரு ஆவரணத்துக்கும் ஒவ்வொரு கலர்லே புஷ்பம் வேணும்னு சொல்லி வாங்கி செய்வேளே! அப்படி இருக்கோனோ இந்த மாத்திரைகள். கலர் கலரா.* என்று இப்படி சொன்னாள். மாத்திரை சாப்பிடுவதையே ஆவரண பூஜையாக செய்திருக்கிறாள். Chemotherapy Treatment நடக்கிறது. அப்போது மெஷின் உள்ளே போகும்போதும் சண்டி ஜபம் தான். வெளியே வரும்போது நான் பார்ப்பேன். ஜபம் வாயிலே மௌனமாக ஓடிக்கொண்டிருந்ததை பார்த்தவன் நான். ஒருநாள் அவளது சகோதரன் ஸ்ரீகிருத்திவாசன் “அக்கா ! உனக்குத்தான் நிறைய ஜபம் தெரியுமே! பண்ணேன்” என்று சொன்னதிற்கு உடனே இவள் *நா ஜபம் நிறைய பண்ணிட்டேன். நீ பண்ணு* அப்படின்னாள். யாரால் இம்மாதிரி ஸாதனை பண்ணிவிட்டேன் என்று தீர்மானமாக சொல்லமுடியும்.? ஸாதனையா இது? இல்லை. கீதை சொல்லும் யோகநிலை, உபநிஷத் சொல்லும் ஸகஜஸ்திதி, மற்றும் சங்கரர்-ரமணபகவான் சொல்லும் முக்தநிலை, சாரதாமணி தேவியின் அனுபவநிலை என்றெல்லாம் இங்கே நாம் சிந்திக்கிறோமே அதுதானே இது! அப்படிபட்ட ஒரு ஞானிக்கு சேவை செய்த பாக்கியமோ என்னவோ, இந்தநிலையில் என்னால் சிந்தித்து எழுத முடிகிறது. இப்படியெல்லாம் இருக்கவேணுமானால் உலகஆசை, இன்பம் எல்லாம் கடந்தவர்களால் தான் ஸாத்யம். இந்த ஆசை அல்லது மோஹம் என்பதை எப்படி கடப்பது என்பதையே சங்கரர் இங்கே மேலே தொடருகிறார். நம்ம கதைக்கு வருவோம்….

தீர்த்வா மோஹார்ணவம் ஹத்வா ராகத்வேஷாதிராக்ஷஸான் |
யோகீ சாந்தி ஸமாயுக்த ஆத்மாராமோ விராஜதே ||

மோகக் கடல் கடந்து மூளாசை கோபமுதல்
ஆகும் அரக்கர் அறக்கொன்று – யோகி
அமைதியொடு கூடி ஆன்மாவின் இன்பத்து
அமைந்து ஒளிர்வன் என்றே அறி

மோஹம் என்ற பெருங்கடலைத் தாண்டிவந்து மூண்டு எழுகின்ற ஆசை, கோபம் முதலான அரக்கர்களை முற்றிலுமாக ஒழித்து, யோகியானவன் அமைதியுடன் ஆன்மாவிடத்தில் ஒன்றி ஆனந்தத்தை அடைந்தவனாகி ஒளி வீசுபவனாய் இருப்பான் என்பதைத் தெரிந்துகொள்.
இதன் விரிபொருள்

இந்த ஸ்லோகத்தில் “ஆத்மாராம:” என்ற வாக்கியம் சொல்கிறார். “ஆன்மாவிலேயே திளைத்து இன்புற்று” என்ற பொருளில் இங்கே வருகிறது. இங்கே எனக்கு ஒன்று தோன்றுகிறது “ராம:” என்று வந்திருப்பதால் இந்த ஸ்லோகம் அத்யாத்மராமாயணம் என்றதில் தத்வார்த்தமாக ராமாயணநிகழ்ச்சிகளை சொல்வதாக தெரிகிறது. இப்படியும் சில ஆன்றோர்கள் பொருள் சொல்லுவார்கள். அதாவது ராமன் ஸீதையை இழந்து தவிப்பது போல ஜீவனும் சாந்தியை இழந்து தவிக்கிறான் என்ற உருவகப்படுத்துகிறார்கள்.
அதன்படி விருப்பு-வெறுப்பு எனும் வாஸனைகளாகிய அசுரர்களினால் மோகம் எனும் கடலின் நடுவிலே சாந்தி எனும் சீதை சிறை வைக்கப்படுகிறாள். அப்போது தொலைந்து போன ஸீதையின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த ஹனுமார் போல, குரு வடிவில் ஒருவர் சாந்தியை அடைவதற்கு உரிய வழியைக் காட்டுகிறார்.
அந்த வழிகாட்டுதலின் படி, ஜீவனாகிய ராமன் தியான யோகபயிற்சிகள் என்ற பாலத்தின் துணையினால் மோஹம் என்ற அக்ஞானக்கடலைத்தாண்டி வருகிறான். சிறை வைக்கப்பட்டுள்ள அமைதி என்ற ஸீதையை ஆன்மவிசாரம் எனும் ராமபாணத்தினால் வாஸநைகள் என்ற அரக்கர்களிடமிருந்து தப்பிக்கவைக்கிறான். அமைதியுடன் தன் இயல்பான இடமான (யுத்த்மில்லாத இடம்) அயோத்தியை அடைகிறான். பின் ஆனந்தமாய் இருந்தான் என்றும் இதற்கு தத்துவமாக அர்த்தம் செய்யலாம்.
முன்னும் பின்னுமாக இங்கே ஜீவன்முக்தனின் லக்ஷ்ணங்களையே விவரமாக சொல்கிறார். வெளியுலக விஷயங்களில் ஆசைகளை வளர்த்துக்கொண்டு, அதனால் பெருகி வரும் ஸம்ஸார வினைக்கடலில் மூழ்கியுள்ள ஜீவன், தன் மன அமைதியை இழக்கிறான். ஆனாலும் அவன் என்றோ செய்த நல்வினைப் பயனாக, அவனுக்கு வழிகாட்ட ஒரு *ஸத்குரு* அமைகிறார். அவர் சொல்படி அவன் முயற்சிகள் எடுக்க, அவனது மனம் ஆன்மாவுடன் ஒன்றுபடுவதே *யோகம்* எனப்படுகிறது. அப்படிப் பண்பட்ட மனம் வெறும் மனோலயத்தோடு நின்று விடாது. ஆன்ம விசாரத்தினால் *மனம் என்று ஒரு பொருளேயில்லை* என்று பகவான்ரமணர் சொல்வதுபோல மனோநாசமாகி, ஆத்மானுபவத்திலே திளைத்து ஆனந்தமயமாய் இருப்பதே *முக்திநிலை* என்று சொல்லப்படுக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது பழமொழி. இப்படி ஆத்மானந்தமாய் இருப்பவன் ஆன்மாவினுடைய தன்மையால் எப்போதும் ஒளி வீசிக்கொண்டு பிரகாசமாக இருப்பான். என்று முடிக்கிறார். தொடர்ந்து அவன் நிறைககுடமாக இருப்பான் என்று தொடருகிறார்.

பாஹ்யாநித்யசுகாஸகிதம் ஹித்வாத்மசுகநிர்வ்ருதஹ |
கடஸ்ததீபவத் ஸ்வஸ்தம் ஸ்வாந்தரேவ பிரகாசதே ||

அனித்த வெளி இன்பிச்சை அற்றானாய் ஆன்மா
தன் இன்பில் திருத்தி தனையுற்று – அனிசமும்
தன்னொளியால் குடந்தன்னுள் விளக்கெனத்
தன்னுளே தான் ஒளிர்வன்தான்

தனக்கு வெளியே உள்ள பொருட்களினால் வரும் நிலையற்ற இன்பங்களில் ஆசை இல்லாதவனாய், ஆன்மானுபவத்தினால் வரும் இன்பம் ஒன்றிலேயே திருப்தி அடைபவனாய் இருந்து, குடத்துக்குள் இருக்கும் விளக்கைப் போல, அவன் எப்போதும் தனக்குள்ளே தானாய்ப் பிரகாசிப்பவன்.

இதன் விரிபொருள்

யஜுர்வேத தைத்ரீயோபனிஷத் என்பதில் ஆனந்தங்களை வரிசைப்படுத்தி சொல்லப்படுகிறது. மனிதர்கள் அனுபவிக்கும் ஸூகங்களிலேயே உயர்வானது அரசசுகம். அதாவது மனிதஆனந்தம். அதையும் விட உயர்ந்ததாக கந்தர்வஆனந்தம். அதற்கும் மேலாக தேவானந்தம். இவ்வாறு படிப்படியாக வந்து இறுதியில் *ப்ருஹ்மானந்தம்* என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தப் ப்ருஹ்மானந்தமோ பரமானந்தக்கடலின் ஒரு துளிக்கு மட்டுமே ஸமம் என்றும், ஆத்மாவை உணர்ந்தவனின் ஆனந்தம் அந்த பரமானந்தக்கடலுக்கே ஸமம் என்றும், அதனை எல்லாவற்றிலும் உயர்ந்ததாக அங்கே சொல்லப்படுகின்றன. மனிதனின் வெளிப்பார்வையால் அடையப்படுக்கிற உலகவிஷயஇன்பத்திற்கும், உள்முகப் பார்வையால் அடையப்பெறும் ஆத்மஞானத்தால் வரும் ஆனந்தத்திற்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் இது.
இவ்வாறு வெளியுலக விஷயங்களில் மூழ்குவது என்பது ஒரு டிவி சீரியல் அல்லது ஸினிமா பார்ப்பது மாதிரியே!. அங்கு சீன்கள் நகர்ந்து கொண்டே இருக்கும்வரைதான் ஒருவனுக்கு அதில் ஈடுபாடு இருக்கும். அதில் இன்பமும் வரும்; துன்பமும் வரும். அதனால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பதையே வாழ்க்கையின் போக்கு என்று சொல்லி, அதை அனுபவிப்பதே வாழ்வின் இலக்கு என்றுதான் பலரும் நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இங்கே சீன்கள் தோறும் திரையோ, டிவி ஸ்‌கிரீனோ இல்லையானால், மற்றெதெல்லாம் இருந்தும், இங்கு காணும் காக்ஷி இல்லை என்ற உண்மையை யார் தீர்மானமாக உணர்ந்துள்ளானோ அவனே ஞானி. வெறும் காக்ஷியை மட்டும் கண்டு களித்துக் கொண்டிருப்பவன் அக்ஞானிதான்.
அப்படிப்பட்ட ஞானியின் ஆனந்தத்தை (பார்ப்பவர்கள்) உணரமுடியாது. ஏனென்றால் அது குடத்துக்குள் வைத்த விளக்கு போல ஆடாது-அசையாது ஒளி விட்டுக்கொண்டிருக்கும். அது வெளியே தெரியாது. அவனால் அந்த ஆனந்த நிலையைப் பற்றி ஓரளவுக்கு சொல்ல முடிந்தாலும், அதன் முழு பரிமாணத்தையும் விளக்க முடியாது. அவனது வாழ்க்கை முறை, செய்கைகள், மற்றும் பேச்சுக்கள், நடைமுறைகள் இவைகளைக்கொண்டுதான் அதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும். இன்று நிறைய எழுதிவிட்டேன்.
நாளை தொடரும்……

ஆத்மபோதம் – 37 *ஞானியின் நிலை*

ஞானியின் நிலைபற்றி சிந்தித்து வருகிறோம். இதுபற்றி சங்கரரின் பஜகோவிந்தத்தில் உள்ள ஸ்லோகத்தின் பொருளை சிந்திப்போம்.
ஸத்துக்களுடைய (புண்ணியாத்மாக்கள்) ஸங்கம் கிடைத்தால் பந்த பாசத்திலிருந்து விடுதலை கிடைக்கும். பந்தபாசவிடுதலை நம்மை மோஹத்திலிருந்து (மாயை) விடுபட செய்யும். மோஹம் அதாவது ஆசை அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும். ஸ்திரமான வஸ்து விளங்கினால் அதுவே *ஜீவன்முக்தி* நிலை. இப்போது அந்த ஸ்லோகம் படிப்போம்..

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம், நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம், நிச்சல தத்வே ஜீவன் முக்தி:

ஆத்மவிசாரம் செய்ய நமக்கு ஒரு வழிகாட்டி வேண்டும். அதுதான் ஸத்துக்களுடைய ஸங்கம். ஸத்துக்கள் என்றால் நம்மைப்பொருத்தவரை நமது குருநாதர் தான். (இதுபற்றி அருட்சக்தியின் தனி கட்டுரை உள்ளது)
உபாஸகதர்மம் என்ன சொல்கிறது? குருவுடனேயே அவருக்கு பணிவிடை செய்துகொண்டு இரு என்கிறது. அதுதான் ஸத்ஸங்கம். குருசேவையின் மகிமை பற்றி தத்தாத்ரேயர் சம்பந்தப்பட்ட ஒரு கதை உங்களுக்கு முன்பே சொல்லி இருக்கிறேன். இப்படி நல்வழியில் செல்லும் ஞானிகலோடு கொண்டிருந்தால் அவர்கள் நமக்கு நல்வழிகாட்டுகிறார்கள். அப்படி அவர்கள் வழியில் சென்றால், பந்தபாசங்கள் ஒழியும். அதுஎப்படி? மேலே சொல்லப்பட்ட ஆத்மவிசார பாதையில் செல்ல அவர்கள் நமக்கு உதவுவார்கள். இவ்வாறு ஆத்மவிசாரம் செய்தால் மோஹம் (Illusion) அகலும். அதாவது மாயை என்பது காணாமல் போய்விடும். அதாவது ஞானம் உதயமாகும். அப்படி மாயையும் போய் ஆத்மஞானம் வந்தால் ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து *நான்* (Self) நமக்கு புலப்படும். அப்படி புலப்பட்டால் அதுவே நமக்கு மன அமைதியை தந்து இந்த உடல் இருக்கும்போதே ஜீவன்முக்த நிலையைத்தரும். இதைத்தான் ஸ்ரீரமணபகவான் (Self-Realization) *நான்யார்* என சொல்லுவார்கள். இதையே திருப்புகழ் “ஸ்வானுபூதி” என்கிறது. முன்பே உங்களுக்கு பலமுறை சொன்னதுதான். மறுபடியும் சொல்கிறேன். *லலிதா ஒரு இன்பக்கலப்பு* என்ற நூலில் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் சொன்ன “நான் என்கிற-லலிதாவின் பொருள்” இதுதான். இதைத்தான் ஆத்மஸாக்ஷாத்காரம் என்று வேதாந்தம் சொல்கிறது. *லலிதானந்தம்* என்று நான் சொல்கிறேன். அதாவது தன்னை தானே அறிந்துகொள்வது. இதுதான் நம்முடைய வாழ்க்கை லக்ஷியம்.
மேலும் தொடர்ந்து ஞானிகள் பற்றி சங்கரர் சொல்வதை பார்ப்போம்….

உபாதிஸ்தோபி தத்தர்மைரலிப்தோ வ்யோமவன்முனி: |
ஸர்வவின்மூடவதிஷ்டேதஸ்கதோ வாயுவச்சரேத் ||

உபாதி உற்றானேனும் ஒட்டா விண்போல அவ்
வுபாதி தர்மங்களோடு ஒட்டான் – உபாதியிலான்
முற்றறிவன் ஏனும் முனி மூடன் என வாயுபோல்
பற்றற்றுச் சஞ்சரிப்பான்

ஞானி உபாதிகளுடன் இருந்தாலும், ஆகாயம் எதனாலும் பாதிக்கப்படாது இருப்பது மாதிரி, ஞானியும் உபாதியின் தன்மைகளோடு ஒட்டாமல் இருப்பான். அவன் உபாதிகள் இல்லாதிருந்தால், முற்றும் உணர்ந்த முனிவனாயினும் மூடனைப் போலவும், காற்றைப் போலவும் எதனிலும் பற்றில்லாமல் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருப்பான்.

இதன் விரிபொருள்

ஆத்மஞானம் அடைந்தவன் எப்போதும் ஆனந்தமாய் இருப்பான் என்றும், அது பொருட்களின் சேர்க்கையால் ஒருவனுக்கு ஸாதாரணமாக வரும் இன்பத்தைவிட வேறானது என்று முன்பு நாம் பார்த்தோம். மற்றவர்களைப் போலவே ஞானியும் உலக வாழ்க்கையில் இயல்பாக ஈடுபடுவதைப் பார்க்கிறோமே, அப்படியென்றால் அவனுக்கும் மனம், புத்தி போன்றவைகள் எல்லோருக்கும் இருப்பது போலத்தானா என்ற சந்தேகம் வருகிறதே! அதுக்கு இங்கே பதில் கொடுக்கிறார் சங்கரர்.
இவ்வுலகில் பிறந்துவிட்டான் என்பதால் ஞானிக்கும் மற்றவர்களைப் போலவே தேகம் இருக்கிறது என்பது தவிர, மற்றவர்களைப் போலவே மனமும், புத்தியும் இயங்குகிறது. ஆனாலும் மற்றவர்கள் மனமும் புத்தியுமே தான் என்று தன்னைப் பற்றிக் கருதுவது போல ஞானி தன்னை அவ்வாறு குறுக்கிக் கொள்ளமாட்டான். மேலும் அவனுடைய தேகம் என்பதுகூட மற்றவர்கள் பார்வைக்கு இருந்தாலும், அவனைப் பொருத்தவரை அவன் தன்னை தேகம் என்றும் நினைக்கமாட்டான். அதனால் அவனது உடலுக்கு ஏது நேர்ந்தாலும் ஏதோ வேறு ஒரு பொருளுக்கு அது தனக்கு அன்னியமாக நடப்பது போலவே அவனுக்கு உணர்வு இருக்கும். அதைப் போலவே அவனது மனமும், புத்தியும் இயங்கும். குழந்தைகள் எப்படி வெகுளித்தனமாகப் பேசி எல்லோரையும் மகிழ்விக்கின்றனரோ, அதே போல ஞானியின் பேச்சும் செயல்களும் இருந்தாலும், அவனது பேச்சு மற்றும் செய்கைகளில் ஒரு முதிர்ச்சியும் இருக்கும். ஆனாலும் குழந்தைகள் எப்படி தனது செயல்களின் விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லையோ, அதே போன்ற மனநிலைதான் ஞானிக்கும் இருக்கும். அவனுக்கு இருப்பதெல்லாம் தனது இருப்பு (ஸத்) என்ற உணர்வு ஒன்று மட்டுமே. மற்றதையெல்லாம் அவன் ஒரு சாக்ஷியாக மட்டுமே, எவருக்கோ நடப்பது போலப் பார்த்துக் கொண்டிருப்பான்.
முன்பு வேறொரு ஸ்லோகத்தில் நாம் பார்த்தது போல, எப்படி எல்லாவற்றிலும் ஆகாயம் பரவிவிரிந்து இருந்தாலும் அதில் இருக்கும் பொருட்களின் குணத்தால் பாதிக்கப்படுவது இல்லையோ, அதேபோல ஞானி உபாதிகளுடன் இருந்தாலும் அவைகளின் குணத் தன்மைகளால் அவன் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்திலே, மற்ற நான்கு பூதங்களான மண், நீர், நெருப்பு, வாயு இருந்தாலும் எப்படி ஆகாயம் பாதிக்கப்படுவது இல்லையோ, அதேபோல ஞானியும் உபாதிகள் இருந்தாலும் அவைகளால் பாதிக்கப்படுவது இல்லை. அவனுக்கு உபாதிகள் இருப்பதுபோல நமக்குத் தெரிகிறது என்பதுதான் வெளியே புலப்படாத ஓர் உண்மை. வலிக்கறது மாதிரி முகத்தை வைத்துகொள்ளுவார்கள். ஆனால் வலி உணர்வு அவர்களை பாதிக்காது.
உபாதிகள் இன்று ஞானிக்கு இருப்பதுபோலத் தோன்றினாலும் அவை மறுநாளும் இதேபோல் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. ஒரேயடியாக ஞானிக்கு எப்போதுமே உபாதிகள் இல்லாமலும் போகலாம். அப்படியிருந்தால் அவன் காற்று எங்கும் பரவி, விரிந்து இருப்பதுபோல எந்த இடத்திலும் நில்லாமல் அலைந்து கொண்டிருப்பான். அதனையே “சித்தம்போக்கு, சிவம்போக்கு” என்று சொல்வது. அதாவது அந்த நிமிடத்தில் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி நடப்பார்கள் என்பதுதான் அதில் நாம் காணவேண்டியது. குண விசேஷங்கள் ஏதும் அவனுக்கு அப்போது வெளிப்படையாகவும் இல்லாதபடியால் அவனது செய்கையும் புரியாத புதிராக இருக்கும். கிட்டத்தட்ட அவனது செய்கைகள் ஒரு பைத்தியம் போலவே இருக்கும். இதற்கு திருவண்ணாமலையில் இருந்த ஸ்ரீசேஷாத்ரிஸ்வாமிகளே சான்று. தன்னுடைய தேகத்தை விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர், “இந்த சட்டை கிழிந்துவிட்டது, தூக்கிபோடணும்” அப்படின்னாராம். இது எதனால், தேகத்தை அவர் தனக்கு அன்னியமாக வைக்கமுடிந்திருக்கிறது நமது சட்டையை போல. மேலும் ஞானிக்கு பிராரப்தம் எனச் சொல்லப்படும் ஊழ்வினை மீதம் இருப்பதால் மட்டுமே அவன் தேகம் எடுத்து வந்திருக்கிறான் என்று காரணம் சிலர் சொல்லுவார்கள். அதனால், நம்மைப் பொருத்தவரை, நாம் ஞானியைப் பார்க்கும் பிராரப்தம்-அதிர்ஷ்டம் நமக்கு இருக்கிறது என்று வேணுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஞானியைப் பொருத்தவரை பிராரப்தம் மட்டும் அல்ல, ஸஞ்சிதம், ஆகாமியம் என்று சொல்லப்படும் மற்ற இருவினைகள் கூட அவர்களை ஒட்டவே ஒட்டாது. இதனையே நமது கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் சொவார்… “மூன்று மனைவியுள்ள தசரதன் இறந்துவிட்டான். ஆனால் கௌசல்யா விதவை. மற்ற இருவரும் சுமங்கலிகள் என்பது எத்தனை கேலிக்குரியது?” என்று. இதுபோலத்தான் ஞானிக்கு மூவினையும் கழன்றுவிடும். இதெல்லாம் முடிவுபெறாத ஞானவிசாரங்கள். இதில் உங்கள் சிந்தனை அதிகம் போகக்கூடாது. விஷயம் தெரிந்து கொள்ள சற்று விவரமாக எழுதினேன். (ஸாதனையில்தான் மனம் ஈடுபடவேணும்.)
தொடர்ந்து பார்ப்போம்…..

ஆத்மபோதம் -38 – *விதேகமுக்தி*

ஸாதனையில் மனம் ஈடுபடவேணும் என்று பார்த்தோம். இப்படியான நமது ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ரஉபாஸனையின் இறுதியில் ஸர்வானந்தமான ஜீவன்முக்த நிலையின் அடைவு என்பதை நமது தத்வார்த்தநூல்கள் சொல்கின்றன. இங்கு சங்கரர் அதன் அடுத்த படியாக விதேகமுக்தி பற்றி பேசுகிறார்.

உபாதிவிலயாத்விஷ்ணெள நிர்விசேஷம் விசேன்முனி: |
ஜலே ஜலம் வியத்வ்யோமின் தேஜஸ்தேஜஸி வா யதா ||

உபாதி நாசத்தால் உறுவான் முனிவன்
உபாதியில் விஷ்ணுவின் உள்ளே – அபேதமே
தோயத்தில் தோயமும் தூவிண்ணிலே விண்ணும்
தீயில் தீயும் போலத் தேர்

தண்ணீரில் தண்ணீரும், நிர்மலமான ஆகாயத்தில் ஆகாயமும், நெருப்பில் நெருப்பும் கலப்பது போல, ஸ்தூலமாகிய தேகம் நீங்கும்போது, மீதமுள்ள மிகநுண்ணியதான மனம், புத்தி இவைகளும் நீங்கி ஞானியானவன் உபாதியில்லாத, எங்கணும் நிறைந்த பிரஹ்மத்தில் கலந்து இரண்டற்ற நிலையை அடைவான்.

இதன் விரிபொருள்

முந்தைய ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்ட ஒரு ஜீவன்முக்தன் விதேகமுக்தன் ஆகும்போது நடப்பது பற்றி இங்கு சொல்கிறார். ஒரு ஸாதகன் ஆத்மஞானம் பெற்று ஜீவன்முக்தன் ஆகும்போது, பரம்பொருளிலிருந்து அவனை அதுவரை பிரித்து அறியக்காரணமாயிருந்த அவனுடைய அவித்தையான காரணதேகம் நாசமடைகிறது. அவனுக்கு இந்தஉலகில் இருக்கும் பிராரப்தம் எனும் வினை இருக்கும்வரை, மற்றவர்களைப் பொருத்தவரை ஸ்தூலமாகிய அவனது உடலும், நுண்ணியதான அவனது மனமும், புத்தியும் எல்லோருக்கும் இருப்பது போலவே இயங்கும். ஆனால் அவனது தேகம் இறக்கும்போது அந்த ஸ்தூலம் மட்டுமன்றி, நுண்ணிய தேகங்களும் நாசமடைகின்றன என்று நமது நூல்கள் பகர்கின்றன. எனவே அவித்தையான அஞ்ஞானம் அழிவதுதான் முக்கியமே தவிர, மற்ற தேகங்கள் இருப்பதும் இல்லாததும் ஒரு விஷயமேயில்லை. அப்படி ஞானம் அடைந்தவர்கள் உலகில் ஸஞ்சரித்துக்கொண்டு வருவது, நம்மைப்போன்றவர்கள் ஞானம் பெற்று உய்வதற்கே!
இங்கு ஆத்மபோதம் தொடர் தொடங்கியதே நமது உபாஸனையின் நோக்கத்தை புரிந்து கொள்ளவே! ஒரே குரு, ஒரே மந்த்ரம், ஒரே தெய்வம் என்ற நிலையில் சிந்திக்கவேண்டியது இது. அந்த வழியில் இங்கு ஒரு *சிதானந்தஅலை* அடிக்கிறது. காரணதேகம் நாசமடைகிறது என்கிறார். நவாவரணபூஜையில் காரணகலசம் என்று ஒன்று இருப்பது தெரியும். அது பூஜையின் முடிவில் காலியாகிமற்ற எல்லா பாத்திரங்களின் அர்க்கியமும் காலியாகிவிட்டது. அப்போது என்ன சொல்கிறோம். ஆர்த்ரம் ஜ்வலதி…. என்று ஒரு மந்த்ரம். அது எதை குறிப்பிடுகிறது. பராசக்தி என்கிற அகண்டாகார விருத்தியில் நானும், என் விருத்திகளும், இந்த உலகமும் ஒன்றாகி அப்படியான விருத்தியையே என்னில் நானே ஆஹூதியாக ஆக்கிவிடுகிறேன் என்பது தானே! இதுதானே விதேகமுக்தி!
மேலே இப்படி விதேகமுக்தியின் நிலையை சில உபமானங்களைக்கொண்டு சங்கரர் விளக்குகிறார்.
ஒரு குடத்தில் தண்ணீர் இருக்கிறது, அதை ஒரு பாத்திரத்தில் மொண்டு எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது குடத்துதண்ணீரும், பாத்திரதண்ணீரும் அவை இருக்கும் இடத்தினாலே வேறுவேறாக இருக்கின்றன. ஆனால் அந்த இரண்டு தண்ணீரையும் ஒன்றாகக் கலந்துவிட்டால் அவை இரண்டும் எப்படி வித்தியாசப்படும்? அதேபோல ஒரு காலி குடத்திலும் ஆகாயம் இருக்கிறது, வெளியேயும் ஆகாயம் இருக்கிறது. அப்போது குடத்தின் உள்ளே-வெளியே என்று ஆகாயத்தைப் பிரித்துச் சொல்ல முடியும். குடத்தை உடைந்துவிட்டால் உள்ளே இருந்த ஆகாயம் வெளியே கலந்துவிட்டது என்று சொல்லமுடியுமா? அது போன்றே எரியும் அக்னிப்பிழம்பிலிருந்து ஒரு நெருப்புக்கனலை எடுத்தால் அவை இரண்டையும் வெவ்வேறாகக் குறிப்பிடுவோம். மறுபடியும் அந்தக் கனலை எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டால் அவை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்திச் சொல்ல முடியும்? அப்படியாக பரம்பொருளையும், ஜீவனையும் பிரித்து வைத்த உபாதிகள் நீங்கியதும், ஜீவன் எங்கும் பரவி விரிந்துள்ள பிரஹ்மத்துடன் கலந்து ஒன்றாகிவிடுகிறான் என்பதே உண்மை.
இதனை சிந்தித்தால் உண்மை வேறாக இருப்பது நமக்குத்தெரியும். குடம் இருப்பதால் ஆகாயம் பிளவுபட்டது போலத் தோன்றுவது நமது பிரமை. குடத்துக்குள் இருந்த ஆகாயம்தான், குடம் இருந்தபோதும் இல்லாதபோதும் எப்போதும் அங்கேயே இருந்திருக்கிறது. ஆகாயம் அப்படி பிளவுபடாது இருப்பது போல, பரம்பொருள் என்றும் ஜீவன் என்றும் தனித்தனியாக தோன்றுவதும் நடுவில் வந்த உபாதிகளால் வந்துள்ள ஒரு பிரமைதான். எனவே உபாதிகள் நீங்கியதும் ஜீவன் “தான் பரம்பொருள்” அன்றி வேறில்லை என்பதை உணர்வதே முக்தி, அல்லது அதுவரை அவனைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த பிரமையிலிருந்து அவனுக்கு விடுதலை என்று சொல்லப்படுகிறது. இன்னிலை உயிர் உள்ளபோதே நடந்தால் அவன் ஜீவன்முக்தன். அப்படியும் அவனது முன்வினைப்பயனால் ஸ்தூல மற்றும் சூக்ஷ்மதேகங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், அவனது உயிர் பிரியும்போது அவைகளும் மறைகின்றன. அப்போது தனியே இருந்தது போலக் காணப்பட்ட ஜீவன் எல்லா தேகங்களையும் இழந்ததால், பிரஹ்மத்தில் ஒன்றாகி இழந்தது போல இருந்த நிலையிலிருந்து மீள்கிறான். அதனால் இதனை *யோகம்* என்கிறது வேதாந்தம்.
தொடரும்……

ஆன்ம போதம் – 39 *ப்ரஹ்மலக்ஷ்ணம்*

விதேகமுக்தி லக்ஷ்ணம் என்பதை நாம் நமது ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ர பூஜை பாத்ராஸாதனம் மூலம் சற்று கண்டோம். அதுபற்றி மேலும் இங்கே எழுதப் போவோமானால் இது ஒரு சிதானந்தஅலையாகி விடும். மேலும் நவாவரணபூஜை முழுவதும் நன்றாக தெரிந்த ஸாதகர்களுக்கே, அறிஞர்களுக்கேகூட இந்த காரணகலசம் விஷயம் ஒரு பெரிய கேள்விக்குரியான, சிந்தனைக்கான நிலையில் இன்று வரை தொடருகிறது. எனவே நாம் சிந்திப்பது ஆத்மபோதம் என்ற நினைவில் மேலே தொடருவோம். விதேகமுக்தி அடைந்த பின் என்ன? *ப்ரஹ்மஸாக்ஷாத்காரம்*. அதுதான் அடையவேண்டிய இறுதி நிலை. அதைபற்றித்தான் சங்கரர் அடுத்து சொல்ல வருகிறார்.

யல்லாபான்னாபரோ லாபோ யத் சுகான்னாபரம் சுகம் |
யஜ்ஞானான்னாபரம் ஞானம் தத்ப்ரஹ்மேத்யவதாரயேத் ||

எவ்வடைவில் பிறிதேதும் அடைதற்கின்றோ
எவ்வன்பினில் பிறிது இன்பு இன்றோ – எவ்வறிவு
தன்னில் பிரிதறிவுதான் இன்றாமோ அது
தன்னைப் பிரமமெனச் சார்

எதை அடைந்தபின் வேறு எதையும் அடைய வேண்டியது இல்லையோ, எந்த இன்பத்தை விட வேறு உயர்ந்த இன்பம் இல்லையோ, எந்த அறிவைக் காட்டிலும் சிறந்த உயர்ந்த வேறு அறிவு இல்லையோ, அதுதான் பிரஹ்மம் என்று உறுதியுடன் சேர்வாய்.

இதன் விரிபொருள்

இதற்கு முந்தைய ஸ்லோகங்களில் ஜீவன்முக்தன்-விதேகமுக்தன் லக்ஷணங்கள் விரிவாகப்பார்தோம். இனி வரும் ஸ்லோகங்களில் ப்ரஹ்மஸ்வரூபத்தின் லக்ஷணங்களும், அதனால் வரும் ஆனந்தநிலையையும் விளக்குக்கிறார்.
முன்பு நாம் பார்த்தது போல, இங்கும் நேர்மறையாய் இல்லாது எதிர்மறையில் விளக்கங்கள் வருகின்றன. அதற்குக் காரணம் நம் வாழ்க்கையில் ஸாதாரணமாக நமக்கு வரும் அனுபவங்களே காரணம். தினசரி நடக்கும் நமது செயல்களைக் கூர்ந்து பார்தோமானால் புரியும். நாம் எப்போதுமே இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வுடன் இருப்பதேயில்லை. அதற்கும் மேல் ஏதாவது கிடைத்தால், அதனால் மேலும் இன்பம் பெறலாமோ என்றபடிதான் நமது செயல்கள் அமைகின்றன.
இதற்கு இன்றைய உலகில் நிறைய உதாரணம் சொல்லலாம். மாட்டுவண்டி, மோட்டார்சைக்கிள், கார், கார் ஒன்று மட்டும் இல்லை – குடும்பத்தில் உள்ள மனைவி, பையன் என தனித்தனியாகவே, இப்படி நமது தேவைகள், ஆசைகள் கூடிக்கொண்டே போகின்றன. கேட்டால் இது தவிர்க்க முடியாது என்று பதில் வரும். அதனால் ஆசைக்கு அளவே இல்லை. அப்போது எப்பதான் இதற்கு முடிவு? ஆன்மவிசாரம் தான். அதனால் நமக்கு இறுதிநிலை என்ற ஒன்றை விளக்கும் போது, அது ஒன்றுதான் இறுதி; அதற்கு மேல் பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லித்தானே முடிக்க முடியும். அதனாலேயே இங்கு சொல்லப்பட்டிருக்கும் எல்லாமே அப்படி எதிர்மறை விளக்கங்கள் கொண்டு சொல்லப்பட்டிருக்கின்றன.
அதன்படி எது நம்மிடம் இருக்கிறதோ அதை நாம் மிகவும் பொருட்படுத்துவதே இல்லை. அதை குறைத்து மதிப்பிடுவோம். உலகியல் நியதிப்படி எதை எடுத்துக்கொண்டாலும் நிலைமை அப்படித்தான். இன்று ஒன்று கிடைத்து விட்டால், நாளை அதையும் விட சிறப்பானது எது என்றுதான் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம், (இன்று மொபைல் விவகாரம் இப்படித்தான் நாட்டில் ஓடுகிறது) அதனால் எதையும் அதைவிடச் சிறந்தது ஒன்று இருக்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அப்படி இருந்தும் மிகவும் சிறப்பான ஒன்று நம்மிடம் ஸதாசர்வகாலமும் இருப்பதை அறியாமல் இருப்பதுவும் நமது தலையாய குணங்களில் ஒன்றுதான்.
அதனால் எவராவது நம்மிடம் இருக்கும் சிறப்பானதைக் குறிப்பிட்டுச் சொன்னால், அதையும் விட சிறப்பானது ஒன்று இருக்கலாமோ என்ற ஸந்தேகம் நமக்கு வருகிறது. ஒருவனின் வெளியுலகப் பார்வையில் தென்படும் எல்லாமே இந்த நியதியால்தான் கட்டுப்பட்டிருக்கிறது.
மனிதர்களில் பலருக்கும் ஒன்று கிடைத்து விட்டதால் வரும் மகிழ்ச்சியை, அது கிடைக்கப் போகிறது என்ற எண்ணமே கூடதந்துவிடும். அதாவது ஸ்தூலத்தை விட அதன் தொடர்பான நுண்ணிய அறிவே நாம் வலைபோட்டுத் தேடும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றுதான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் வாழ்வதற்கு உண்டான பொருட்களையும், அவைகளைப் பெற்றுத்தரும் செல்வத்தையும், பின்பு அவை மேலும் கிடைப்பதற்கான வழிமுறைகளையும் தேடுவோம். அவை எல்லாமே கிடைத்ததும் அவைகளைப் பாதுகாக்கும் அறிவையும் தேடுவோம். (இன்று சுவிஸ்பாங்க் இருப்பு அப்படித்தானே கூடியுள்ளது) இப்படியாக ஸ்தூலத்திலிருந்து நுண்ணிய பொருட்களில் கவனம் சென்று கொண்டிருப்பதே நமது வாழ்க்கைமுறை என்றாகிவிட்டது. இறுதியில் எதுவும் பெறக்கூடிய அறிவினைத் தேடுவோம். அத்தகைய அறிவிலும் சிறந்த அறிவு எது என்பதும் நாம் தேடிக்கொண்டிருக்கும் நமது பழக்கங்களில் ஒன்றுதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாது உலகியல் பொருட்களும், இன்பங்களும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று பலரும் அத்துடன் நின்று விடுகின்றனர். அப்படி இல்லாத சிலருக்கு அவர்களின் அறிவைப் பற்றியதேடல் தீவிரமாகும் போதுதான் *ஞானவேட்கை* தொடங்குகிறது. ஆன்மவிசாரம் மனதுக்கு வருகிறது.
அந்த நிலைக்கு வந்துள்ள ஒருவனுக்கு ஆன்மா பற்றிச்சொல்லி, அதை வெளியே தேட முடியாது; உள்முகப் பார்வையால் மட்டுமே அறியமுடியும் என்று சொல்லி அதன் தன்மைகளைப் பற்றி குருநாதர் விளக்கும் போதுதான் தெரியவருகிறது. அதன் மஹிமையை சங்கரர் இவ்வாறு உணர்த்துகிறார்.
“நீ எப்போதும் ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாய். அது உன்னிடமே உள்ளது. அதைத் தேடி நீ அதை அடைந்துவிட்டால், அதனிலும் சிறப்பானது என்று எதுவும் கிடையாது. அத்தகைய உன்னதமான ஒன்று உனக்குக் கிடைத்துவிட்டால், இனி நீ வெளியே தேடி அலையும் வேலையே உனக்கு இல்லை. நீ அப்படி அலைந்ததன் நோக்கமே அதனால் உனக்கு கிடைக்கும் இன்பமே; இதுவரை நீ பெற்றதெல்லாம் சிறிது இன்பத்தைக் கொடுத்து அப்புறம் துன்பத்தைக் கொடுத்தது, அல்லது அந்த இன்பமே காலப்போக்கில் இல்லாது போயிற்று. ஆனால் நீ தேடிக்கொண்டிருக்கும் *இது* மட்டும் உனக்குக் கிடைத்துவிட்டால் உனக்கு எப்போதும் ஆனந்தமே கிட்டும். அதனால் உனக்கு சலிப்பு ஏற்படாது, அதற்கும் மேலான *ஆனந்தம்* தரும் பொருள் என்று உலகில் வேறு எதுவுமே கிடையாது” என்றெல்லாம் சொல்லி குருவழி காட்டுதலைத் தொடங்குவார். (இதுதான் நமது ஸர்வானந்தமயம்). இங்கு கொஞ்சம் ஸ்வய புராணம் – ஏதோ ஒன்றை மனம் தேடி அலைபாய்ந்து எதில் பொருந்தினால் இதற்கு நிம்மதி என அறியாது தவிக்கும் காலத்தில் குரு வந்தார். நீ தேடும் *அது* காட்டிலோ மேட்டிலோ இல்லையப்பா, உன் மனசுக்குள்ளே இருக்கு. அதுக்கு ஒரு இடம் வேண்டாம். எங்கும் இருக்கிறது அது. ஆனால் தேடவேணும்! என்றார். தேடினேன். அதனை அன்றுமுதல் உறுதியாய் பிடித்துக்கொண்டதாலே தானே அதே குரு வழிகாட்ட வந்தார். அப்படி அந்த வழிகாட்டுதல் படி செல்லும் ஒருவன் “இறுதியில் எதை அடைந்தால் அது ஆனந்தம் மட்டுமன்றி, அதுவே அறிவின் ஊற்றாய் ஆனந்தமாய் திகழ்ந்து, அதற்கும் மேலே பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று நின்று விடுமோ அதனை அடைவான். அதுவே பிரஹ்மம், அதை நீ உறுதியாக அடைவாய்” என்று குருவாக இருந்து ஸ்ரீபகவத்பாதசங்கரர் இங்கு சொல்கிறார். இவர் தானே ஆதிகுரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் மறுவடிவமாச்சே!

யத் த்ருஷ்ட்வா நாபரம் த்ருச்யம் யத் பூத்வா ந புனர்பவ: |
யஜ்ஞாத்வா நாபரம் ஞேயம் தத் ப்ரஹ்மேத் யவதாரயேத் ||

எதுகாணக் காண்டற்கு எதுவுமே இன்றோ
எதுவான பின் சன்மமின்றோ – எதுவறிந்த
பின் அறியத்தக்க பிறிதோர் பொருள் இன்றோ
அன்னதுதான் பிரமமாம்.

எதைத் தனது உண்மையான உருவமாகக்கண்டவனுக்கு அதன் பின் காண்பதற்கு என்று வேறு எதுவுமே இல்லையோ, எந்த உருவமாகவே தான் ஆகிவிட்டால் அதன் பிறகு பிறவி எனும் ஸம்சாரகட்டு ஒருவனுக்கு இல்லையோ, எதைத் தெரிந்துகொண்டால் அதற்கும் மேல் தெரிவதற்கு என்று ஒரு பொருளும் இல்லையோ, அதுதான் பிரஹ்மம் என்பது.

இதன் விரிபொருள்

மலையுச்சில் உள்ள ஊற்றிலிருந்து பெருகி வரும் நீர், அது ஓடி வரும் வழியில் கூடசேரும் மற்ற நீரோடைகளுடன் கலந்து ஓர் ஆறாகப்பெருகி, இறுதியில் கடலோடு கலக்கிறது. அதன் பின் அந்த நீருக்கு எப்படி தனியாக ஓர் அடையாளம் கிடையாதோ, அதே போன்று ஆத்மஸாதகன் இறுதியில் ஆத்மஸாக்ஷாத்காரம் அடைந்தபின் அவனுக்கு இருப்பது எல்லாமே இருக்கும் ஒன்றேயான ஆன்மாதான். அவன் பார்ப்பதெல்லாம் அந்த ஆன்மக் கடலின் அம்சங்கள் தான்.
சரி, அப்படி வேறு ஏதேனும் இருக்கிறதா என்று எதையாவது கேட்டு அறியலாம் என்றால், அங்கு வேறு என்ற ஒன்று இருந்தால் தானே கேட்கவோ, அறியவோ முடியும்? அதுவும் முடியாது என்றால் தன் மனம், புத்தி இவைகள் மூலம் கற்பனை செய்து எதையாவது உருவாக்கலாம் என்றால், அங்கு அத்தகைய உபாதிகள் இருந்தால்தானே எதுவும் செய்ய முடியும்? மனம் புத்திதான் இங்கு இல்லாததாகிவிட்டதே! அந்த நிலை அடைந்தவன் இருக்கும் நிலைதான் பிரஹ்மம் என்று சொல்லப்படுகிறது.
இதுதான் முடிவில் அடையப்போவது என்றால் அதை ஏன் இப்போதே நாம் அடைந்துவிட்டதாக பாவனை செய்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில்தான், ஸாதகனை *ஆன்மா ஒன்றேதான் இருப்பது* என்ற பாவனையில் இருக்கச்சொல்லி, அங்கு கேட்பதற்கு ஒன்றுமில்லை, அனுபவித்துப் பார்ப்பதற்குத்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களோ? எதைப் பற்றியும் கேள்வி கேட்கும் மனோபாவம் உலகியலுக்குத் தேவையாக இருக்கலாம். ஏனென்றால் உலகம் என்று வந்துவிட்டாலே “நான்-நீ”யும், பகுத்தறிதலும் வந்து விடுகிறதே! அதற்குக் கேள்விகள் தேவைப்படுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் உள்ள அந்த உலகிலும் தராதரம் பார்த்துத்தான் கேள்விகளும் கேட்க முடிகிறது. ஏனென்றால் அங்கு பதிலும் கிடைக்கலாம், மாறாக அடிஉதைகூட கிடைக்கலாமே! இதுக்குத்தான் தர்க்கம் வேணும், குதர்க்கம் உதவாது என்றார்கள்.
அது தவிர பாரமார்த்திகமாகவே பார்த்தாலும், முடிவில் அடைவது என்றும் ஒன்றில்லை, அது ஒன்றுதான் எப்போதும் இருப்பது என்றும், அதற்குத் தொடக்கம் என்று எதுவும் கிடையாது என்பதையும் அனுபவிப்பவர்தானே ஸாதகனுக்கு வழி காட்டும் குரு என்பவர்.
அவர் சொல்வதற்கு மேல் ஒன்றுமில்லை என்று நம்பும் ஸாதகனுக்கு கூடிய விரைவில் எல்லாம் தெரியவரும். ஆனால் இந்த நேரான, எளிமையான வழி தவறி பலப்பல தத்துவங்களையும், அவை தரும் புத்தகங்களையும் அறிந்த கற்றோருக்கு எல்லாவற்றையும் நீக்குவது என்பதுவும் இன்னுமொரு தடையை விலக்குவதாக அமைகிறது. அதனாலேயே பகவான்ரமணர் சொல்கிறார்:
“கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்”. அதனால் கேள்விகள் கேட்கும்போதும் ஒரு தன்னடக்கம் வேண்டும் என்று புரிகிறது. இல்லையேல் கேள்விகள் கேட்பவர் தனக்குத் தெரிந்ததை வெளியே காட்டிக்கொள்ளும் வகையில் அமைந்துவிடும்.
குரு காட்டிய வழியில் சென்று எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதைத் தன்னுள் உணர்ந்தபின் அதற்கு மேல் தெரிவதற்கு ஒன்றுமில்லை என்பதில் தெளிவு பெறுகிறான். அது மட்டுமல்லாது, அறியாதிருந்தேன் என்று இருந்த தனது முந்தைய நிலையிலும் இப்போது இருப்பது போல தான் எப்போதும் அப்படியே இருந்ததையும் உணர்கிறான். அதற்கும் மேல் தான் அடைவதற்கு வேறு என்று ஒன்றுமில்லை என்று தெளிந்து, அந்த நிலையிலிருந்து சிறிதும் வழுவாது நிற்பவனை பிரஹ்மத்தை உணர்ந்த ஞானி என்பார்கள். அதற்கும் மேல் ஒன்றுமில்லை என்பதால் அவன் மீண்டும் பிறந்து உழல மேலும் பிறவிகள் கிடையாது என்பதும் இங்கே உறுதியாகிறது.
தொடரும்….

ஜயசக்தி!

ஆத்மபோதம் – 40 *ஸச்சிதானந்தம்*

மேலே பிறவிகள் இல்லாத நிலை ஏற்படும் என்பதை பார்த்தோம். தொடர்ந்து இன்னும் ப்ரஹ்மத்தை விவரிக்கிறார் சங்கரர். தொடருவோம்…

திர்யகூர்த்வம்த: பூர்ண ஸச்சிதானந்தமத்வயம் |
அனந்தம் நித்யமேகம் யத் தத் ப்ரஹ்மேத்யவதாரயேத் ||

எதுகுறுக்கு மேல்கீழாம் எங்கும் நிறைவாகும்
எது சச்சித்து இன்பு இரண்டல்ல – எது அனந்தம்
நித்தமாய் ஒன்றாய் நிகழ்வது எதுவாகும் அவ்
வத்து பிரமம் மதி.

எந்தப் பொருளை குறுக்காகவோ, மேலோ, கீழோ எப்படிப் பார்த்தாலும் எங்கும் நிறைந்திருக்கிறதோ, எது ஸத்சிதானந்த ஸ்வரூபமாயும், இரண்டற்றதாகவும், எது முடிவில்லாததாயும், அழிவற்று எப்போதும் உள்ளதாயும், எது தானே ஒன்றாய் இருந்து விளங்குமோ, அந்தப் பொருளையே ப்ரஹ்மம் என்று உணர்வாய்.

உலகில் உள்ள பலவிதமான பொருட்களை விளக்குவதற்கு, நமக்கு நன்கு அறிமுகமான பொருட்களில் அதைப் போல உள்ள வேறு எதையாவது உதாரணமாக சொல்லியோ, காட்டியோ அது அப்படிப்பட்டது என்பார்கள். நாம் அதிகம் பார்த்திராத வரிக்குதிரையை விளக்கிச் சொல்வதற்கு ஒரு குதிரையைக் காட்டி அது முழுவதும் கருப்பு நிறமாக இருந்து அதன் மேல் வெள்ளை வரிகள் இருந்தால் எப்படியிருக்கும் என்று சொல்லலாம். ஆனால் ப்ரஹ்மம் என்பது இப்படித்தான் இருக்கும் என்று விளக்கிச் சொல்வதற்கு காட்டக்கூடிய பொருள் என்று உலகில் எதுவும் இல்லை. ஏனென்றால் எங்கும் காண்பது அதுவே என்பதால் காணும் அதையே எப்படிக் காட்டுவது? “அதுவாக இரு அப்போது தெரியும்” என்றுதானே சொல்ல முடியும்? அப்படியாக அனைத்துப் பொருளின் ஆதாரமாக இருக்கும் அதை முதலில் யூகத்தினால் மட்டுமே அறிய முடியும்; அல்லது *பா*வத்தினால் மட்டுமே இருக்க முடியும். பின்பு அதை உணர்ந்தே அறிய முடியும். தான் தேகம் என்ற அறியாமையில் உழல்வதால், தன் கண்ணுக்கு முன் உள்ளது மட்டுமே இருப்பதாக மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் எவருமே தான் ஒருவனாயும், முதலாவதாகவும் இருப்பதை விட்டுவிட்டு தான் பார்க்கும் உலகத்தை மட்டும் எப்போதும் இருப்பதாகப் பார்க்கிறார்கள். அவர்களது பார்வையை சரி செய்தால் மட்டுமே உள்ளதை உள்ளபடி பார்க்க இயலும்.
ஆகவே ப்ரஹ்மத்தைக் காட்டி விளக்குவதற்கு வேறு பொருள் இல்லையாதலால், எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும் அதனுடைய தனித் தன்மையைக் கொடுக்கும் ஐந்து அம்சங்களான ஸத்து, சித்து, ஆனந்தம், நாமம், ரூபம் இவைகளைக் கொண்டு ப்ரஹ்மம் விளக்கப்பட வேண்டும். இந்த ஐந்து அம்சங்களில் பிரம்மத்திற்கு முதல் மூன்றான ஸத்-சித்-ஆனந்தம் அம்சங்கள் மட்டுமே உண்டு. மற்ற இரண்டு அம்சங்களான நாமமும், ரூபமும் கிடையாது. உலகில் காணப்படும் எல்லா பொருட்களுக்கும் நாமமும், ரூபமும் உண்டு. அவைகள் எதற்குமே பிரத்தியேகமாக முதல் மூன்று அம்சங்கள் கிடையாது. அந்தப் பொருட்கள் இருப்பது (ஸத்) போலவும், அவைகளை அறியமுடியும் அறிவு (சித்) உண்டு என்பது போலவும், அவை ஆனந்தம் தருகிறது என்பது போலவும் காணப்படுவது அவைகளுடன் பிரம்மம் சேர்வதால் தான். அப்படி பிரம்மத்தின் சேர்க்கை இருப்பதால் மட்டுமே அவை உணரப்படுகின்றன. அப்படி இல்லாது போனால் அவை மாயை எனப்படும். அதனால் உலகம் இருக்கிறதா என்றால், ப்ரஹ்மத்தின் சேர்க்கையால் இருக்கிறது என்றும் ப்ரஹ்மம் இல்லாத உலகம் மாயை என்றும் சொல்லப்படுகிறது.
அதனால்தான் நமது ஆழ்உறக்கத்திலும் அந்தப் ப்ரஹ்மமாக நாம் இருக்கிறோம். ஆனால் நமது அவித்தையாகிய அஞ்ஞானத்தால் நாம் அதைஉணர்வதில்லை. அப்படி நாம் உணராவிட்டாலும் அதன் தன்மைகளால் அது தான் இருப்பதையும், அறிவாகவும் ஆனந்தமாகவும் உள்ளதை நம்மை “ஆனந்தமாகத் தூங்கினோம்” என்று அப்போது உணர்ந்ததைப் பின்பும் சொல்லவைக்கிறது. உறக்கத்தால் நாம் பெறும் அந்த ஆனந்த நிலை கூட அவ்வப்போது நமக்கு கிடைக்காது போனால் நம் கதி அதோகதி தான். ஆனால் அதை நாம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காது, நனவு உலகம் ஒன்றையே பெரிதாக மதித்து, மேலும் மேலும் அதைப் பிடித்துக்கொண்டு அதில் ஆழ்ந்து மூழ்கிப் போகிறோம்.
அந்தப் ப்ரஹ்மமாகிய ஒன்று இல்லாது போனால் எதுவும் இல்லை என்பதால் நாமும் இல்லை என்றுதானே ஆகிறது. தேகம் என்பது உலகத்தில் உலவுவதால் அதற்கும் மற்றப் பொருட்களைப் போலவே பிந்தைய இரண்டு அம்சங்கள்தான் உண்டு. அத்துடன் பிரம்மம் சேர்வதால்தான் நாம் நாமாக இருக்கிறோம். அந்த பிரம்மம் ஒன்று மட்டும்தான் தானே தானாக இருக்க முடியும். அதை விடுத்து இரண்டாவது என்பது கிடையாது. அது எப்போதும் இருந்தாக வேண்டும் என்பதால் அது அழிவற்றது. அது ஒன்றே அனைத்துக்கும் அறிவையும், ஆனந்தத்தையும் கொடுப்பதால் அதுவே அறிவாயும், ஆனந்தமாயும் இருக்கிறது. அதனால் அதுவே *ஸத்சிதானந்தம்* எனப்படுகிறது. இது பற்றி சற்று விரிவாக நாளை ஆராய்வோம்…..

ஆன்ம போதம் – 41 *ஸச்சிதானந்தம்* – தொடர்ச்சி

ஸத், சித், ஆனந்தம். என்ற மூன்று பதங்களின் விளக்கம் தொடருகிறது…
ஸத்தின் விளக்கம் (நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி) எல்லோருக்கும் உண்டு. சித் விவேகிக்கு விளங்கும். ஆனந்தம் பூர்ண போதம் அடைந்தவனுக்குதான் விளங்கும். இம்மூன்றையும் உடையவனுக்கு அமிர்தமயமான ,அத்யந்த,துக்க நிவர்த்தி என்று பொருள் கூறுவர். பகவான் அவர்கள் வேறுவிதமாக சொல்கிறார்.

கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணூனைக்
காணுவ தெவர்பா ரருணாசலா

நாம் நமக்கு வெளியிலுள்ள வஸ்த்துக்களை காண்பது நமது கண்களால் என்பது நாம் எல்லாம் அறிந்த உண்மை. இந்த ஸ்தூல கண்ணுக்கு கண்ணாயிருப்பதைக் குறித்து கூறுகிறார் இந்த சுலோகத்தில். நமது ஸ்தூல சரீரத்தில் இருக்கின்ற அங்கங்களில் மிகவும் முக்கியமானது கண்கள் தான். கண்களில்லையென்றால் நாம் இந்த உலகத்தை காண்முடியாது. ஒளி இருந்தால்தான் பொருள்கள் நம் கண்களுக்குத் தெரியும். ஒளியிருந்தாலும் கண்கள் இல்லாவிட்டால் பொருள்கள் நமக்கு தென்படமாட்டா. ஆனால் இந்த கண்களை இயக்குவது எது? அது தான் நமது மனம். கண்கள் திறந்திருந்தாலும், நமது மனம் காண்பவையில் லயிக்காவிட்டால் கண் முன்னால் உள்ள பொருட்கள் நமக்கு தென்பட மாட்டா. மனம் காணுகின்ற கட்சிகள் தான் நமக்குத் தெரியும். நாம் கண் இருந்தும் குருடர்களாவோம். நாம் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் நிறைய காக்ஷிகள் நம் முன்னே ஓடிக்கொண்டேயிருக்கும்.. அது எப்படி?
நமது மனம் அதன் ஸ்ருஷ்டி சக்தியால் (கிரியாசக்தியால்) கண்களையும் மற்ற இந்திரிய உறுப்புக்களையும் கற்பனையில் உருவாக்கி நமக்கு காண்பதற்கான கேட்பதற்கான,வாசனையை கிரஹிக்கக் கூடிய சக்தியை கொடுக்கிறது.
ஆனால் இந்த மனமும் செயல் இழந்திருக்கும் பொழுது- அதாவது உறக்கத்தில்- ஸ்வப்னாவஸ்தையில் நாம் பல காக்ஷிகளைக் காண்கிறோம், ஒலிகளை கேட்கிறோம். அதற்கான ஊக்கசக்தியை அளிப்பது அல்லது உருவாக்குவது “நான்” என்ற ஆன்மா தான்.. உறக்கத்தில் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதும் விழிப்பில் இருக்கிறதை மறைப்பதும் இந்த ஆன்மாவே தான். உறங்காத கண்களாம் இந்த ஆன்மாவை பகவான், ”உள்ளது நாற்பது” என்கின்ற நூலில் ‘அந்தமிலாக் கண்’ என்று சொல்கிறார். இந்த ஆன்மா தான் ‘நான்’. அந்த நான் தான் பிரஹ்மம்.
நம் கண்களுக்கு காணும்சக்தி வேண்டும் என்றால் அந்த பிரஹ்மத்தின் உதவி வேண்டும். ஆனால் பிரஹ்மத்திற்கு காண்பதற்கு யார் உதவியும் தேவை இல்லை.
இந்த ஆன்மா, பிரஹ்மம் என்பது ஒரு ஸ்தூலமல்ல. அது ஒரு அனுபவம்; ஒரு அனுபூதி. அதை அனுபவித்துத்தான் உணர வேண்டும். அதை உணர வேண்டுமென்றால் நாம் பக்குவப் பட வேண்டும். இப்படியான பக்குவம் எளிதாக்க் கிடைக்காது.. பகவான்ரமணர் அப்படியான ஒரு ஞானத்தை-ஆத்மானுபூதியை சிறுவயதிலேயே அடைந்துவிட்டார்.
வேறு ஒரு கோணத்தில் சிந்திப்போம்.
எது ஒன்று எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாக இருக்கிறதோ,அதுவே தான் அதன் விளைவாகவும் இருக்கிறது..அதனிலிருந்து உண்டாகும் மற்றெல்லா வஸ்துக்களும் வெறும் பெயர்களே. இவ்விஷயத்தில் நமது உபனிஷத்துக்களும் மற்ற வேத கிரந்தங்களும் பிரம்மத்திற்கு ஐந்து கோணங்களுண்டு என்று கூறுகின்றன. சத்- சித்- ஆனந்த- நாம- ரூபம் என. இதில் முதல் மூன்றும் ஸத்யமானவை. கடைசி இரண்டும் மாயை-இருப்பது போல் தோற்றமளிக்ககூடியவை. இந்த சந்தர்ப்பத்தில் ரமணர் கூறின ஒரு கதையை நினைவு கூறுவது தவறகாது.
மனிதன் ஞானம் பெறுவதற்கு பல விதமான் பிரதிபந்தங்கள் உள்ளன .இவைகளைப் பற்றி விளக்கிக் கூறுமாறு ஒரு பக்தர் பகவானிடம் கேட்டதற்கு இணங்கி பகவான் கீழ்கண்ட கதையைக் கூறுகிறார்.
பிரதிபந்தங்கள் பல விதமனவை…“…அவைகளைத் தான் பூத-பவிஷ்யத்-வர்தமான (இறந்தகால, எதிர்கால, நிகழ்கால) பிரதிபந்தங்கள் என்பார்கள். அந்த மூன்றில் பூதபிரதிபந்தத்திற்கு உதாரணமாக உபனிஷத்திலும், வாசுதேவமனனத்திலும் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
பெரிய குடும்பியான ஒரு பிராமணன் ஜீவனத்திற்காக ஒரு எருமையை வளர்த்தான். அது கொடுக்கும் பால், தயிர், நெய் முதலானவற்றை விற்று குடும்பத்தை பராமரித்து வந்தான். எருமைத்தீனிக்காக பசும்புல், பருத்திக்கொட்டை, முதலியவை சேகரிப்பதிலும், எருமையை கவனிப்பதிலும் குறியாக இருந்தான். கர்ம வசத்தினால் அவனுடைய மனைவி, குழந்தைகள் எல்லோரும் வரிசையாக சிறிது காலத்திற்குள்ளேயே இறந்துவிட்டார்கள். அதன் பிறகு அவனுக்கு எருமையின் மீது பிரியம் இருமடங்காயிற்று. சில வருடங்களில் அந்த எருமையும் இறந்துவிட்டது. தன்னந்தனியனாகிவிட்ட அவனுக்கு இகலோக வாழ்க்கையில் வெறுப்பு வந்து ஸந்நியாசியாகி ஒரு ஸத்குருவின் ஸந்நிதியில் சிரவண மனனங்கள் செய்து கொண்டு வந்தான்.. அவனால் சிரத்தையாக சிரவண மனனங்களில் ஈடுபட முடியவில்லை. குரு இதைக் கவனித்து அவனது பூர்வ கால வாழ்க்கையும் அப்பொழுது அவனுக்கு ஏற்பட்ட பந்தபாசங்களும் தான் அவனது ஸன்னியாச வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டார். ஒரு நாள் குரு அவனை அழைத்து சொன்னார்-
பிரம்மத்தை அஸ்தி, பாதி, பிரியம் என்று சொல்வார்கள்.அஸ்தி (இருக்கிறது), என்றால் உள்ள பொருள் (ஸத் வஸ்து ) பாதி என்றால் பிரகாசிப்பது, பிரியம் என்றால் அன்பானது. உன்னுடைய எருமை உனக்கு பிரியமானதால் அதுவும் பிரஹ்மம் தான். ஆனால் அதற்கு நாமமும் ரூபமும் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது நீ செய்ய வேண்டியது என்னவென்றால், உன்னுடைய நாம ரூபத்தையும் விலக்கி அதனுடைய நாம ரூபத்தையும் விலக்கிவிட வேண்டும். அப்போது உள்ளது பிரஹ்மம் ஒன்று தான்..”
சிஷ்யனும் நாம ரூபங்களை விட்டு விட்டு ஆன்ம சிந்தனையில் ஈடுபட்டான்; ஞானமும் அடைந்தான்.” பகவன்ரமணர் சொன்னார், ‘ பொருள்கள் பலதானாலும் உள்ள பொருள் ஒன்றே தான். அவை நாம ரூபத்தில் தான் வேறு படுகின்றன.”
நாம் அஸ்தியும் பாதியும் பிரியமும் பிரஹ்மத்தின் உருவகங்களே என்று தெரிந்து கொண்டால், இவையெல்லாம் ஸகஜஸ்வருப லக்ஷணங்கள் என்று புரிந்து கொண்டால் இவையெல்லாம் ஸத்-சித்-ஆனந்தத்தின் மறு பெயர்களே என்று புரிந்துகொண்டால் நமது அகக்கண் அதாவது ஞானக்கண் திறக்கப்பட்டுவிடும். நாம் ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை நெருங்கி விட்டோம் என்று அர்த்தம்.
பகவானின் அக்ஷரமணமாலயிலும் கேனோபனிஷத்திலும் இதே கூறப்பட்டுள்ளது.

யச்சக்ஷுஷா ந பஸ்யதி யேன சக்ஷும்ஷி பஸ்யதி
ததேவ ப்ரம்மதுவம் வித்தி நேதம் யதிதமுபாஸதே”

ஸ்தூலக் கண்களால் காண முடியாததும், ஆனால் அந்தக் கண்கள் இயங்குவதற்கு காரணமான அந்த சுத்தசைதன்யம் தான் பிரஹ்மம் என்று அறிக. நீ உபாசிக்கின்ற மற்றவையெல்லாம் பிரஹ்மமல்ல.என்கிறது உபனிஷத்.

காணுகின்றவர் ( பார்க்கின்ற) கண்களுக்கு கண்ணாக இருந்து கண் இல்லாமலேயே சகலமும் காண்போனாகிய அந்த ஸத்-சிதானந்தனை எப்படி காண முடியும் என்று பகவான் அக்ஷரமணமாலையில் கேட்கிறார். அதற்கு நீ தான் துணை நிற்க வேண்டும் என்கிறார். இதே கருத்தை ஆன்மவித்தைக்கீர்த்தனத்தில் அவர்களே இவ்வாறு கூறூகிறார்.

விண்ணாதிய விளக்கும் கண்ணாதிய
பொறிக்கும் கண்ணாய் மனக்கணுக்குங் கண்ணாய்… என்றும்

காணொணாத கண் காட்சி பற்பல
காட்டினாய் மனக் கண்ணுளே

காண்பவன், காணப்படும் பொருள், காணுகின்ற செயல் எல்லாம் பிரஹ்மத்தின் செயலே.. நானும் பிரஹ்மம், நீயும் பிரஹ்மம், எல்லாமே பிரமமம் என்று புரிந்து கொண்டு நான் என்ற அகந்தையை அழித்து விடு. அதற்கான அருளை எனக்கு தர வேண்டும் அருணாசலா” என்று பகவான் நமக்காக அருணாசலனிடம் வேண்டுகிறார்.

நமது ஸபர்யாபத்ததி இங்கே என்ன சொல்கிறது என்று காணுவோம். பூஜையின் தொடக்கத்திலேயே இந்த உறுதி செய்ய நம்மை தயார் படுத்துகிறார் குருநாதர்.

ஸர்வேந்த்ரிய ஜன்யேஷு ஞானேஷு யே விஷயாஸ்தேஷு
ஸச்சிதானந்த அம்ச அஸ்ய அனுகதஸ்ய பானம்,
ந த்வஅனுகதயோர் நாம ரூபயோ: இதம்
ரிதம்பரா ஞானமிதி ப்ரஸித்தம் ஸா
பூஜா பராஞானமிதி கத்யதே

இந்த நாட்டமே பராபூஜா எனப்படும். அதாவது இந்த ஸகல உலகங்களும் சர அசர வடிவமானவையே. இதனை அத்வைத பாவனை (இருவேறாக காணாத நிலை) என்கின்ற அம்ருதத்தினால் நனைந்ததாக நினைக்கவேண்டும். பிறகு பேதமாகிற அத்யாஸ விகற்பங்களை முற்றுமற, ஒழித்துக்கொள்ளவேண்டும். பிறகு இந்த ஸாதகன் பரமானந்த பரிதனாக ஆகிவிடுகிறான். பின்பு மிகுந்த உத்ஸாகத்தோடுகூட மனனம் (என்ற நினைத்தலையும்) நிதித்யாஸனம் (என்ற பயிற்சியையும்) இவைகளோடு கூடிய ஆத்மாவை அனுஸரித்த செயலினால் (ஆத்மகோசர வ்ருத்தி) அத்வைத ரூபமான சிவத்தை அறிய வேண்டும். இவ்வாறு உள்-வெளி என்ற பேத மில்லாமல் எங்கும் எப்போதும் எதையும் சித்தாகக் காணுவதே பரா பூஜையாம் என நமது பூஜா பத்ததி நமக்கு சொல்கிறது..
நாளை சங்கரரின் பிரஹ்மத்தின் லக்ஷணத்தை தொடருகிறோம்….

ஆன்ம போதம் – 41 * ப்ரஹ்மானுபவம்*

முதலில் நேதிநேதி இதுஇல்லை இதுஇல்லை என்பதையே விளக்குகிறார்….

அதத்வயாவ்ருத்திரூபேண வேதாந்தைர்லக்ஷ்யதே த்வயம் |
அகண்டானந்தமேகம் யத் தத்ப்ரஹ்மேத் யவதாரயேத் ||

ஏது அழிவில்லாதது எதை அன்றென்று அன்றென்றே
வேத முடிவு விளக்கிடும் – யாதொன்று
அகண்ட இன்பாகி அமரும் அது தானே
திகழும் பிரமம் தெளி

வேதங்களின் முடிவில் உள்ள உபநிஷத்துகள், இருப்பதுபோலத் தெரிவதையெல்லாம் இதுவல்ல, இதுவல்ல என்று மறுதலித்து எதை விளக்குகின்றனவோ, எது அழிவில்லாததாயும், இடைவிடாத இன்பம் தருவதாயும், எப்போதும் ஒன்றாய் இருப்பதாகுமோ அது தானே ப்ரஹ்மஸ்வரூபமாய் விளங்கும் என்று தெளிவாய்.

இதன் விருபொருள்

வேதங்களின் ஆரம்பபாகத்தை கர்மகாண்டம் என்றும், அதன் கடைசீப் பகுதியான உபநிஷத்தை ஞானகாண்டம் என்றும் சொல்லுவார்கள். ஞானம் என்பது அறிவு சம்பந்தம்உடையது. ஆனால் இங்கு கூறப்படும் அறிவோ அறியும்தனக்கு வெளியே உள்ள பொருட்களைப் பற்றிய அறிவு அல்ல. இது தன்னைப் பற்றிய அறிவே. தன்னைப்பற்றித் தானே அறியும் அறிவு இது என்பதால் “அறியுமறிவு” என்று ஒன்றும், “அறியப்படுமறிவு” என்று மற்றொன்றும் இருப்பதற்கு அங்கு இரண்டு அறிவுகள் இல்லை. அதனால் அதை இப்படி, அப்படி என்று விளக்க முடியாது. அதை விளக்குவதற்கு ஒரே வழி ஸாதகன் அறிந்துள்ள அனைத்தையும் சொல்லி, இதுவல்ல அதுவல்ல (நேதி-நேதி) என்றுதான் விளக்க முடியும்.
உடலாலும், உள்ளத்தாலும் காண்பது அனைத்தையும் அவை தானல்ல என்று விட்டுவிடச்சொல்லி, அவை தெரிவதால் அவைகளைக் காண்பவன் யார் எனும் கருத்தில் ஸாதகன் “தான்யார்” என்பதை ஆராயவேணும். அது எப்படி முடியும் என்றால், ஆரம்பத்தில் அதைத் தன் உடலிலும் நுண்ணியதான மனம், புத்தி போன்ற நம் கருவிகளை வைத்துக்கொண்டுதான் விசாரத்தைத் தொடங்க முடியும். “நான்யார்” என்ற இந்த வினாவும் ஓர் எண்ணம்தானே, அது கேட்கப்படும்போது இயங்குவது மனம்தான். அதனை ஆராய்ந்து அதற்கு விடை காணத் துடிப்பது நமது புத்திதான். மனம், புத்தி இந்த இரண்டும் ஸ்தூலம், ஸூக்ஷ்மம், காரணம் என்று பல பொருட்களை ஒவ்வொன்றாகப் பற்றிக்கொண்டு நம் வினாவுக்கு விடை தேட முயற்சிக்கும். அப்படித் தெரியவரும் பொருட்கள் எல்லாம் நம்மிலும் வேறு என்பதால் அவை நாம் அல்ல என்ற முடிவுக்கு வருவோம். இறுதியில் கேட்கும் மனமும், விடைகாண முயலும் புத்தியும் நம் கருவிகளாக இருப்பதால் அவைகளும் நாமல்ல என்ற ஒரு தெளிவும் பிறக்கும். அதன் பின் அத்தகைய கருவிகளும் தானாக இயங்குவதில்லை, ஆனாலும் அவை இயங்கின என்பதாலும், கேட்பவன் இன்னும் இருக்கிறான் என்ற நிலை உணரப்படும்.
மனம், புத்தி இவைகளின் எல்லை உணரப்படும்போது அவைகள் தானே அடங்கி, இருக்கும் ஒன்றேயான பிரஹ்மம் தானே விளங்கும். மனம், புத்தி இவைகளுக்கும் அப்பால் உள்ளது “நான்” என்னும் இறுதித் தெளிவான ப்ரஹ்மமாய் இருப்பதையே ஸச்சிதானந்தநிலை என்பர். அது (அஸ்தி) இருப்பாகிய “ஸத்”தாகவும், (பாதி) இருக்கிறேன் என்று உணரும் அறிவாகிய “சித்”தாகவும், (ஆனந்தம்) எப்போதும் தானே “ஆனந்தமாய்” இருப்பதாலும், நாம் உலகில் காண்பது, அனுபவிப்பது அனைத்தும் இதனிலிருந்து வரும் குணங்களே என்றும் அறிகிறோம். அது இல்லை என்றால் எதுவும் இல்லை என்பதே உண்மை. அதை அனுபவித்தே உணர முடியும். வாய்ச்சொற்கள் இங்கே பயனில்லை. ஏன், மனதாலுமே முடியாது. “அவாங்மானஸகோசரம்” என்கிது இதை வேதஉபநிஷதம்.
இவ்வுலகில் உள்ள பொருட்களைப் பற்றி விளக்கும் சொற்களே ஓரளவுக்குத்தான் அதைச் செய்ய முடிகிறது. உதாரணம் பார்ப்போம். வெல்லம், சர்க்கரை, தேன் என்ற மூன்று பொருட்களை எடுத்துக்கொண்டால் அவை தித்திப்பாக இருக்கும் என்றுதான் சொல்ல முடியுமே தவிர ஒவ்வொன்றின் தித்திப்பு தன்மையை தனித்தனியே எப்படி விளக்கமுடியும்? அதைத் தனித்தனியே வாயில் சுவைத்து அனுபவித்துத்தானே உணர முடியும்? இவைகளே இப்படி என்றால் இது எல்லாவற்றையும் கடந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் தன்னுள்ளடக்கிய ப்ரஹ்மத்தை எப்படி விவரிப்பது? அதனால்தான் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்பர்.
இப்படி மேலேகண்ட நான்கு ஸ்லோகங்களிலும் “யத்தத்ப்ரஹ்மேதி அவதாரயேத்” என்று சொல்லி “இதுவே ப்ரஹ்மம் என்று உறுதியாக அறிந்துகொள்” என்று அறிவுறுத்துகிறார். இப்படி நான்கு முறை சொல்லப்பட்டுள்ளதை “சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல்” என்பதன் எதிர்மறையாகக் “கூறியதுகூறல்” என்ற முறைப்படி வருவதாகச் சொல்வார்கள். இது குற்றமாகாது. ஏனெனில் விளக்கவந்தது மாபெரும் தத்துவம், அதனால் இதற்கு மேல் ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்வதற்கும் ஒன்றில்லை என்று முடிந்துவிடுகிறது.
அடுத்து இந்த *ப்ரஹ்மானுபவம்* எப்படி என சொல்கிறார்….

அகண்டானந்தரூபஸ்ய தச்யானந்தலவாச்ரிதா: |
ப்ரஹ்மாத்யாஸ்தாரதம்யேன பவன்த்யானந்தினோகிலா ||

அகண்ட சுகமய ஆன்மாவில் அற்ப
சுகத்தை அடுத்தே சுரராய்த் – திகழும்
பிரமாதி ஏனோர் பிறங்குவர் இன்புற்றுத்
தராதரமாகத் தரி

எங்கும் பரவி, எப்போதும் ஆனந்தமயமாய் இருக்கும் ஆன்மாவின் சுகத்தில் இருந்து, தேவர்களாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் முதலானோர் அவரவர் தகுதிக்கு ஏற்ப சொற்பமான சுகத்தையே பெற்று உயர்வும், பெருமையும் அடைந்தவர்கள் என்பதை திடமாக அறிவாய்.

இதன் விரிபொருள்

வேத உபநிஷதங்கள் ஆனந்தத்தை விளக்க என தனி வல்லிகள் என்ற பாகத்தை சொல்கிறது.
ஆன்மா ஆனந்தமயமானது என்றால் எவ்வளவு என்று கோடி காட்டுவதற்காக இங்கு ஒரு Comparison சொல்லுகிறார். ஆன்மாவின் ஆனந்தத்தை ஒரு கடல் என்று சொல்லி, அதில் ஒரு துளிதான் மிக ஆனந்தமாய் இருக்கும் பிரஹ்மாவிற்கே கிடைக்கிறது என்று சொல்லி ஆன்மாவின் ஆனந்தத்தை விவரிக்கிறார். ஒன்று பெரியது என்று காட்டுவதற்கு என்ன பண்ணுவோம். அதன் பக்கத்தில் ஒரு வேறு ஒரு சிறு கோடு போடப்படும் “இருகோடுகள்” தத்துவம்தான் இது. ஆனால் இங்கு ஒன்று மிகச் சிறியதாவும், மற்றொன்று மஹா பெரியதாகவும் இருக்கிறது.
தைத்திரியஉபநிஷதம் சொல்லுகிறது. ஒரு நல்ல இளமையுடன் இருக்கும் பலசாலி மற்றும் அறிவாளி சக்ரவர்த்தியாக இருக்கும்போது அனுபவிக்கும் ஆனந்தமே மனிதஆனந்தம் என்று வரையறுக்கப்படுகிறது. அதாவது மற்ற சாதாரணமக்களின் ஆனந்தம் எதுவுமே ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை. அந்த மனிதனில் தொடங்கி பிரஹ்மா வரை சொல்லப்பட்டு, அந்த பிரஹ்மா அனுபவிப்பதே ஆத்மானந்தத்தின் ஒரு துளி என்றும், மற்றவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆனந்தம் கிடைத்தும், அவர்கள் எல்லோருமே உயர்வாய் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களே அப்படியிருந்தால் ப்ருஹ்மத்தை உணர்ந்து அந்த ஆன்மானுபவத்தை அடைபவன் கடலளவு ஆனந்தம் அனுபவிப்பவன் என்பதால் அவன் இன்னும் எவ்வளவு பாக்யவான் என்று கோடி காட்டப்பட்டிருக்கிறது.
அதாவது மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பிரஹ்மாவின் சுகமே கொஞ்சமோகொஞ்சம் என்பதால் இவ்வுலக சுகத்தை நாடுவதில் ஒருவனுக்கு என்ன லாபம் இருக்கமுடியும்? இவ்வாறுசொல்லி ஸாதகனின் மனத்தை இவ்வுலக இன்பங்களிலிருந்து திருப்பிவிட்டு, அவனுக்கு ஆனந்தக்கடலைக் காட்டி, அவன் ஆன்மவிசாரத்தில் ஈடுபடுவதே மிகப்பெரும் நன்மை கொடுக்கும் வழி என்று இங்கு காட்டுகிறார்.
அது இல்லாத இடமே இல்லை என்பதை அடுத்து சொல்கிறார்….

ஆன்ம போதம் -42 *ப்ரஹ்மஉணர்வு*

இந்த விஷயமே தொடருகிறார்…..மறுபடியும் மறுபடியும் இந்த ப்ரஹ்மத்தை பற்றியே எழுத வேண்டியுள்ளது. உங்களுக்கு சற்று Bore அடிக்கும்தான். இருந்தாலும் பொறுமையாக படியுங்கள். திரும்ப திரும்ப படியுங்கள். அதுதான் மனனம் என்பது. வேத, உபநிஷத ஸத்யங்கள் அத்தனையும் திரட்டி ஹல்வா மாதிரி பகவத்பாதர் நமக்கு இதில் ஊட்டுகிறார். அல்லது நமது மனசுக்கு வந்த நோய்க்கு மருந்து கொடுக்கிறார். எப்படியானாலும் நமக்கு இது மிக்க தேவையே! எத்தனை ஜன்மா இப்படியே கழிக்க போகிறோம்? இப்பவாவது முழிக்க பண்ணுகிறாரே என்று மகிழ வேண்டாமா? அழலாமா? வாழ்வின் அழுகையை ஒழிக்கத்தானே இது. ஸ்ரீவித்யையாம்-ப்ரஹ்மவித்யையை வேறு உபாஸனைக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறோமே! பொறுமை தேவை. நவராத்திரி நாளை தொடங்குகிறது. அதில் கொலுவில் வைக்கும் பொம்மைகள் அத்தனையும் பலவித்தில் இருந்தாலும் எல்லாமே இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் நானாவிதமான விருத்திகள் தானே! அத்தனையையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து வைப்பதாலே அகண்டாகாரவிருத்தி திடப்படுகிறதை உணரவேண்டும்.

தத்யுக்தமகிலம் வஸ்து வ்யவகாரச்ததன்வித: |
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்மா க்ஷீரே ஸர்பிரிவாகிலே ||

அதனிடத்துள்ளது அகிலமும் செய்கை
அதை அடுத்துள்ளதேயாகும் – அதனால்
பரவிடும் எல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு நெய் போலவே

எல்லாப் பொருட்களும் ப்ரஹ்மத்தினிடமே இருக்கின்றன. அதனால் எல்லாச் செய்கைகளும் அதை ஒட்டியே நடக்கின்றன. பால் முழுவதும் நெய் பரவி இருப்பது போல, ப்ரஹ்மம் எங்கும் பரவி வியாபித்து இருக்கின்றது.)

இதன் விரிபொருள்

முன்பே நாம் சிந்தித்தமாதிரி எந்தப் பொருளுக்கும் ஐந்து குணங்கள் உண்டு. சொல்லியது சொல்லல் என்றில்லாமல் விஷயம் முக்கியமானதால் மறுபடியும் இங்கே சிந்திக்கிறோம். அவைகளில் முதல் மூன்றான அஸ்தி (ஸத்), பாதி (சித்), ப்ரியம் (ஆனந்தம்) ப்ரஹ்மத்தின் சொரூபம் என்றும், கடைசியான நாமம், ரூபம் இரண்டும் மாயையின் குணங்கள் என்றும் சொல்லப்படும். எங்கு நாமரூபங்கள் தோன்றுகின்றனவோ அங்கு உலகம் தெரிகிறது என்று பொருள். இவ்வுலகில் உள்ள பொருட்கள் எதற்கும் முதல் மூன்று குணங்கள் கிடையாது. ஆனாலும் அவைகளுக்கும் அந்தக் குணங்கள் இருப்பது போலத் தோன்றுவது, அந்தப் பொருட்களுடன் இருக்கும் ப்ரஹ்மத்தின் தொடர்பால் மட்டுமே.
ஒரு பொருளை வாங்கி வந்தோம், அல்லது ஒரு வேலையைச் செய்துமுடித்து விட்டோம் என்றால் நமக்கு வரும் ஆனந்தம் அந்தச் செயலால் வருவது என்றுதான் நாம் பொதுவாக எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அந்தச் செயலை செய்வதற்கு முன் நமக்கு இருந்த மன ஓட்டங்களும், கவலைகளும் செயல் முடிந்ததும் தீர்ந்து விட்டதால், நாம் நமது இயல்பான ஆன்மநிலைக்கு ஒரு நொடியேனும் திரும்புகிறோம். ஆக எப்போதும் அறிவுடன் இருக்கும் ஆன்மாவின் ஆனந்த இயல்பையே நாம் அப்போது உணர்கிறோம். அது அப்படியே நீடிக்காமல் இருப்பதன் காரணம் முன்பு கலைந்து போன கவலைகளின் இடத்தில், நாம் ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும் வாஸனையால், வேறு ஒரு கவலை குடி புகுந்து விடுகிறது. இப்படியே நம் வாழ்க்கை தொடர்ந்து போகிறது.
ஒரு குறுகிய இடைவெளியிலேயே நமக்கு அப்படிப்பட்ட ஆனந்தம் கிடைக்கிறது என்றால் அதை நீட்டி எப்போதும் அதில் நிலைத்து நிற்க வேண்டிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதுதானே இங்கு நாம் தெளியவேண்டிய முக்கியமான பாடம். அதற்கு நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்துமே பழைய வாசனைகளைத் தீர்க்கும் முகமாகவும், புதிய வாசனைகள் எதையும் சேர்க்காமல் இருப்பதாகவும் இருக்கவேண்டும். அப்படிச் செய்து வரும்போது உள்ள ஒன்றான ஆன்மா தனக்குத்தானே ஒளிர்விட்டு விளங்கும்.
நாமம், ரூபம் மட்டுமே உள்ளதால் இவ்வுலகப் பொருட்கள், செய்கைகள் எல்லாமே மாயையாகி விடுகின்றன. அவைகளும் அந்தப் ப்ரஹ்மத்தின் ஸந்நிதியில்தான் இருக்கின்றன, நடக்கின்றன. அதைத்தான் நமது அவ்வப்போதைய ஆனந்தநிலை காட்டுகிறது. அப்படி எல்லாமே பிணைந்து இருப்பதை நாம் எளிதாகக் காண இயலாது. எப்படி பாலில் இருக்கும் நெய்யைக் காண முதலில் பாலைத் தயிராக்கி, ஆடையான பின், அதைக் கடைந்து, வெண்ணையைத் திரட்டி, பின்பு அதையும் உருக்கி நெய்யை அடைகிறோமோ, அதேபோல தொடரும் நம் ஆன்மவிசாரம் எனும் பெருமுயற்சியால் ப்ரஹ்மம் எதிலும் இருப்பதை உணரலாம்.

ஆத்மபோதம் – 43 *மரமும் – நாயும்*

இதில் தக்க உதாரணத்துடன் ப்ரஹ்மம் விளக்கப்படுகிறது.. இன்று சற்று நீண்ட பதிவு. பயம் வேண்டாம். தயவுசெய்து பொறுமையாக படியுங்கள். நன்றாக விளங்கும்.
சங்கரர் சொல்கிறார்.

அனண்வஸ்தூலமஹ்ரஸ்வ மதீர்தமஜமவ்யயம் |
அரூபகுணவர்ணாக்யம் தத்ப்ரஹ்மோத்யவதாரயேத் ||

பருமையும் நுண்மையும் உற்பத்தி விநாசம்
குறுகலும் நீட்சியும் கூடாது – உருவம்
குணம் குலம் நாமமும் கொள்ளாமல் உள்ளது
உணர்க பிரம்மம் என்று உற்று

எது தூலமாகவோ, நுண்ணியதாகவோ இல்லாது, உற்பத்தி, நாசம் என்ற நிலைகளும் இல்லாது, சுருங்கி குறுகியதாகவோ, நீண்டதாகவோ இல்லாது, உருவம், குணம், குலம், பெயர் என்று ஏதும் இல்லாது இருக்கிறதோ, அதைக் கூர்த்த மதியால் உணர்ந்து ப்ரஹ்மம் என்று அறிக.

*இதன் விரிபொருள்*

ஸ்தூலமாக எது இருக்கிறதோ அதற்கு “நாம-ரூப” என்னும் நியதிப்படி பெயரும், உருவமும் இருக்கும். அது நீண்டதாகவோ, குட்டையாகவோ, ஏதோ ஒரு பரிமாண அளவுடன் இருக்கும். தூல உருவைத் தவிர அந்தப் பொருளுக்கு நுண்ணிய குணங்களும் இருந்தால், அதைப் போன்ற பல உருவங்கள் ஒரு சூழ்நிலையில் ஒன்றாய் இருக்கும்போது, அந்த ஒட்டு மொத்த சேர்க்கைக்கும் சில குணங்கள் ஏற்பட்டு ஒரு குலம் உருவாகிறது. தனித்தனியான பெயர்கள் போல, அந்தச் சேர்க்கைக்கும் ஒரு பெயர், குணம் எல்லாம் உருவாகிறது. ஒரு நிலையில் அவை இல்லாதும் போகலாம். அப்படி நேர்ந்தால் எப்படி முன்பு இருந்ததோ அப்படியே அவை மறுபடியும் உற்பத்தியும் ஆகலாம். இவையெல்லாமே உலகில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் பொருந்திய விவரங்கள்தான்.
இந்த விவரங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவைகள் ஆகையால், ஆன்ம ஸாதகன் ப்ரஹ்மத்தையும் அதே பரிமாணங்களுடன் பார்க்கலாம் என்பதால் அவை அனைத்தையும் சொல்லி, ப்ரஹ்மம் அத்தகையது அல்ல என்று முன்பு போல் எதிர்மறையாக உணர்த்தப்படுகிறது. அதாவது உலகில் உள்ளவைகள் எல்லாம் மேலே சொல்லப்பட்டுள்ளபடிதான் இருக்கின்றன; அதனால் உலகம் தெரியும்வரை ப்ரஹ்மமும் தெரியாது என்றும் உணர்த்தப்படுகிறது. அப்படியானால் அனைத்திலும் ப்ரஹ்மம் வியாபித்திருக்கிறது என்றால் என்ன பொருள்? ப்ரஹ்மத்தை விட்டுவிட்டு உலகத்திற்குத் தனியானதொரு இருப்பு இருக்கிறது என்பதுதான் தவறு என்று அதன் பொருள்.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற”

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை என்பது பொருள்.
அ-வ்யக்த,(indistinct), வ்யக்த (distinct) இவ்விரண்டும் ஸமஸ்க்ருத சொற்கள். .
“அவ்யக்த” என்பது தோற்றத்திற்கு அப்பாற்பட்டது. அது இத்தேகத்தினுள் குடிகொண்டுள்ள உயிர் அல்லது ஆத்மஸ்வரூபமாகும்.
“வ்யக்த” என்பது தோற்றத்திற்கு உட்பட்டது. அதுவே இவ்வுடல் என்பதாகும்.
இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் “யாம்” என்னும் சொல் அவ்யக்த, வ்யக்த இவ்விரண்டும் இரண்டறகலந்த ஒரு பன்மைச்சொல்லாகும். இத்தகைய தகுதியில் யாம் தம் மெய்யை காண்கின், அவ்வாறு கண்டவற்றுள் வாய்மை என்னும் ஸத்தியத்தை தவிர வேறு எதுவுமே தோன்றாது, என்னும் பொருள்பட நமக்கு எடுத்துரைக்கிறார். இங்கு இவர் சொல்லும் வாய்மை என்பதே பிரஹ்மமாம்.
நமது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் என்ன சொல்கிறது என்று காணுவோம்.
“மித்யாஜகத் அதிஷ்டானா” 735 ஆவது நாமா. அதாவது மித்யா ரூபமான இந்த பிரபஞ்சத்துக்குள் அதிஷ்டானமாக இருப்பவள் அம்பாள். ஒரு ஸ்வாமிகளின் அதிஷ்டானம் என்றால் அவரின் பூதஉடலை உள்ளே வைத்திருக்கிறார்கள் என்பதுதானே! எப்படி அந்த அதிஷ்டானத்தை ஸ்வாமிகள் என்று வணங்குகிறோமோ அதுபோல்தானே இந்த ஜகத்தையும் அம்பாளாகவே – ப்ரஹ்மமாகவே காண்பது.
உங்களுக்கு தெரியும் “கல்லை கண்டால் நாயைக்காணோம். நாயைக்கண்டால் கல்லைக்காணோம்” என்று ஒரு பழமொழி. தெரு நாயை அடிக்கன்னு நாம நினைக்கிறோம். இல்லை. இது வேதாந்த பழமொழி. சிற்பி செதுக்கிய ஒரு கல்லில் மிகவும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருக்கும் நாய் ஒன்றைப்பார்த்துவிட்டு அது நாய்தான் என்று நினைப்பது தவறுதானே? அது நாய் என்றே நினைத்துக்கொண்டு இருந்தால் அந்தக் கல் தெரியாதல்லவா? அதேபோல்தான் இதுவும். ஒரு விளக்கம் கொடுப்பதற்காக சொல்லப்பட்ட உவமைதானே தவிர, இது முழு உண்மையையும் தரவில்லை. ஏனென்றால் உலகியற்படி கல் என்றும் நாய் என்றும் இரண்டு பொருட்கள் உள்ளன. அதிஷ்டானத்திலும் இரு வேறு தன்மைதான். ஆனால் இதைப்போலவே இங்கே திருமூலர் ஒரு பாடல் சொல்கிறார்..

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே!

இந்த பாடலுக்கு நம் தெய்வத்தின் குரல் விளக்கம் இதோ அப்படியே:

“ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீக்ஷிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மரயானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது. மர யானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவான தச்சன் நெருங்கியபோது குழந்தை, “அப்பா! யானை கிட்டப் போகாதே அது முட்டும்” என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், “இது மரப்பொம்மைதான்; முட்டாது” என்று சொல்லிச் ஸமாதானம் செய்து அதையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான். குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.
மரத்தை மறைத்தது மாமத யானை,
மரத்தில் மறைந்தது மாமத யானை
திருமூலர் பெரிய யோகீசுவரர். பெரிய தத்துவங்களை லகுவாகச் சொல்லிவிடுவார் அவர். அவரது திருமந்திரத்தில் தான் மேலே சொன்ன வாக்கு இருக்கிறது. திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே!
யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர். பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான் இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை. குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் ப்ரஹ்மமயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன.
இப்போது எனது விளக்கத்தைவிட பெரியவா சொன்னது உங்களுக்கு நன்னா புரிந்திருக்கும். எல்லாமே இங்கு ப்ரஹ்மம் தான். உலகியல் பழமொழி, திருமந்திர விளக்கம் என விரிவாக சிந்தித்தோம்.
மித்யாஜகத்அதிஷ்டானனாவிலும் திருமந்திரத்திலும் சொல்லியிருப்பது ஒன்றே என்பதுதான் உண்மை. ஆனால் உலகம்-பிரம்மம் இவைகளில் இருப்பது ப்ரஹ்மம் ஒன்றே; காணப்படுவதாகத் தோற்றம் அளிப்பது உலகம். ஒரு டிவி சீரியலில் நாம் கவனமாகப் ஒன்றியிருக்கும்போது அந்தக் காக்ஷியை உண்மை என நம்புவது போலத்தான் இவ்வுலகக் காக்ஷிகளும் உள்ளன.
முன்பு சொல்லப்பட்ட ஸ்தூல பரிமாணங்கள் இல்லாததால் நம் புலன்கள் ஐந்தாலும் ப்ரஹ்மத்தை அறியமுடியாது. அதற்கு அந்த நுண்ணிய பரிமாணங்களும் இல்லாததால் அதை மனம்-புத்தி கொண்டும் அறிய முடியாது. அதனால் இருக்கும் ப்ரஹ்மத்தை அறிவதற்கு அது எப்படி இருக்கிறதோ அப்படியிருந்து மட்டுமே அறிய முடியும். இவ்வாறு அறிவதற்கு முயலும்போது, அதற்கு வருகின்ற தடைகளை நமது கூரியமதியால் உணர்ந்து அவைகள் ஒவ்வொன்றும் கிளம்பியதுமே அவைகளை விலக்கவிடவேண்டும். அதாவது இருப்பது நான், இடையில் வந்திருப்பது எண்ணங்களும், அதைத் தொடர்ந்து வரும் செயல்களுமே; அவை நானல்ல என்று ஒதுக்கப்பட வேண்டும். அப்படிப் பழகப் பழகத் தடைகள் குறைந்தும், வலுவிழந்தும் செல்லச்செல்ல, நமது இருப்பாகிய நிலை வலுவடையும். அதை நாம் இயல்பாக அடையவேண்டும். ஆக ஆன்மவிசாரம் என்பது ஸதாஸர்வகாலமும் மிகுந்த விழிப்புடன் இருந்து, இறுதியில் தன்னை முற்றிலுமாக உணர்வதுதான்.
நாளை தொடருவோம்.

ஆத்மபோதம் – 44 *இதுவும் ப்ரஹ்மமே*

இன்றைய ஸ்லோகம் நேரே வேத உபநிஷதத்திலிருந்தே வருகிறது.

யத்பாஸா பாச்யதேர்காதி பாஸ்யைர்யத்து ந பாஸ்யதே |
யேன ஸர்வமிதம் பாதி தத் ப்ரஹ்மோத் யவதாரயேத் ||

எதன் ஒளியினால் ஒளிருமே இரவி யாதி
எதனை அவை ஒளிர்க்க வேலாது – எதனாலே
இந்த உலகெல்லாம் இலகும் அதுதானே
அந்தப் பிரமம் அறி

எது தரும் ஒளியால் கதிரவன் முதற்கொண்டு அனைத்தும் உலகில் பிரகாசமாக இருக்கின்றனவோ, எதனை அவைகள் எதுவும் ஒளிரச் செய்ய முடியாதோ, எதன் ஒளியால் இந்த உலகமெல்லாம் பிரகாசமாய் இருக்கிறதோ, அந்தப் பொருளே ப்ரஹ்மம் என்று அறியவேணும்.

இதன் விரிபொருள்

நாம் காணும் வெளிச்சம் என்று தொடங்கி நம்மைக் காண வைக்கும் ஒளியைப் பற்றிய மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள் உடைய இந்த ஸ்லோகத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்கவேணும். உலகத்தை நாம் காண்பது ஏதேனும் ஒரு ஒளியைக்கொண்டே நடக்கிறது. பகல் நேரம் என்றால் அது சூரிய ஒளியாகவும், இரவு நேரம் என்றால் சந்திரன், நக்ஷத்திரம் மற்றும் ஒரு விளக்கின் துணை கொண்டோதான் நாம் எதனையும் பார்க்கிறோம். நமக்குப் பார்ப்பதற்குக் கண் இருந்து, நமது அந்தக்கரணங்களும் நம்முடன் ஒத்துழைப்பதனால் ஒன்றை நாம் காண முடிகிறது என்றாலும், ஒளி இல்லையேல் நம்மால் எதையும் பார்த்து அறிய முடியாது. இந்தத் தத்துவத்தைத்தான் *முண்டககோபநிஷத்* உண்மையை நமக்கு நினைவூட்டுகின்றது.

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி
தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. மற்றும் அக்னிதான் எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன. (இந்த உபநிஷத் வாக்கியம் பூஜையில் கற்பூர ஆரத்தியின் அனைவரும் சொல்வது என்பது நமக்கு தெரியும்.
ஏதோ கோவிலுக்குச் சென்றோம், அங்கு கிடைத்த தரிசனத்தை பார்த்தோம், பிரசாதத்தை சாப்பிட்டோம். வீட்டுக்கு வந்தாச்சு. இப்படித்தானே தினசரி நடவடிக்கைகளில் அதையும் பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிடுகிறோம். கோவிலின் தத்துவார்த்த அமைப்புகளைப் பற்றியும், அங்கு வாழ்க்கைக்கு உதவும் தத்துவங்களை உணர அங்கு நடக்கும் பூஜை விஷயங்களின் அர்த்தங்களையும் நன்கு மனதில் பதித்துக்கொள்ள வேண்டும். இதேபோல்தானே நமது வீட்டிலும் நவாவரணபூஜையில் ஆரத்தியை பார்க்கிறோம். (இன்னும் அநேக விதத்தில் பூஜையில் தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதனை தெரிந்துகொள்ள சிதானந்தஅலை படிக்கணும்.)
இந்த ஆரத்தியின் விசேஷம் என்னவென்றால்,
“நீ பார்த்துக்கொண்டிருப்பது சூரிய ஒளியில்லை, சந்திர, நக்ஷத்திர, மின்னலின் ஒளியுமில்லை. நீ பார்ப்பது ஒரு அக்னித் துண்டத்தின் ஒளிதான். அது தானாகவே ஒளிர்கின்றது என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் உண்மையில்லை. பார்த்துக்கொண்டிருக்கும் நீ வெறும் உடலா? நீ இருப்பதாக நினைக்கும் இந்த உலகம் உண்மையா? தேகம் உணர்வு இல்லாது நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எங்கே போச்சு இந்த உலகம்? அதனால் உன் தேகம் இல்லாது உன் உலகமும் இல்லை. உனக்கு தேகம் உணர்வு வரும்போது, நீ வெறும் ஸ்தூலமாகிய தேகம் மட்டுமேயா? அப்போது ஸூக்ஷ்மமான மனம், புத்தி, மற்றும் அவைகளிலும் அதிஸூக்ஷமமான நான் எனும் எண்ணமாகிய அஹங்காரம் இவைகள் இல்லையா? ஆக அவை இல்லாமல் தேகம் எங்கே இருக்கிறது? அப்போது அந்த நான் என்னும் அதிஸூக்ஷமமான எண்ணம் வருவதற்கு முன்பேயே, நீ உன்னை நான் என்று உணர்வது இல்லையா? அந்த உணர்வே *ப்ரஹ்மம்* ‘அதுவே நீ’ – நீ அதுவாக இருப்பதாலேயே எதனையும் காண முடிகிறது. (தத்வமஸி) அந்த உனது உள்ளொளியை வேறெதுவும் ஒளிர்விக்க முடியாது”
என்ற இந்த உண்மைகளை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. ஆரத்தியைப் பார்க்கும் நம்மில் எத்தனை பேர் இந்தக் கருத்தை உணர்கின்றோம்? இந்த ஸத்-சித்-ஆனந்தமய ஸத்தியத்தை விடுத்து, அதனை நமக்குக் காட்ட வந்துள்ள மாயையாகிய நாம-ரூபத்தில் அல்லவா மயங்கி நின்று விடுகிறோம்!
இதையேதான் பகவான்ரமணர் கூறுவார்….

காணும் தனை விட்டுத் தான் கடவுளைக் காணல்,
காணும் மனோமயமாம் காக்ஷி,
தனைக் காணும் அவன்தான் கடவுள் கண்டானாம்

—- என்று.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இதைத்தான் சொல்வது.
எப்போதுமே நாம் நமது இருப்பை விடுத்து இல்லாததில் மயங்குவதாலே தான், இந்த ஸத்தியத்தை நமக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்றே நமது ஆன்றோர்கள் கோவில்கள், குளங்கள், தீர்த்தயாத்திரை, மூர்த்திதரிசனம் என்று பலவற்றையும் உருவாக்கி, போற்றி, வளர்த்து வழிகாட்டிச் சென்றிருக்கின்றனர். இவைகளின் உண்மையைச் சரிவரப் புரிந்துகொள்ளாது, கோவில்களை வைத்துக்கொண்டு இன்று போல் அறமில்லாச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை;
சூரியன் உலகையே ஒளிர்விக்கலாம்; ஆனால் அது என்னை ஒளிர்விப்பதில்லை; இதற்குமாறாக எனது ஆன்மஒளியால் சூரியனின் ஒளியே தெரிகிறது என்பதையே இந்த ஸ்லோகத்தால் சங்கரர் புரிவிக்கிறார்கள்.
திருமூலரும் இதையே சொல்கிறார்.

விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

விளங்கு ஒளி மின் ஒளி ஆகிக் கரந்து
துளங்கு ஒளி ஈசனைச் சொல்லும் எப்போதும்
உளங்கு ஒளி ஊன் இடை நின்று உயிர்க்கின்ற
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே.

இதற்கு அர்த்தம் பிறகு சொல்லுகிறேன்.

ஆன்மபோதம் – 45 *தப்தபிண்டம்*

அன்று சொன்ன திருமூலர் திருமந்த்ரத்துக்கு பொருள் வேறு சமயம் பார்க்கலாம். இப்போது இன்றைய நிலவரத்துக்கு தக்கவாறு சங்கரர் தொடருகிறார் பாருங்கள்.

ஸ்வயமந்தர்பஹிர் வ்யாப்ய பாஸயன்னாகிலம் ஜகத் |
ப்ரம்ம பிரகாசதே வஹ்நிப்ரதப்தாய ஸபிண்டவத் ||

ஒளிர்த்து உலகமெல்லாம் தான் உள்வெளி வியாபித்து
ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் – ஒளிரும்
நெருப்பினில் காய்ந்து அங்கி நேர் ஒளிரும் அந்த
இருப்புண்டையைப் போலவே

நன்கு காய்ந்து எரியும் அக்னியில் இடப்பட்டுள்ள ஓர் இரும்புக் துண்டு, அக்னியைப் போலவே பிரகாசிக்கும். அவ்வாறு ஒளி விடும் துண்டைப் போலவே உலகில் உள்ள அனைத்தையும் ப்ரஹ்மம் பிரகாசிக்கச் செய்கிறது, அவை அனைத்தின் உள்ளும், புறமும் வியாபித்துத் தானும் ஒளிர்விடுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ளவேணும்.

இதன் விரிபொருள்

முந்தைய ஸ்லோகத்தில் நாம் பார்த்த கதிரவன், சந்திரன் முதலானவைகளினின்று புறப்படும் கிரணங்கள் எதன் மேல் விழுந்து தொடர்பு கொள்கின்றனவோ அவைகளை மட்டுமே பிரகாசிக்கவைக்கின்றன. அதைப் போல ப்ரஹ்மமும் தன்னுடன் தொடர்பு கொண்டவற்றை மட்டும்தானே பிரகாசிக்க வைக்கும்? எப்படி எல்லாவற்றையும் அது ஒளிர்விக்கும்? என்று வினாவுக்குத்தான் இந்த ஸ்லோகம் மூலம் எளிதில் விளங்கக்கூடிய ஓர் உதாரணம் மூலம் பதில் வருகிறது.
கொழுந்து விட்டு எரிகின்ற அக்னிப்பிழம்பில் போடப்பட்டுள்ள ஓர் இரும்புக் துண்டு. அந்தக் துண்டுக்குச் சாதாரணமாக ஓர் உருவம் உண்டு; கருமையான நிறமும் உண்டு. அக்னிக்கோ உருவம் கிடையாது; உஷ்ணமும், நிறமும் உண்டு. அக்னியில் இடப்பட்ட துண்டு சிவப்பாக நிறம் எடுத்துக்கொண்டு, தொடவும் முடியாதபடி தகிக்கிறது. அதனால் அந்த இரும்பை அக்னி என்றா சொல்லமுடியும்? ஆனாலும் நாம் பேசும்போது இரும்புசுடுகிறது என்கிறோம். அதற்குச் சுடும் தன்மை அக்னியால் வந்ததுதானே? சுடுகிறது என்பதால் அக்னி உருண்டை வடிவம் கொண்டுவிட்டது என்று சொல்லமுடியுமா? அந்த வடிவம் இரும்பினால் வந்ததுதானே? அதாவது அக்னியின் உஷ்ணம், மற்றும் நிறம் ஆகிய தன்மைகள் இரும்புக் துண்டின் உள்ளும், புறமும் படர்ந்து, துண்டின் உருவத்தையும் கொண்டுள்ளது. அதேபோல, ப்ரஹ்மமும் அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் வியாபித்துத் தனது ஸத்-சித்-ஆனந்தம் முதலான தன்மைகளை அந்தப் பொருட்களின் மேல் ஏற்றிக் காட்டுகிறது. இதுபோல் நமது அன்றாட வாழ்க்கையிலும் நிறைய உண்டு. சாதம் சுடுகிறது. பாத்திரம் சுடுகிறது. என்றெல்லாம் சொல்கிறோமே! இதுபோல்தான்.
ஆக உலகியல் பொருட்கள் அனைத்திற்குமே இருப்பு என்ற நிலையோ-ஸத், தாம் இருக்கிறோம் என்ற அறிவோ-சித், தனது இருப்பையே அறிவதால் உள்ள ஆனந்தமோ தன்னளவில் எதுவுமே கிடையாது. அவையெல்லாமே பார்ப்பவனின் தன்மைகளால் வியாபிக்கப்பட்டு, அத்தன்மைகள் அந்தப் பொருட்களுக்கு இருப்பன போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனாலேயே ஒரு பொருளின் உள்ளும், அதைக் கடந்தும் பரவியிருக்கும் அந்த உண்மையைக் “கடவுள்” என்று உருவகப்படுத்தி நாம் தொழுகிறோம். அதன் பொருளே சகல ஜீவராசிகளும் “அதுவே” என்பதும், உலகியலில் அதை அறிந்தோர், அறியாதோர், உணர்ந்தோர், உணராதோர் என்ற பாகுபாடுகள் இருக்கலாமே தவிர, வேறெந்தப் பாகுபாடுகளும் இருக்கின்றன என்பது உண்மைக்குப் மாறான செய்தியே!
இன்று பாருங்கள். எனக்கு ஜுரம் வந்தது. உடம்பு சூடுகிறது என்று மருந்து சாப்பிட்டேன். உண்மையில் உடம்பா சுட்டது? இல்லை. எப்போதுமே தேகத்தில் சூடு உண்டு. பஞ்சபூதங்களால் ஆனதால் எப்போதுமே சரியா அளவில் அக்னியின் கலப்பு இருக்கும். ஆவரேஜ் எத்தனை இருக்கணுமோ அதைவிட உள்ளே உள்ள அக்னியானது அதிகமாவதால் உடம்பு சுட்டது. அப்போது ஜுரம் என்கிறோம்.
இந்த உண்மையை ஆராய்ந்து அறிந்துகொள் என்று சொல்லி, ப்ரஹ்மத்தின் ஸ்வரூப லக்ஷணங்களை முன்பே தொடங்கி இந்த ஸ்லோகம் வரை விவரமாக விளக்கப்பட்டுள்ளது.
நாளை பார்க்கலாம்.

ஆன்மபோதம் – 46 *கேள்விவிசாரம்*

உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன். ஸ்ரீஆவுடையம்மாள் என்ற ஒரு ஞானி பற்றி. அவளைப் பற்றி முகநூலில் ஒரு பதிவுகூட எழுதியுள்ளேன். அவள் பாடல்கள் அத்தனையும் வேதாந்த – ஆத்ம சம்பந்தமானவை. அவள் பாடல் ஒன்றில் ஒரு கேள்வியை வைத்திருக்கிறாள்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணம் ஜடம், ஆத்மாவோ நிர்விகாரி, விஸ்வன், தைஸஜன், பிராக்ஞன் என்கிற சிதாபாஸனோ மாயை இதில் அனுபவமான சுகதுக்கம் யாருக்கு? இதுதான் கேள்வி.
கேள்வியை புரிந்துகொள்ள நிறைய வேதாந்தம் படிக்கணும், அதாவது ஸ்ரீசங்கரரின் விவேகசூடாமணி, ஸ்ரீவாசுதேவபிரஹ்மத்தின் வாசுதேவமனனம் என்ற நூல்கள் முதல்படி. நாம் அதையெல்லாம் முதலில் உங்களுக்கு படித்து பாடம் சொல்லாது நேராக (Direct) ஆக முக்கால் தூரத்திலிருந்து தொடங்கி விட்டேன். ஏனென்றால் காலம் நெருங்கிவிட்டது. சென்றடைய வேண்டிய தூரம் மிக அருகில் வந்து விட்டதாக அறிகிறேன். எனவே சொல்லிவிட்டால் என்றாவது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற உறுதியில் பாடம் நடக்கிறது. எனக்கும்- சங்கை ஊதி வைப்போம், விடியும்போது விடியட்டும் என்பார்களே அதுபோல் பல வேலைகளுக்கு மத்தியில் பாடம் நடத்தினார். ஆனால் அன்று புரியத்தான் இல்லை. ஆனால் அவர் கருணாமூர்த்தியாச்சே! ஓரளவு புரியவைத்துவிட்டார். உங்களுக்கும் அப்படித்தான். படியுங்கள். சிந்தியுங்கள். நிச்சயம் ஒருநாள் ஒளி கிடைக்கும். சரி.
இடையில் வந்த கேள்வியையும் இடையிலேயே சிந்தித்துவிடுவோம் என்றுதான் இன்றே இப்போதே எழுதிவிட்டேன்.
இந்த கேள்வி பல ஆண்டுகளாக மனதில் விடை காணமுடியாத நிலையில் மனதில் ஓடினது. சுந்தரும், நானும் இதுபற்றி பலமுறை விசாரித்துள்ளோம். இன்று அதிகாலை ஓரளவுதான் பதில் சமாதானம் கிடைத்தது. குருவருளே! ஆனால் எழுதவோ, பேசவோ, விசாரம் செய்யவோ தான் உபயோகம். ஆத்மானுபவம் வரணுமே! விரைவில் வரவேண்டுவோம்.
இதனை நாம் இங்கு சற்று சிந்திப்போமா!
அவஸ்தையை அனுபவிப்பனிடம் தான் சாக்ஷித்துவம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, அவஸ்தாசாக்ஷித்துவம் அந்நியனிடம் இருப்பது போல காணப்படுகிறது! இந்த அவஸ்தையை உடையவன் யார்? அந்தக்கரணத்தில் பிரதிபிம்பித்த சிதாபாஸனே! அவன் தான் (மாயா) பொய்யானவன். அவனே ஜீவன் எனப்படுகிறான். ஜீவனோ விகாரமுடையவன். ஆத்மாவோ நிர்விகாரி. எனவே ஆத்மாவுக்கே இந்த சாக்ஷித்துவம் பொருந்தும். சரியா?
அந்தக்கரண பிரதிபிம்பத்தினால்தான் ஆத்மாநிர்விகாரி என்பது தெரியும். இந்த அந்தக்கரணமும் அதன் பிரதிபிம்பமான ஜீவனும் ஆத்மாவை அறியாது. ஏனெனில் அறியப்படுவதாகவும், த்ருச்யம் என பார்க்கப்படுவதாகவும் உள்ள ஆத்மா த்ருக்ரூபன். அதாவது பார்க்கின்ற ஸூபாவமுடையவன்.
காணப்படுகின்ற குடம் காண்பவனை அறியாதே! ஆனால் காண்பவனோ ஸ்வயம்பிரகாசமுடையவன் ஆதலால் தன்னைத் தான் அறிந்து கொள்ள முடிகிறது. குடத்தையும் அறியமுடிக்கிறது. ஆகவே காணப்படுகின்ற அஹங்காரமும், அதன் அவஸ்தை, மற்றும் வியாபாரங்கள் அத்தனையும் ஆத்மாவைத் தொடாது.
இப்படி ஆத்மாவை எவன் ஒருவன் அவஸ்தாத்ரயசாக்ஷியாகக் காண்கிறானோ அவனே *ஜீவன்முக்தன்* இப்படியாக வேறு ஒரு கோணத்தில் இந்த ஜீவமுக்த லக்ஷணத்தை அறிகிறோம். இதனை அங்கேயே சொல்லி இருக்கணும். இன்றுதானே அவர் சொல்லவைக்கிறார். ஏனெனில் சங்கரரின் இன்று அடுத்த ஸ்லோகம் இது சம்பந்தமாக பேசுகிறது. என்ன பொருத்தம் பாருங்கள்.

ஜகத்விலக்ஷணம் ப்ரஹ்ம ப்ரஹ்மணோன் யன்ன கிஞ்சன |
ப்ரஹ்மான்யத் பாதி சேன்மித்யா யதா மருமரிசிகா ||

பிரமம் உலகில் பிறிதாகும் அந்தப்
பிரமத்தணுவில் பிறிதாய்ப் – பிரமத்திற்கு
அன்னியம் ஏதும் அவிர்ந்தால் அது மித்தை
உன்னுக கானல் நீர் ஒத்து

அறியும் பிரஹ்மம் அறியப்படும் உலகத்திற்கு வேறான இயல்பு உடையது. பிரஹ்மத்திற்கு அப்பாற்பட்டு வேறெந்தப் பொருளும் இல்லை. பிரஹ்மத்திற்கு அன்னியமாக வேறெதுவும் தோன்றினால் – அது உண்மையில் இல்லாததாயினும் காட்சிக்குத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்த்தோற்றமே!

இதன் விரிபொருள்

எங்கும் எப்போதும் இருப்பது பிரஹ்மம் என்றால், காணப்படும் உலகப் பொருட்களைக்கொண்டே பிரஹ்மத்தை அறிந்து கொள்ளக்கூடாதா என்ற கேள்விக்குப் பதில் அளிப்பது போல இந்தச் செய்யுள் உள்ளது.
அனைத்தும் பிரஹ்மமே என்றாலும், உலகின் இயல்பும், பிரஹ்மத்தின் இயல்பும் வெவ்வேறானது. உலகம் நிலையில்லாதது. வந்துபோகும் இயல்புடையது. அதனால்தான் நமது விழிப்பு நிலையில் காணப்படும் உலகம் ஆழ்உறக்கத்தில் அறியப்படுவதில்லை. நமது கனவிலோ நாம் வேறோர் உலகத்தையே உருவாக்கிக் கொள்கிறோம். உலகின் நிலை இப்படி இருக்கும்போது பிரஹ்மமோ எப்போதும் உள்ளது. நிலையானது.
உலகம் ஓர் அறிவற்ற ஜடம், பிரஹ்மமோ அறிவுமயமானது. உலகம் துன்ப மயமானது. பிரஹ்மமோ ஆனந்தமயமானது. அதனால் உலகம் பிரஹ்மம் அல்ல. நாம் முன்பு கண்ட தீயில் இட்ட ஓர் இரும்புக் துண்டு தீயின் தன்மையை எடுத்துக்கொள்வது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் பிரஹ்மம் வியாபித்து இருப்பதால், அவைகள் பிரஹ்மத்தின் தன்மைகளை எடுத்துக்கொள்கின்றன. இப்படியாக பிரஹ்மத்திற்கு அப்பாற்பட்டு எந்தப் பொருளும் இல்லை என்பதால், பிரஹ்மத்தை விடுத்து உலகத்தின் ஸத்தியத்தை அறியமுடியாது. அதனால் உலகில் உள்ளவைகளைக் கொண்டு பிரஹ்மத்தை அறியமுடியாது என்றாகிறது.
மேலும் பிரஹ்மத்திற்கு அன்னியமாக உலகம் இருப்பதாகத் தோன்றினால், அது இருப்பது போலத்தோன்றும். கானல்நீர் என்கிறோமே அதுபோல ஒரு பொய்க்காக்ஷி தான். உண்மையை அறியாதவனுக்கு இல்லாத கானல்நீர் இருப்பதாகத்தான் தோன்றும். உண்மையை அறிய முயற்சிப்பவனுக்கே அது மாயை என விளங்கும்.

ஆத்மபோதம் – 47 *ஞானக்கண்*

நமது இந்த ஆத்மபோதபாடம் வருகிற 50 பாகத்துடன் நிறைவுறும் என எண்ணுகிறேன். தொடர்ந்து வேறு பாடம் படிப்போம். இதில் நமக்கு உலகையும் உள்ளத்தையும் காண ஞானசக்ஷு என்கிற ஞானக்கண் கொடுக்கிறார். அதைக்கொண்டு சிந்தியுங்கள். நாம் வேண்டுவது கிடைக்கும். காண்பது அத்தனையும் ப்ரஹ்மமாக காணும் தன்மை ஸித்திக்கும். இது குரு ஸாசனம்.

ஸர்வகம் ஸச்சிதாத்மானம் ஞானசக்ஷுர்நிரீக்ஷதே |
அக்ஞான சக்ஷுர்நேக்ஷேத பாஸ்வந்தம் பானுமந்தவத் ||

சருவத்தும் சார்ந்த தாம் சச்சிதானந்தப்
பிரமத்தை ஞானக்கண் பெற்றான் – தரிசிப்பான்
ஞானக்கண்ணில்லாதான் நண்ணானே காட்சி ஒளிர்
பானுவை அந்தன் போலப் பார்

எங்கும் நிறைந்து வியாபித்துள்ள ஸத்-சித்-ஆனந்தமே உருவாயுள்ள ப்ரஹ்மத்தை ஞானக் கண் கொண்டவனே தரிசிக்க முடியும். அவ்வாறு ஞானக்கண் இல்லாதவன், அதி பிரகாசத்துடன் கூடிய சூரியனை ஒரு குருடன் பார்க்க முடியாதது போல, அதை அணுகவே முடியாது.

இதன் விரிபொருள்

ப்ரஹ்மம் எங்கும், என்றும் இருந்து, எதிலும் வியாபித்துள்ளது என்றால் அது இங்கு, இப்போது தெரிய வேண்டுமே என்று கேட்பவர்களுக்கு இங்கே சங்கரர் பதில் சொல்கிறார். ஆதி காலத்தில் நாம் கண்ணால் பார்ப்பதுவும், காதால் கேட்பதுவும் வெவ்வேறு வழிமுறைகளால் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவை மட்டுமல்லாது வேறு பல வகையான தகவல்களும், வெவ்வேறு அலைக் கற்றைகளால் வந்தடைகின்றன என்பதை வளர்ந்து வந்த விஞ்ஞானம் நமக்குக் கற்பித்தது. எந்த அலை வரிசையில் ஒன்று வருகிறதோ அதை அறிந்துகொள்ள அதற்கேற்ற கருவி நம்மிடம் இருக்க வேண்டும். ஒளியைப் பார்ப்பதற்கு நமக்குக் கண்ணும், ஒலியைக் கேட்பதற்கு நமக்குக் காதும் என்று இருவேறு கருவிகள் இருக்கின்றன. அதேபோல நாம் கேட்கும் ரேடியோ மூலம் வரும் பேச்சுக்களும், பாட்டுக்களும் வெவ்வேறு அலை வரிசைகளில் வருகின்றன. (அதை Ether என்றோம்.) அவ்வாறு வரும் ரேடியோ விவரங்களை நாம் கேட்க நம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள ஒரு ரேடியோகருவி தேவைப்படுகிறது. இப்போது காக்ஷிகளை பார்ப்பதற்கும் கருவி – டிவி வந்துவிட்டது. இதைப் போல ப்ரஹ்மத்தை உணர்வதற்கும் அதற்கு உரிய சாதனம் நமக்குத் தேவைப்படுகிறது.
நமது ஊனக்கண்ணால் நமக்கு முன்பு உள்ளதைத்தான் பார்க்க முடியும். அப்படியும் கூட நம் முகத்தையே நாம் பார்க்க முடியாது; அதன் அமைப்பு அப்படி. ஞானம் எனப்படுவது நமது *உள்நிலையைப்பற்றியஅறிவு*. அதை உணர்வதற்கு அதற்கேற்ற கருவியான *ஞானக்கண்* வேண்டும். அந்தக் கண்ணைப் பெறுவதற்குத்தான் முன்பே சொல்லியிருக்கும் சிரவணம், மனனம், நிதித்யாஸனம் போன்ற வழிமுறைகள் தேவை. கதிரவன் என்னதான் பிரகாசமாக இருந்தாலும், ஊனக்கண் இல்லாதவன் அதைப் பார்க்க முடியாதே! அதே போல ஞானசூரியனான *ப்ரஹ்மம்* என்னதான் பிரகாசமாக இருந்து, ஸர்வவ்யாபியாக இருந்தும் அதை உணரக்கூடிய ஞானக்கண் இல்லாதவன் எங்கும், எப்போதும் நிறைந்துள்ள ஸத்-சித்-ஆனந்தம் என்ற தன்மைகளைக் கொண்ட ப்ரஹ்மத்தை அறிய முடியாது.
இங்கு கண் என்று சொன்னபோது மற்ற இந்திரியங்களையும் சொன்னதாகவே ஆகும். அதனால் உலகில் உள்ளவைகளை நமக்கு அறிவிக்கும் புலன்கள் எதையும் கொண்டு நம்மால் ப்ரஹ்மத்தை உணர முடியாது என்பதே இங்கு சொல்ல வந்த கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள வேணும்.
தொடர்ந்து நாளை பார்ப்போம்….

ஆத்மபோதம் – 48 *ஞானஎரி*

ஆடி பதினெட்டாம் பெருக்கில் பொங்கதொடங்கிய நமது ஆத்மபோதம் என்கிற வெள்ளம் புரட்டாசி நவராத்திரியில் – கலைகளுக்கு அதிதேவதையான ஸ்ரீஸரஸ்வதிதேவியின் பூஜைதினத்தில் ஸத்குருவின் அவ்யாஜகருணையால் நிறைவெய்துமோ என நினைக்கிறேன். எல்லாம் அவர் கிருபை.
நேற்று ஞானக்கண் தேவையானால் சிரவணம், மனனம், நிதித்யாசனம் என்ற ஸாதனங்கள் தேவை என பார்த்தோம். அதையே இந்த ஸ்லோகத்திலும் வலியுறுத்துகிறார். அதனால் தொடர்ந்து நம்மை அவர் தான் சொல்லவந்த ஆத்மபோத நிலையை இங்கு நிலை நிறுத்துகிறார்.

ச்ரவணாதிபிருத்தீப்த ஞானாக்னி பரிதாபித: |
ஜீவ: ஸர்வமலான்முக்த: ச்வர்ணவத்யோததே ஸ்வயம் ||

சிரணவம் ஆதிகளால் தேசுறு ஞான
எரியினில் காய்ச்சி எடுக்கச் – சருவ
மலமும்போய்ச் சீவன் மறுவில் பொன்போல் நிர்
மலனாகித் தான் ஒளிர்வான்

கேட்டல், சிந்தித்தல், தெளிதல் போன்ற வழிகளில் பிரகாசமடைந்த மனதை கொழுந்து விட்டெரியும் ஞான அக்னியில் புடம் போட்டு எல்லா விதமாசுகளும் நீக்கப்பட்ட ஜீவன், நெருப்பினில் புடம் போட்டு மாற்று ஏறிய தங்கத்தைப் போல ஜொலிக்கின்றான்.

இதன் விரிபொருள்

சிரவணம் என்ற கேட்டல், மனனம் அதைப்பற்றி சிந்தித்தல், நிதித்யாசனம் என்கிற கேட்டுத்தெளிதலும், அதன்படி பயிற்சிகள் மேற்கொள்ளுதலுமான வழிகளைப் பின்பற்றியும், கேட்டறிந்த விவரங்களால் மனத்தெளிவை ஸாதகன் அடையவேண்டும். அப்போது மனமும் மனத்தால் உருவாகும் எண்ணங்களும் இருக்கும். அவை ராஜஸ அல்லது ஸாத்விக குணங்களோடு இருக்கும். அந்த அளவில் இயக்கங்களும் நம்மிடம் தொடரும்.
அப்போது தனக்கு நேரும் பல வகை அனுபவங்களையும் எடை போட்டு, அவை அனைத்தையும் தத்துவரீதியில் “அவை யாருக்கு வருகிறன்றன? அவை ஏன் எனது விழிப்பு நிலையில் மட்டும் காணப்படுகின்றன? அவை காணப்படாத ஆழ்உறக்கத்திலும் நான் இல்லையா? அப்படி இருப்பதால்தானே இப்போதும் நான் இருக்கிறேன்?” என்பன போன்ற கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டு தனது ஞானயக்ஞத்தைத் தொடங்கவேண்டும். அவ்வாறு பல காலம் நீண்டு தொடரும் யக்ஞத்தின் ஞானாக்னியில் நம்மை மறைக்கும் திரைகள் ஒவ்வொன்றாக விலக, நமது உண்மை நிலையை மறைத்த மாசுகள் அனைத்தும் நீங்கும். அந்த நிலையை அடைந்தவன் எப்படி இருப்பான்? தங்கத்தை நெருப்பில் புடம் போட்டு, அதில் உள்ள மாசு-மறுக்கள் என்ற மலங்கள் நீக்கப்பட்டு சுத்தமான தங்கமாக சுடர் விடுவதைப்போல் இவன் ஒளிர்வான் என்கிறார்.
தங்கத்திற்குத் தானாகவே ஒளி வீசும் தன்மை உண்டுதான். இருந்தாலும் மேலும் அதனுடன் மற்ற மாசுக்கள் சேர்வதால் அதன் இயற்கை ஒளி எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை. இருந்தாலும் அதனை புடம் போட்டால் தானே மாசு, மறுக்கள் நீங்கி தங்கம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பும். அதே போல ஜீவனது எந்தவிதமான ஆசை, கோபதாபங்கள் போன்ற மலங்களால் ஆன்மா பாதிக்கப்படுவதில்லை. ஜீவனது மலங்கள் நீங்க நீங்க ஆன்மாவின் வீச்சு அதிகமாகி அதன் இயல்பான ஒளிநிலைக்குத் திரும்புகிறதே தவிர, எந்தப் பயிற்சிகளாலும் ஆன்மா புதிதாக எந்த நிலையையும் அடைவதில்லை. விசாரம், பயிற்சிகள், ஸாதனைகள் அனைத்துமே ஜீவனின் கர்மவினைப் பயனாய் அடையப்பெற்ற மலங்களை அகற்றுவதற்கு மட்டுமேதான். மேகங்கள் விலகிய சூரியன் ஒளிர்வது போல, சூழ்ந்திருந்த மலங்கள் விலகிய ஆன்மா பிரகாசமாக ஒளிரும். இப்படி ஒளிரும் இந்த ஞானஒளியின் தன்மை பற்றி அடுத்து சொல்கிறார். இங்கு ஸ்ரீபகவான்ரமணர் இந்த ஞானாக்னியை என்ன அழகாக *ஞானஎரி* என்று தான் தமிழில் சொல்கிறார். இப்படி ஒரு தமிழ்ஞானியை நாம் பெற்றது மட்டுமில்லை, இன்று அவர்களே நமக்கு ஆத்மபோதம் பாடம் போதிக்கும் முகமாக அமைந்துவிட்டது என்ன பாக்கியம். ஸ்ரீபகவான்ரமணரது ஆராதனா ஸ்ரீசக்ரத்தை பெற்று தன்னுடைய தங்க கையால் பிரதிஷ்டை செய்யும் பாக்கியம் பெற்ற குருநாதரை நான் அடைந்தது என் பூர்வஜன்ம பாக்கியமே!
பாக்கியங்கள் தொடரட்டும்….

ஆன்மபோதம் – 49 *உதயரவி*

ஒரு நூல் படித்தோமானால் முடிவில் அதன் ஸாரத்தில் மனம் தோய்ந்திருக்க வேணும் என்பது தத்துவம். அதுபோல் நமது மனமும் *ஆன்மபோதத்தில் தோயட்டும்* என்ற பிரார்த்தனையுடன் இன்றைய பாடத்துக்கு போவோம்.
பகவான் ரமணர் சொல்வார்கள் தனது உபதேச உந்தியார் என்ற நூலில்….

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற.

இதன் பொருள் என்னவென்றால் வினைகளின் பலன் அவற்றை அனுபவிப்பதனால் நாசமடைகின்றது. ஆனால் வாஸனாரூபமான கர்ம பிரவிருத்தியானது விதைவடிவமாக நின்று ஜீவனை மீண்டும் மீண்டும் கர்மத்தையே செய்யும்படி தூண்டி, பிறவிக் கடலில் ஆழ்த்தி விடுமேயன்றி, மோக்ஷ வீட்டினை அடையச் செய்யாது. என்கிறார். எனவே நாம் இத்தனையும் படித்துவிட்டு மறுபடியும் கருவடையும் குழியில் விழக்கூடாது என்பதில் உறுதியாய் நிற்போம்.
மேலும் சங்கரபகவத் பாதாள் அவர்கள் செய்த பாடல்களிலேயே ஸாதனபஞ்சகம் தான் மிக உயர்வு என்பார்கள். அவர் மறைவுக்கு முன் பாடியது. அதில் சொல்வார்…
“இது பகவான் செய்த லோகம். ஸர்வ லோக ராஜாவான பகவானின் குடிமக்களே ஜனங்கள் அத்தனை பேரும். நாமும் அவனுடைய பிரஜை. எனவே இவர்களெல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள். நம் சகோதரர்கள். ராஜாவாக இருக்கிறதோடு அவனே நம் அம்மையும் அப்பனும். நாம் அத்தனை பேரும் அவனுடைய குழந்தைகள். ஆதலினால் ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்கள். இத்தனை குழந்தைகளும் இருக்கிற ஜனசமூகக் குடும்பம் ஒற்றுமையாக, சௌஜன்யமாக வாழவேண்டுமென்றே நமக்கு வேததர்மம் வெவ்வேறு காரியங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றை நம்முடைய சொந்த ஆசைகள், லாபங்களை நினைக்காமல் செய்து பகவானின் குடும்பம் ஒழுங்காக நடக்கச் செய்வதே நம் கடமை என்ற உணர்ச்சி வருகிறபோது அதிலேயே ஈஸ்வர பக்தியும் உட்புகுந்து நிற்கும். இப்படி பக்தி உணர்வோடு கர்மம் செய்தாலே பகவத் கிருபையைப் பூரணமாக கிரஹிக்க முடியும். கர்மத்தையே பகவானின் பூஜையாகச் செய்கிற நிலை வருவதற்கு ஆரம்பமாகத் தனியாகப் பூஜை, பஜனை எல்லாம் செய்து பகவானை ஸ்மரிக்க வேண்டியதும் அவசியம்.” என்று நமது பூஜையின் முக்கியத்தையும் சொல்லி ஞானத்தையும் புகட்டுகிறார்கள். அருட்சக்தியின் ரிதம்பராஞான தத்துவத்தை அவர்கள் கடைசீ காலத்தில் சொல்கிறார்கள் பாருங்கள். நேற்று எனது தனி பதிவும் அதுபற்றி தானே!
*ஞானரவி* புறப்பட்டால்தான் நமது அறியாமை அழியும். அதற்குதான் இந்த ஆத்மபோதம் படிக்கிறோம். இன்னும் கொஞ்சம் ஸ்லோகம் பாக்கி இருக்கே! பார்க்கலாம்.

ஹ்ருதாகாஷோதிதோ ஹ்யாத்மா போதமானுஸ்தமோபஹ்ருத் |
ஸர்வவ்யாபி ஸர்வதாரி பாதி பாஸ்யதேகிலம் ||

இதயவெளி தோன்றி இருளையழி ஞான
உதயரவி ஆன்மா ஒளிரும் – நிதமுமே
எல்லாவற்றும் பரவி எல்லாமும் தாங்கி நின்(று)
றெல்லாம் ஒளிர்விக்கும் எண்

அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் கதிரவன் உதிப்பதும், மறைவதும் என்ற மாறுபாடு இல்லாது எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அது எல்லாப் பொருட்களிலும் வியாபித்து, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் தனது ஒளியினால் ஒளிர்விக்கச் செய்யும் என்று எண்ணுவாயாக.

இதன் விரிபொருள்

நமது ஊனக்கண்ணைப் பொருத்தவரை நாம் காண்பனவற்றுள் கதிரவன் ஒன்றே தானே ஒளிர்வதாகவும், அதிலும் மிகப் பிரகாசமானதாகவும் இருப்பதால்தானே தானே ஒளிரும் ஆன்மாவிற்கு அதை ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. நமது உண்மை நிலையைப் பற்றி ஸத்குருமூலம் நன்கறிந்த ஒருவன் அதை உணர்ந்துகொள்ள, ஸாதாரணமாக வெளியுலகை நோக்கியுள்ள தனது பார்வையை உள்முகமாகத் திருப்பி, தியானம் செய்து அதனால் இடைவிடாது இருக்கும் உள்ளொளியை அனுபவத்தில் உணர்வதே *ஆன்மபோதம்* என்று சொல்கிறார்.
கதிரவன் உதித்ததும் வேறு எந்த முயற்சியும் இல்லாது இருள் தானே அகன்றுவிடுவது போல ஆன்மாவைப்பற்றிய ஞானம் பிறந்ததும் நம் உண்மை நிலை பற்றி நமக்கு முன்பு இருந்த அறியாமையும் தானே விலகுகிறது. ஆனால் கதிரவனோ காலத்திற்குக் கட்டுப்பட்டு காலை, மாலை என உதிப்பதும் மறைவதும் என இருக்க, அனைத்தையும் ஒளிர்விக்கும் ஆன்மாவைப் பற்றிய போதமோ எப்போது உதிக்கிறதோ அதன்பின் அதற்கு அழிவோ, மறைவோ இல்லாது எப்போதும் நின்று நிலைத்து விடுகிறது. எப்படி கதிரவனின் ஒளியில் நாம் உலகில் உள்ள அனைத்தையும் காண்கிறோமோ, அதே போல ஆன்மஒளியினாலேயே நமது அனுபவங்கள் எல்லாமே நிகழ்கின்றன. ஆன்மாவின் தன்மைகளே உலகில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் வியாபித்து நமக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தருகின்றன. ஆனால் அதை அறியாத போது நாம் அவைகள் எல்லாம் அந்தந்தப் பொருட்களின் தன்மைகள் என்று தவறாக எண்ணுகிறோம். அந்த அறியாமையைப் போக்குவதே *ஆன்மபோதம்* .
அதனால் ஆன்மாவே தனது ஒளியால் அனைத்துப் பொருட்களையும் காட்டுவதோடு அல்லாமல், அனைத்திற்கும் ஆதாரமாகவும் அமைகிறது. அது இல்லாமல் அனுபவிப்பவன் இல்லை என்பதாலும், அனுபவிப்பவன் இல்லாமல் அனுபவிக்கப்படும் பொருட்கள் எதுவும் இல்லை என்பதாலும் அதுவே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது.
நாளை சரஸ்வதி பூஜை. அவளை வேண்டி தொடருவோம்……

ஆன்மபோதம் – 50 *நான் எங்கும் நிறைந்தவன்*
(நிறைவுப் பகுதி)

“அவனருளால் அவன் தாள் வணங்கி” என்று மணிவாசகப்பெருமான் சொன்னபடி நாம் குருவருளால் குருதாள் வணங்கினோம். அதனால் பதினெட்டாம்பெருக்கு அன்று தொடங்கிய நமது ஆன்மபோதம் தொடர் பாடம் இன்று நவராத்திரி இறுதியான கலைமகளாம் ஸரஸ்வதி தேவியின் பூஜை தினத்தில் இந்த முதல் பாடங்களை நிறைவு செய்ய இருக்கிறோம். ஆடி 18 ல் தொடங்கினது அக்டோபர் 18 ல் நிறைகிறது. இதுவே நல்ல சகுனம்.
இந்த பகுதி சரியாக 50 ல் நிற்கிறது. மாத்ருகை என்கிற அம்பாள் அக்ஷரங்களில் நிறைகிறது நமக்கு ஆசி கூறவே! நாம் நினைத்தோமா? இது இன்று கலை ஞானத்தில் நிறையும் என்று.
அப்பாடா! ஆன்மபோதம் விட்டது என்று நினைக்காதீர்கள். ஆன்மபோதத்திற்குள் நம்மை திருவருள் கூட்டிவிட்டதே என்று நினையுங்கள். ஸ்ரீபகவத்பாதாள் பிரஹ்ம ஸூத்ரபாஷ்யம், உபநிஷத்பாஷ்யம், மற்றும் பகவத்கீதைக்கு உரை என்று எல்லாம் செய்தார்கள். இவை கற்றறிந்தவர்கள் படிப்பவை. பின் பிரகரணகிரந்தங்கள் என்று சிறிய பெரிய நூல்கள் வேறு செய்தார்கள். அதுவும் நம்போன்றவர்களுக்கு கடினமே! எல்லாம் எதற்கு? தன்னியறியவே! “தன்னையறிந்தால் தனக்கொரு கேடில்லை” என்பர். இவ்வாறு தன்னையறிய புறப்பட்ட நமக்கு (தன்னியறியவே தான் நமக்கு ஸ்ரீவித்யாஉபாசனையே வந்தது.) அவர்களது ஆன்மபோதம் கண்ணில் பட்டது. நமது பயணத்தை தொடங்கி விட்டோம் இனி நிற்காது என்று உறுதி கொள்வோம். அதற்கு காலமோ தேசமோ இடையூறே செய்யாது. ஏனெனில் குருவருள் நம்மை அழகாக இட்டுசெல்லும். கவலை வேண்டாம்.
இதுவரை பல ஸ்லோகங்களில் பல வழிகளில் நமக்கு ஆத்மஞானத்தை ஊட்டினார். இந்த இறுதி ஸ்லோகத்தில் என்ன சொல்கிறார் என்று காணுவோம்.

திக்தேசகாலாத்யநபேக்ஷ்ய ஸர்வகம்
சீதாதிஹ்ருன்னித்யசுகம் நிரஞ்சனம் |

ய: ஸ்வாத்ம தீர்த்த பஜதே விநிஷ்கிய:
ஸ ஸர்வவித் ஸர்வகதோம்ருதோ பவேத் ||

திக்கு இடம் காலம் முதல் தேடாமல் என்றும் எத்
திக்கும் ஆர்ந்தே குளிர்முன் தீர்ப்பதாய் – எக் களங்கும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்துள் தோய்
வுற்றவன் யார் செய்கை ஒன்று இன்றி – மற்றவன்
யாவும் அறிந்தோனாய் எங்கும் நிறைந்து ஆர் அமிர்தன்
ஆவன் எனவே அறி. (பஃரொடை வெண்பா)

திசை, தேசம், காலம் முதலியவற்றைத் தேடி அலையாமல், எப்போதும், எந்தத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து குளிர், வெப்பம் போன்றவைகளை நீக்க வல்லதாய், எந்தவிதக் களங்கமும் இல்லாது, எப்போதும் ஆனந்தவடிவமே கொண்ட தனது ஆத்மவடிவ புனித ஊற்றுக்குள்ளேயே மூழ்கித் தோய்ந்திருப்பவன் எவனோ, அவனே மேலும் செய்வதற்கு ஏதுமின்றி, எல்லாவற்றையும் அறிந்தவனாய், எங்கும் நிறைந்து ஒளிர்பவனாய், மரணமில்லா பெருவாழ்வு வாழ்பவனாய் ஆகிறான் என்பதை அறிந்து கொள்.

இதன் விரிபொருள்

இந்த ஸ்லோகத்துக்கு தமிழ் வெண்பாவில் பொருள் எழுதிவந்த பகவான்ரமணர் அவர்கள் இங்கு 6 அடி வெண்பா பண்ணியிருக்கிறார். இது பஃறொடை வெண்பா என்ற வகையை சேர்ந்தது இது. நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா. இந்த பஃறொடை வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும்.
ஏன் இந்த இலக்கண வகை பற்றி இங்கே சொல்கிறேன் என்றால் இதுவரை 4 அடிகள் மட்டுமே எழுதினார். இவர்கள் பள்ளிக்கூடத்தில் தமிழ் இலக்கணம் முழுமையாக படிக்கவில்லை என்பது தெரியும். பின் எப்படி இது சாத்தியம்? தவம் காரணம். அருணாசலம் காரணம். பள்ளியில் படிக்காத பாடங்களே தவத்தினாலே கைகூடும் என்றால் நாமும் ஏன் அதனை ஏற்கக்கூடாது? முன்ஜென்ம விட்டகுறை தொட்டகுறை என்பர். அதுவும் சாத்தியமே! நிறைய நம்மிடம் சான்று உள்ளது. நாம் இப்போது அதை ஆராய, சிந்திக்க வரவில்லை.
நிறைவாக வரும் இந்த ஸ்லோகம் ஆன்மபோதம் என்ற இந்த நூலின் சாராம்சத்தையே இது கொடுக்கிறது. *ஆன்மஞானம்* பெறுவதற்கு உரியவர்கள் எவர் என்று முதல் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருந்தது போல, இந்த இறுதி ஸ்லோகத்தில் அதை அடைவது எப்படி என்றும், அதைப் பெறுவதினால் என்ன பயன் என்பது பற்றியும் சுருக்கமாகச் சொல்லுகிறார்.
நாம் நம்மை முதலில் ஸ்தூலமான தேகஅளவில் குறுக்கிக் கொள்வதால் நமது வாழும் காலம், நாமிருக்கும் திசை மற்றும் தேசம் என்ற அளவிலும் கட்டுப்படுவதாக எண்ணுகிறோம். நான் புதுடில்லி, நீங்கள் சென்னை, பெங்களூர், கும்பகோணம், அமெரிக்கா என்றெல்லாம் தேசத்தால் பிரிகிறோம். அமெரிக்காவில் இரவு என்றால் இந்தியாவில் பகல் என்று காலத்தால் பிரிகிறோம். இதை வேதாந்தம் தேச,கால,பரிச்சின்னம் என்று சொல்லும். இதெல்லாம் இல்லாமல் காலத்தால் பிரியாத, இடத்தால் பிரிவுபடாத, எப்போதும், எங்கும் என்றும் இருக்கக்கூடிய, ஒன்றைத்தேடி அலையும்போது அந்தத் தன்மைகளைக் கொண்டவனாக கடவுளை – நம் பராசக்தியை முன்னிறுத்தி சரணடைகிறோம்.
அப்போதும் நமது குறுக்கும் தன்மைகள் நம்மை விட்டகலாததால் இறைவன் இப்படி இருப்பானா அல்லது அப்படி இருப்பானா, இங்கிருப்பவனா இல்லை அங்கிருப்பவனா என்ற சந்தேகங்கள் நம்மை விடாது. அதற்காகச் சில பல உருவங்களை உண்டாக்கி வைத்துவிட்டு, அவைகளை வழிபடுவதற்கு அவைகள் இருக்கும் இடத்தை நாடிச் செல்கிறோம். அதனாலேயே மூர்த்தி, தலம், தீர்த்தம் எல்லாம் விசேஷமாக சொல்கிறோம். அதே போல காலஅளவில் இப்போது வழிபட்டால் நல்லது, அப்போது வழிபட்டால் நல்லது என்றும் கருதி நல்ல நேரங்களும் பார்த்துச் செல்கிறோம். (நமக்கு தெரியுமே – ராகுகாலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது என்று)
நமது தினப்படி வழக்கத்தில் நீராடிவிட்டு வரும் போது, நமது தேகம் அழுக்குகள் களையப்பட்டு அதனால் ஒரு புத்துணர்ச்சி வருவதை நாம் உணர்வதால், அதே போன்று இயற்கையாகவே அமைந்துள்ள ஆறுகளின் தன்மைகளையும், ஓடும் திசைகளையும் பொறுத்து அவைகளில் நீராடினால் நுண்ணியதாக நம்மிடம் வளர்ந்துள்ள நமது மாசுகளும் கழுவப்பட்டு நாமும் புனிதமாகலாம் என்று கருதுவதால் அவைகளை நோக்கிப் போகிறோம். அதிலும் சில விசேஷமான இடங்களில் இருக்கும் ஊற்றுகள், குளங்களிலும், அவை போன்ற இடங்களில் இருந்து புறப்பட்டோ அல்லது அவ்விடங்களைத் தொட்டுச் சென்றுகொண்டோ இருக்கும் ஆறுகளிலும் நீராடுவதை புனிதமாகக் கருதுகிறோம். இவைகளை தீர்த்த யாத்திரை என்கிறோம். இப்போது தாமிரபரணி புஷ்கரம் என்கிறார்கள். கும்பகோணம் மஹாமகம் நமக்கு தெரியும்.
இப்படியாக மூர்த்தி தரிசனம், தீர்த்த யாத்திரை செய்வதெல்லாம் நமது மலங்களை நீக்கி இறைவன் ஸந்நிதானத்தில் நம்மைப் புனிதமாக்கிக் கொள்ளவே என்ற கருத்து நமக்கு இருந்தாலும், அப்படிச் செய்யும் நாம் யார் என்ற எண்ணம் ஒரு சிலருக்கே தோன்றுகிறது. மூர்த்திகளும், தீர்த்தங்களும் உலகில் இருப்பவை போன்று நாமும் உலகில் இருப்பதாக எண்ணும் வரை அவையெல்லாமே சரியான வழிபாட்டு முறைகளே. எல்லாம் இறைவனால் இயக்கப்படுகிறது என்ற எண்ணம் இருக்கும் போதும், ஒரு சிலருக்கே அந்த இறைசக்தி இல்லாது நாமே எப்படி இயங்கமுடியும் என்று தோன்றுகிறது. அப்படித் தோன்றுபவர்களிலும் வெகு சிலரே *நான்யார்?* என்று தன்னைப் பற்றியே கேள்வி கேட்டுத் தனது பார்வையை உலகில் வெளிமுகமாக விடாது, காணும் தான்யார் என்பதை அறிந்துகொள்ளத் தனது கவனத்தை உள்முகமாகத் திருப்பி, தியானத்தால் தன் உள்ளொளி பெறுவதே *ஆன்மபோதம்* என்று பலபடித்தாய் சொன்னார்.
இவ்வாறாக எந்தத்திசையில், எந்த இடத்தில் என்ன இருக்கிறது, அதை எந்தக் காலத்தில் தரிசிப்பது என்று இங்கும் அங்கும் அலையாமல், அவை அனைத்தையுமே காணும் அல்லது காணப்போகும் தன்னைப் பற்றி விசாரம் செய்ய வேண்டும் என்று இங்கு சொல்கிறார். அப்படிச் செய்தால் குளிரோ, வெப்பமோ எதுவானாலும் அங்கும் இருந்து, எந்த விதக்குற்றம், குறைகளையும் தனது தன்மைகளாய்க் கொள்ளாது, எப்போதும் ஆனந்தம் ஒன்றையே தனது இயல்பாய்க் கொண்டுள்ள ஆன்மசைதன்யமாகிய தனது ஸ்வரூபத்திலேயே திளைத்து, அங்கு ஊறும் ஆனந்தப்புனித நீரில் மூழ்கி எக்காலத்தும் இன்புறும் ஒருவனே உலகில் வாழ்ந்த பயனை அடைந்தவன் ஆகிறான். அந்த நிலையை அடையும் வரை இருமைகளும் இருக்கும், அதனால் வரும் வறுமைகளும் தொடரும். ஆனால் ஆன்மஸாகரத்தில் மூழ்கி முத்தை அடைந்தவனுக்கு அதற்கும் மேல் செய்வதற்கு என்று ஏதும் இருக்காது, அவன் ஸத்தே உருவாகியுள்ள ஆன்மாவோடு ஒன்றி இருப்பதால், இருக்கும் அனைத்தும் அவனுக்கு அதுவாகவே தோன்றும்; எந்த வித வேற்றுமைகளும் தெரியாது. அவன் சித்தே வடிவான ஆன்மாவாய் இருப்பதால் அறிவு மயமாகவே இருப்பான். அவன் மேலும் அறிவதற்கு ஒன்றும் இருக்காது. தனது பேரறிவு எனும் ஒளியால் தானும் பிரகாசித்துக்கொண்டு, அனைத்தையும் ஒளிர்வித்துக்கொண்டும் இருப்பான். அவன் ஆனந்த வடிவேயான ஆன்மாவாக ஒன்றிவிட்டதால், இப்போதுண்டு, அப்புறமில்லை என்ற குணங்களைக் கொண்ட இன்ப-துன்பங்களைக் கடந்து, எப்போதும் ஆனந்தமாகவே இருப்பான்.
என்றும், எங்கும் உள்ள ஆன்மாவாயானதால் அவன் *நித்யன்*
இனி பிறப்பு, இறப்பு எனும் கால அளவைகள் இல்லாத அவன் மரணமில்லா ஆனந்தப் பெருவாழ்வில் நிலைத்து நிற்பான் இந்த ஆத்மன். அப்படியே வேண்டுவோம்.
அன்பர்களே! தயவுசெய்து நீங்கள் படித்த வரை, புரிந்து கொண்டதை என்னோடு பகிருங்கள். பொது குரூப்பில் வேண்டாம். என் தனி மொபைல் எண்ணுக்கு எழுதுங்கள். ஆத்மஞானவிஷயமில்லையா! குருவுக்கும் சீடனுக்கும் மட்டுமே இது இருக்கட்டும்.
விரைவில் வேறு ஒரு கோணத்தில் நம் ஆத்மஞானத்தை படிக்க, புரிந்துகொள்ள முயலுவோம். என் எழுத்தை, கருத்தை மேலும் விரும்பி வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.
வெல்க குருவின் புகழ்!

மெய்ஞான வேட்கை என்கிற ஆன்மபோதம்
(வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)

(ஆன்மபோத பதிவுகள் நிறைவுற்றன. மனமும் குணமும் செம்மையுற்றன. அந்த அசைபோடலில் அகப்பட்டது இந்த கவிதை. ரசியுங்கள். நீங்களும் அசைபோடுங்கள்)
விளக்கவுரை – *அருட்சக்தி*

பித்தனடா பக்தி நிலை உச்சம் உச்சம்
சித்தனடா சிவனைபோல் சித்தம் சித்தம்
சுத்தனடா சொரூபத்தின் மொத்தம் மொத்தம்
முத்தனடா முக்தி நிலை முழுதும் பெற்றோன் 1

ஒருவன் பக்தியின் உச்சத்துக்கு போனால் அதாவது பக்தியில் பித்தனானால் அவன் பித்தன் என்ற சிவன். அந்த சிவனைப்போல் எவனுடைய சித்தமானது ஸ்திரமானால் அவனே ஸித்தன். தன்னுடைய ஆத்மவடிவத்தில் மொத்தமாய் தோய்ந்துவிட்டால் அவன் சுத்தன். அதாவது மனசுத்தன். இப்படி பக்தி, சித்தம், ஸ்வரூபம் எல்லாமே பெற்றுவிட்டால் அவனே முக்திநிலை எய்திய முக்தனாவான்.

பிறப்பில்லை என்று சொல்லும் வேதம் வேதம்
இறப்புமில்லை எதுவுமில்லை எல்லாம் மாயம்
குறவனைப்போல் குவலயத்தில் நடப்பான் நில்லான்
உறவில்லை ஒட்டுமில்லை கைஓடும் இல்லை 2

முக்தியடைந்த ஒரு ஆத்மாவுக்கு பிறப்பே யில்லை என்கிறது வேதம். பிறப்பு இல்லையானால் மரணமுமே இல்லையே! நாம் சொல்லும் பிறப்பு, இறப்பு எல்லாமே மாயை. அதாவது அறியாமை. நாட்டில் குறவர் என்ற ஒரு பிரிவினர் உண்டல்லவா! அவர்கள் ஒரு ஊரில் நிரந்தரமாக இருப்பதில்லை. போய்க்கொண்டே இருப்பர். முக்தியடைந்த ஒரு ஆத்மாவுக்கு இங்கு ஒரு உறவுமுல்லை, பிச்சை வாங்கி உண்ண கையில் திருவோடும் தேவையில்லை.

நேற்றிருந்தேன் இன்றுள்ளேன் நாளை நிற்பேன்
குற்றமில்லா குருபாதம் உண்மை உண்மை
பற்றில்லை பசையில்லை எல்லாம் பந்தம் பந்தம்
சுற்றி சுற்றி வரும் காலை அது சர்ப்பம் சர்ப்பம் 3

காலம் என்பதற்கு ஒரு அடையாளம் இல்லை. நேற்று, இன்று, நாளை என்பது நமது நினைவுதான். இந்த ஆத்மா என்றுமே இருக்கும். இந்த அறிவைக்கொடுத்த மாசில்லாகுருவின் பாதங்கள் ஸத்யம். ஆத்மாவுக்கு எதிலும் பற்றோ, ஒட்டுறவோ இல்லை. ஜீவனின் இந்த உலக பந்தங்கள் எல்லாமே காலை சுற்றிவரும் பாம்பு போல. இங்கே பந்தம் என்றது சுஷும்னையில் ஓடும் ஸ்வாஸப்பாம்பு.

செய்ததுவும் மீதமதும் போச்சே போச்சே
உய்வதற்கு வேறு வழி காணலாச்சே
பெய்கவென பெய்யும் மழை பத்தினிப்போல்
ஐயமற ஐந்தும் ஓதி அறியலாச்சே 4

ஆத்மனால் செய்யவேண்டியது என்று ஒன்றுமேயில்லை. வேறுவழியை அல்லவா இது கண்டுவிட்டது. இந்த ஆத்மா மழை பெய் என்றால் பெய்யும். ஒரு தர்ம பத்தினி போல என்ற உவமை இங்கே! ஆத்மாவைப்பற்றி அறியும்போது இந்த ஜீவன் பஞ்சபூதத்தில் உள்ள சந்தேக விபரீதங்களை பூராவும் நீக்கிக்கொண்டு விட்டான்.

அக்ஞானம் என்பதுவும் குப்பை குப்பை
மெய்ஞான புலம்பலது செம்மை செம்மை
கையாலே மலரெடுத்து அம்மை அம்மை
தாயவளின் அடியினிலே சேர்த்தால் நன்மை 5

ஆத்மாவுக்கு அக்ஞானம் என்பது வெறும் கழிவே! அதற்கு வேண்டுவது எல்லாமே மெய்ஞான வழியே! இதெல்லாம் எப்போது வரும்? அம்மையை மலரால் அவளது திருவடியில் பூஜித்தால் வரும்.

விக்ஞான விளக்கமெல்லாம் போதும் போதும்
மெய்ஞான விளக்கதுவே ஒளிரும் ஒளிரும்
கைம்பெண்ணின் கதைபோல மெய்மை மெய்மை
கைவிட்டு போனதடா மாயை மாயை 6

விக்ஞானம் எல்லாமே உலக அறிவு. வேண்டியமட்டும் படித்தாச்சு. மெய்ஞான விளக்கு என்ற தேஜஸ் இங்கே ஒளிவிட்டு பிரகாசிக்கும். ஒரு பெண்ணுக்கு கணவன் என்கிற ஒரு பிடிப்பு போனதுபோல மாயை என்கிற அறியாமை இங்கே ஜீவனை விட்டு போய்விட்டது.

தேடிடடா தேடிடடா தூக்கம் மறந்து
கூடிடடா கூடிடடா கூட்டம் துறந்து
பாடிடடா பாடிடடா பாட்டை சிறந்து
சாடிடடா சாடிடடா சேட்டை மனத்தை 7

சம்சார துக்கத்தை மறந்து ஆத்மாவை தேடு. அஸத் சங்கத்தை விட்டு ஸத்சங்கத்தை நாடு. மனத்தில் ஏற்படும் சேஷ்டைகளை விட்டு ஆத்ம ஞானபாட்டை பாடு. இப்படியெல்லாம் ஜீவமனதை பார்த்து சொல்லுகிறது..

வேட்டிடடா வேள்வியினை வேதியர் போல
நாட்டிடடா கோட்டையினை நாகரசத்தில்
கூட்டிடா ஓர்நிலையில் உந்தன் மனத்தை
மூட்டிடடா மெய்க்ஞான தீயின் தழலை 8

அந்தணர்கள் வேள்வி போல சிதக்னியை மூட்டு. நாகரஸம் என்ற ஆத்ம கோட்டையை உலகில் நாட்டு. மனதை ஒரே நிலையில் வை. அப்போதுதான் மெய்க்ஞான தழல் மூட்டப்படும்.

அன்றொரு நாள் சித்தன் வந்தான் காரைக்கோட்டை
என்றும் நாம்வாழ காய கல்பம் தந்தான்
அன்றவன் சொன்னதெல்லாம் கனக வைப்பு
நன்றாக உணர்ந்தாலோ அது சினம் துறப்பு 9

காரைக்கோட்டைசித்தன் என்கிற காரைஸித்தன் வந்தான், வந்தவன் சாகாகல்வியை அதாவது காயகல்பம் என்ற ஞானமூலிகையை கொடுத்தான். சொன்னதெல்லாம் தான் கனகவைப்பு என்ற நூலில் வைத்தான். அதை கற்றால் அல்லவோ நமது சினம் என்ற அறியாமை நீங்கும்.

மண்ணிதனை பொன்னாக்கும் சித்தர் கூட்டம்
கண்மூடி மயங்கி நிற்கும் மாந்தர் கூட்டம்
விண்மீது செலுத்துகின்ற அம்பைப் போல
தன்மீது திரும்பிவரும் வினையின் ஓட்டம் 10

சித்தர்கள் எல்லாமே மண்ணை பொன்னாகும் வித்தை தெரிந்தவர்கள். அதைப்பார்த்து மயங்கி நிற்பார் மனிதர்கள். அதிலே புகுந்துவிட்டாலோ வானத்தில் செலுத்திய அம்புபோல அது திரும்பி வந்து இவனையே தாக்கும்.

காலணா கொடுத்து விட்டால் ஓடம் ஏற்றும்
பாலையவள் மந்திரம்தான் பாதை மாற்றும்
காலையவள் பற்றிவிடு காட்டம் குறையும்
கலியவனின் கொட்டமது அடங்கிப் போகும் 11

கங்கையை கடக்க ஓடத்துக்கு அந்த காலத்தில் காலணா (பழையநாணயம் – இக்கால நயாபைஸா 1½) கூலி. அப்படியெல்லாம் கொடுக்கவேண்டாம். பாலையின் மஹாமந்த்ரம் இருக்கே! இங்கு அக்கரை என்றது ஞானம். அவள் பாதத்தை பிடித்துவிட்டால் கலிகால கொடுமை இவனை ஒன்றும் செய்யாது.

சாகின்ற மனிதருக்கு ஏது நட்பும் பகையும்
போகின்ற பாதையெலாம் புட்பம் புட்பம்
வேகின்ற கட்டையிது அற்பம் அற்பம்
ஏகிவிடு ஏகாந்தம் அது நுட்பம் நுட்பம் 12

பிறவி இல்லா பெருநிலையில் நட்பும் பகையும் எது? செல்லும் பாதையெல்லாம் பூப்பந்தால்தான். இந்த கட்டைஉடலோ நெருப்பில் வேகும் தன்மை. இந்த உடலை விட்டு தனித்த ஏகநிலை என்ற மிக நுண்ணிய முக்தநிலை அடைவாய்!

சாகாது நிற்பாயோ என்று கேட்பார்
ஆகாத செயல்நின்றால் அதுவும் கூடும்
போகாத ஊருக்கு வழியேதென்பார்
நோகாமல் நோக்கின்ற நோன்பறியாரே

உலகினர் ஆகாத செயல், போகாத ஊருக்கு வழி என்றெல்லாம் சொல்வர். சாகாமல் இருப்பயோ என்றும் கேட்பர். ஆனால் இந்த ஆத்மஞானவழி எந்த வித பரிசிரமமும் அடையாமல் செல்வது.

புட்பமொன்றெடுத்து பாதம் போடு போடு
குட்டமதும் போய்விடுமே வாழும் நாடு நாடு
எட்ட நின்று பார்த்தாலோ தெரியா வீடு
அட்டகாசம் செய்யாது அந்த மாயக் காடு

ஆர்ப்பாட்டம் செய்யும் மாயை என்கிற அறியாமை எப்ப போகும்? புஷ்பம் எடுத்து அவள் பாதத்தில் போடும்போதுதான். வியாதிகள் வாராது. ஜீவனுக்கு இது மிக தூரம். ஆத்மாவின் அருகில் நெருங்கினாலே தெரியும்.

அமராவதியிருந்த அந்த பாரிஜாதம்
தமதாக்கி கொண்டானே தாமோதரனும்
சமதமங்கள் கொள்கையெலாம் தேறி நீயும்
அமர்க்களமாய் அடியினிலே நாளும்போடு

கண்ணன் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலர் கொண்டுவந்தான். இங்கு பாரிஜாதம் என்றது ஆத்ம புஷ்பம். அது கிடைக்க வேணுமானால் சமம், தமம் என்ற சாதனைகளை செய்ய வேண்டும். அப்போது நீயும் தாமோதனாகலாம்.

கண்ணனவன் காதல் செய்த கதையைக் கேளு
பெண்ணுரு எல்லாமே எமக்கன்னை என்பான்
விண்ணகர வேந்தனுக்கு விகல்பம் இல்லை
மண்ணிதிலே மனமகற்றி மாதரைப் பாரு

கண்ணனின் கோபிகாகாதல் கதை ஒரு தத்துவம். அது எல்லா பெண்களையுமே தாயாராக பார்க்க சொல்வது. இங்கு விண்ணகர வேந்தன் என்ற ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்த ஒருவன். அவனுக்கு மண் என்றும் பெண் என்றும் தெரியாதே!

மின்னியலில் மயங்காதே மூழ்க்கும் மூழ்க்கும்
அன்னியனின் அலங்கோலம் அகலும் அகலும்
பொன்னி நதி வழிவந்த நம்மனோர்க்கு
கன்னியான அன்னையது அருளும் அருளும்

இன்றைய உலகம் மின்னியல் (Electrical). இதிலே நாம் மூழ்கி கிடக்கிறோம். இது அயல்நாட்டினரின் இறக்குமதி. காவிரி பாயும் நம் நாடு ஆத்ம ஞானமே இதன் அருள் வழி. இதை அன்னை அருளுவாள்

இருளினிலே தேடும்பொருள் கைப்படுமோ படுமோ
அருளாலே கிடைத்ததப்பா ஆன்ம போதம் போதம்
பொருளறிந்தோம் பதிவு செய்தார் நித்தம் நித்தம்
கருக்குழியில் செல்ல மாட்டோம் யோகம் யோகம்

நாம் தேடும் இது இருட்டிலே (அறியாமை) தேடினால் கிடைக்காது. இந்த ஆன்மபோதத்தை அருள் என்ற வெளிச்சத்தை கொண்டு தேடுவோம். ஆத்மபோதத்தின் பொருளை தினம் பதிவு செய்தார். இனி கர்ப்பவாசம் இல்லா பரம யோகத்தை இதன் பொருளறிந்ததால் அடைந்தோம்.

ஆதியிலே சங்கரரும் ஆர்பரித்தார் வேதம் வேதம்
மீதியெலாம் பூர்த்தி செய்தார் இரமண மவுனம் மவுனம்
வீதியிலே கடைவிரித்தார் அருட்சக்தி நாதம் நாதம்
பாதியிலே போகவில்லை வேகம் வேகம்

முற்காலத்தில் சங்கரர் வேதமாக இதனை சொன்னார். மௌனமாக உபதேசித்த ரமணபகவானும் நமக்கு தமிழில் கொடுத்தார். நாதமாகவும் வேகமாகவும் முழுவதுமாக நமக்கு அருட்சக்தி கடைவிரித்ததன் மூலம் கிடைத்தது.