ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 2

ஆத்மபோதம் – 24 ‘’நான் ப்ரஹ்மமே’’

ஆத்மஸ்வரூபம் நீதான் – உன்னை விட்டு வேறில்லை. இதுதான் குருபாதுகா மந்த்ரம் நமக்கு தினம் தினம் அறிவுறுத்துகிறது. குருபாதுகா மந்த்ரம் அருளப்படும்போது தன்னையும் தன்னுடைய ப்ரகாசத்தையும்-தானும் ப்ரகாசமும் ஒன்றாக ஆகும் விதத்தையும் குரு காட்டிக்கொடுக்கும் வண்ணம் அதன் தத்துவம் விரிகிறது. இங்கேயே அவர் நம்மை ஆத்மஸ்வரூபம் என்று கூறி விட்டார். அதனை ஸந்தேக விபரீதமற தெரிந்து கொள்ள ஸாதனை அவசியமல்லவா! ஸாதனையோடு கூட இந்த மாதிரி ஆத்ம விசாரமும் செய்தல் மிகமிக அவசியம். அதனால்தான் இங்கே நாம் அதனை செய்கிறோம். சங்கரரை தொடருவோம்….

ஆவித்யகம் சரீராதி த்ருச்யம் புத்புதவத்க்ஷரம் |
ஏதத்விலக்ஷணம் வித்யாதஹம் ப்ரஹ்மேதி நிர்மலம் ||

அவித்தையால் ஆனவை ஆக முதற்காணும்
இவை குமிழிபோல அழிவெய்தும் – இவற்றின்
அயலாம் அமல அகம் பிரமமாம் என்று
அயராமல் என்றும் அறி

மாயை எனும் அவித்தையினால் உண்டான தேகம் முதலாகக் காணப்படும் இவைகள் யாவும் நீர்க்குமிழிகள் போல அழிந்துவிடும். இவைகளிலிருந்து வேறுபட்ட நிர்மலமான பிரம்மமே நான் என்று சிறிதும் சோர்வடையாமல் எப்போதும் அறிந்துகொள்வாய்.

இதன் விரிபொருள்
இல்லாதது இருப்பதுபோலத் தோன்றுவது மாயை. முன்பே பார்த்தோம். கயிறு பாம்பாகத் தோன்றுவதால் பாம்புதான் மாயை; இருப்பது கயிறு மட்டுமே! அதுபோல இருப்பு எனும் தன்மை மட்டுமே கொண்ட ஆன்மா, உடலில் தொடங்கி மனம், புத்தி என்று இல்லாத வஸ்துக்களாக தோற்றம் அளிப்பதுதான் மாயை. அதனால் அவை யாவும் பொய்யானது ஆகும். அவைகள் அனைத்தும் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் அழியக்கூடியது. அப்படி அழியக்கூடியவற்றால் அழியாத சேதனப் பொருளான ஆத்மாவை உணரமுடியாது. உள்ள ஒரே பொருளான ஆத்மாவை உள்ளபடி உணர்வதற்கு ஒரே ஒரு வழிதான் இங்கே இருக்கு. கயிற்றை பாம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும்வரை அந்தப் பிரமை அகலாது. அதன் உண்மையை அறிய தேவையான வெளிச்சம் வேண்டும். அந்த வெளிச்சமும் சரியான கோணத்தில் விழவேண்டும். அப்போதுதான் ஒருவனுக்கு உண்மை தெரிய வரும். அதேபோன்று இங்கு முதலில் அழியும்-அழியாத பொருட்களின் தன்மைகளை ஒருவன் அறியவேண்டும். தேகம், மனம், புத்தி இவைகள் எல்லாம் ஒருநாள் அழியக்கூடியன என்றால், நமது தினமானம் வரும் அனுபவங்களிலேயே அவைகள் எப்போது அழிகின்றன, அப்படி அழிந்தபின்பும் நாம் இல்லாது போய்விட்டோமா என்று பார்த்து, அவைகள் எல்லாம் நமக்கு இருக்கின்றன என்றால் நாம் யார் என்று நமது தன்மையை நம் அனுபவங்கள் கொண்டே அறிய முயல வேண்டும். அழியும் பலவும் நமக்கு இருந்தாலும், இப்படிக் கேட்டு அறிய முயற்சிப்பவன் யார் என்று பார்க்கும்போது மனம் சிறிதும் தளராது தனது முயற்சியைத் தொடர வேணும்.
உலக வழக்கம் என்னவென்றால் அழியும் பொருட்களின் மேல் ஆசை வைப்பதுதான். அந்த மாயையிலிருந்து விடுபட்டு, மீண்டும் அந்தப் பிரமை ஸாதகனை பிடித்து ஆட்கொள்ளாமல் இருக்க, அழியும் பொருட்கள் மேல் ஆசையின்மையும், அழியாத நிர்மலமான ப்ரஹ்மமே தான் என்ற நினைப்புடனும் ஸதாஸர்வகாலமும் இருக்கவேண்டும். அத்தகைய நினைப்பு, அறிவாக மாறி, அனுபவமாக ஆகும் வரை சிறிதும் சோர்வடையாமல் இருந்தால் உள்ளதை உள்ளபடி உணர முடியும் என்று இங்கு சொல்லுகிறார்.
மேலே அடுத்த பாடலுக்கு செல்கிறோம்.. மிக கவனமாக இனி சிந்தனை செய்ய வேணும்.

தேஹான்யத்வாத்ர மே ஜன்மஜராகார்ஷ்யலயாதய: |
சப்தாதிவிஷயை: சங்கே நிரிந்த்ரியதயா ந ச ||

உடலுக்கு வேறு எனக்கு உண்டாதல் மூத்தல்
ஒடு குன்றல் சாவு முதல் ஒன்றா – படர்ந்த
ஒலி முற்புலன்களோடு ஒன்றால் எனக்கு இன்றே
அலன் பொறிகள் யான் ஆதலால்

நினைவில் இருக்கும் ஸ்தூலதேகம், கனவில் வரும் ஸூக்ஷ்மதேகம், ஆழ்உறக்கத்தை அனுபவிக்கும் காரணதேகம், இம்மூன்று தேகங்களிலிருந்தும் நான் வேறுபட்டவன். அதனால் எனக்கு பிறப்பு, முதுமை, தேகமிளைத்தல், சாவு முதலான விகாரங்கள் பொருந்தாது. எங்கும் படரக்கூடிய ஒலி முதலான இந்திரிய விஷயங்களும் எனக்குப் பொருந்தாது. நான் இந்திரியங்கள் இல்லாததால் அவைகள் எனக்கு இல்லை.

இதன் விரிபொருள்:
வேதாந்த உண்மைகளை மஹாவாக்கியங்கள் மூலமாகவோ குருமுகமாகவோ கேட்டறிந்த பின்பு ஸாதகன் செய்ய வேண்டிய தியானம்பற்றி இங்கு கூறப்படுகிறது. எது நித்தியமோ அதை மட்டும் பற்றிக்கொண்டு, அநித்தியமான வைகளை அகற்றுவதில் முதல்படியாக தேகம் பற்றிய உண்மைகளை இங்கு அறியலாகிறது.
நம்மை யாராவது சுட்டிக் காட்டும்போதோ, அல்லது ஆழ்ந்த தூக்கத்தின் பின்போ நாம் முதலில் காண்பதும், உணர்வதும் நமது ஸ்தூல தேகத்தைதான். அதற்கே பிறப்பு, வளர்ச்சி, இறப்பு முதலான பருவங்கள் இருக்கின்றன. அதேபோல நமது கனவில் நாம் உருவாக்கும் ஒரு ஸூக்ஷ்மதேகத்துக்கும் வெவ்வேறு பருவங்கள் இருப்பது போலத்தான் கனவில் தெரிகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் காரணதேகம் பற்றி நாம் நன்கு அறியாவிட்டாலும், நமது அனுபவத்தின் படி அதுவும் தினம் தினம் வந்து போவது போலத்தான் அவைகளை நாம் அறிகிறோம். அதாவது ஸ்தூல மற்றும் ஸூக்ஷ்மதேகங்கள் அந்தக் காரணதேகத்தில் தினந்தோறும் அடங்கி, பின் எழுகிறது. அப்படி அடங்கமுடியாது போனால் சில நாட்களுக்குள்ளேயே ஸ்தூலதேகமும் காணாது மறைந்து விடும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆக இவை எல்லாவற்றிற்குமே ஒரு தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் இருப்பது நன்கு தெரிகிறது. இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பதல்லாது, இவை அனைத்தையும் சாக்ஷியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் “நான்” இவைகளிலிருந்தும் வேறுபட்டவன்.
நமது தேகம் நமக்குத் தெரிந்த பின்தான் உலகமே நமக்குத் தெரிய வருகிறது. அந்த உலகத்தை நாம் நமது ஸூக்ஷ்ம ஐம்புலன்களால் அறிகிறோம். ஐம்புலன்களும் செயல்பட அதனதற்கு வேண்டிய ஸ்தூலக்கருவிகளும் நம்மிடம் இருக்கின்றன. அவைகளும் நமது தேகத்தின் உறுப்புக்களே. தேகமே நாம் அல்ல என்கிறபோது அந்தக் கருவிகளோ, அல்லது அவைகளை இயக்கும் நுண்புலன்களோ நாமாக எப்படி இருக்க முடியும்? அதனால் அவைகளும் நாம் அல்ல. அப்படியென்றால் நம்மை நாமாக எப்போதும் உணர்கிறோமே, அந்த “நான்” யார் என்று கேட்டு, அதைப் பற்றி ஸதாஸர்வ காலமும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தொடரும்……

ஆத்மபோதம் 25 ஆன்மாவே நான்

நான் நான் என்று சிந்திக்க சொன்னோமல்லவா! இதுபற்றி பகவானே தன் உபதேச உந்தியாரில் சொல்கிறார் பாருங்கள்…..

நானென்னுஞ் சொற்பொரு ளாமது நாளுமே
நானற்ற தூக்கத்து முந்தீபற
நமதின்மை நீக்கத்தா லுந்தீபற.

அதாவது நானென்ற சொல்லுக்கு, உண்மைப் பொருளாகயிருப்பது, எக்காலத்திலும் எல்லாவித அவஸ்தைகளிலும் தன்னுடைய தன்மை மாறாது விளங்கும், பரிபூரண வஸ்துவே. தேகத்தை நானென்றபிமானிக்கும் உணர்வற்ற, தூக்கத்திலும் நாம் இல்லாமற் போனோம் என்ற உணர்வு இல்லாததினாலும், நான், இருக்கிறேன் என்ற உணர்வு நிரந்தரமாக இருந்து கொண்டேயிருப்பதாலும் நானென்பது அந்தப் பரவஸ்துவேயாகும். *ஆன்மாவே நான்* என்கிறார் இங்கே.
இன்னொரு பாடலான உள்ளதுநாற்பது அனுபந்தப்பாடலில் அழகாக தேஹம் நாஹம் கோஹம், ஸோஹம் என்ற நான்கு சொற்களைக் கொண்டே விளக்குகிறார் பாருங்கள்..

தேஹம் கடம் நிகர் ஜடம், இதற்கு அஹம் எனும் திகழ்வு இலதால்
நாஹம்; சடலம் இல் துயிலினில் தினம் உறும் நமது இயலால்
கோஹம் கரன் எவண் உளன்? உணர்ந்து உளர் உளக்குகை உள்ளே
சோஹம் புரண அருணகிரி சிவவிபு சுயம் ஒளிர்வான்.

“இந்த ‘நான்’ என்று கிளம்புகிறவன் யார்? எங்கு இருக்கிறான் என்று ஆராய்ந்து உணர்ந்து இருப்பவர்களின் இதய குகைக்குள்ளே, தானே தானாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் சிவமயமான அருணாசலன் ஸ்வயமாக தானே பிரகாசிப்பான்” என்று இங்கு அவர் கூறுகிறார்.
அதேபோல சங்கரரும் இதனையே “மனோபுத்திஅஹங்கார சித்தானிநாஹம்” என்று ஆரம்பித்து “சிவானந்தரூப:சிவோஹம் சிவோஹம்” என்று முடியும் “நிர்வாணஷட்கம்” அல்லது “ஆத்மஷட்கம்” என்று கூறப்படுகிற ஆறு ஸ்லோகத் தொகுப்பில் வலியுறுத்துகிறார்.
ஸாதகனின் தவம் எல்லாம் தனக்கு வெளியில் உள்ள விஷயங்கள் அனைத்தும் நிரந்தரமற்றது என்பதாலும், அவைகளைக் காணும் தானே அவைகளை விட முக்கியம் என்பதாலும், அந்த விஷயங்களில் மனத்தை விடாது, அதனால் அவைகளால் கவர்ந்து ஆட்கொள்ளாப்படாது, எப்போதும் தானாக இருக்க முயற்சி செய்து கொண்டிருப்பதே!
ஜபம் செய்துகொண்டிருந்தாலும், பூஜை செய்துகொண்டிருந்தாலும், தியானம் செய்துகொண்டிருந்தாலும் இதுகளில் ஆட்கொள்ளப்படாது நமது இருப்பிலே அதாவது நான் என்பதிலே நிலையாக இருக்கணும் என்பதே இங்கு நாம் புரிந்து கொள்ளவேண்டியது.
சங்கரரை தொடருவோம்

அமன்ச்த்வாத்ர மே துக்கராகத்வேஷபயாதய: |
அப்ராணோ ஹ்யமனாஹா சுப்ர இத்யாதி ஸ்ருதிசாஸநாத் ||

மனம் அலன் ஆதலால் மன்னு துயர் ஆசை
சினம் அச்சம் ஆதி எனைச் சேரா – இனமாக
அப்பிராணன் மனமில்லான் சுத்தன் என்று மறை
செப்புகின்றதன்றோ தெளி

நான் எண்ணங்களின் தொகுப்பான மனமில்லை என்பதால், மனத்தினால் அடையும் துயரம், ஆசை, கோபம், அச்சம் முதலானவைகள் என்னைச் சேராத வகைகளாகும். ஆத்மாவாகிய நான் அந்த வகையைச் சேர்ந்த பிராணனோ, மனமோ இல்லாதவன். எனவே மிகவும் தூய்மையானவன் என்று வேதவாக்கியங்கள் சொல்வதை நன்கு உணர்ந்து தெளிவு பெறுவாயாக.

இதன் விரிபொருள்:

எண்ணங்களே மனம்யாவினும் நானெனும் எண்ணமே மூலமாம் உந்தீபற
யானாம் மனம் எனல் உந்தீபற

-என்று ரமணர் “உபதேசஉந்தியார்” எனும் படைப்பில் சொல்வது “எண்ணங்கள் அனைத்திலும் ‘நான்’ என்று தன்னை அபிமானிக்கும் எண்ணமே மனம் என்றும், அதுவே எண்ணங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான எண்ணம்” என்றும் சொல்கிறார். அது அபிமானிக்கும் “நான்”; எண்ணும் “நான்”. அதற்கு எல்லாவித ஆசை, துயரம் எல்லாம் உண்டு. ஆனால் மேலே சங்கரர் சொல்லும் “நான்” இருப்பாகிய ஆன்மாவே. அது “நான்” எனும் உணர்வாதலால், அதற்கு எந்தவித விகாரங்களும் கிடையாது. (இங்கே கவனமாக படியுங்கள் – இரண்டுதரம் படியுங்கள்)
எப்போதும் எதையாவது எண்ணிக்கொண்டு இருப்பதுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அந்த எண்ணப்படி தன்னிலும் வேறு என்று ஒன்றைப் பார்ப்பதுதான் முதல்படி. அந்த *நான்-நீ* என்ற பாவனையால், எனது-உனது என்ற வேற்றுமைகள் வளர ஆரம்பிக்கின்றன. அதனால் ஒரு பொருளை “தனது” என்று அடைய விரும்புவதுதான் ஆசை. அது கிடைக்காமல் அல்லது தன்னிடம் தங்காமல் போய்விட்டால் வருவது துக்கம். அது தனக்குக் கிடைத்தும், அது ஒருவேளை தன்னைவிட்டுப் பிறரிடம் போய்விடுமோ என்று எண்ணுவது அச்சம். தன்னிடமிருந்து பிறர் அதை எடுத்துக் கொண்டுவிட்டால் வருவது கோபம். தன்னிடமே அது இருக்கவேண்டும் என்று எண்ணுவது பற்று. மற்றவர் அதைப் பெற்றுவிட்டால் அவரிடம் நமக்கு வருவது வெறுப்பு. இப்படியான வித விதமான உணர்ச்சிகளுக்குக் காரணம் நம் எண்ணங்கள்தான்.

இரண்டாம் பாகம் தொடரும்……

ஆத்மபோதம் – 26 *எண்ணங்கள்*

நேற்று இப்படியான வித விதமான உணர்ச்சிகளுக்குக் காரணம் நம் எண்ணங்கள்தான் என்று முடித்திருந்தோம் அத்தகைய எண்ணங்களின் தொகுப்பே மனம், அந்த மனமே தன்னை ‘நான்’ என்று அபிமானிக்கிறது. அந்த மனம் போன்ற வர்க்கத்தைச்சேர்ந்ததே பிராணன் எனும் ஸூக்ஷ்மசக்தியுமாக தேகம் எனும் ஜடப்பொருள் அல்லாது, பிராணன், மனம் எனும் ஸூக்ஷ்ம தேக வர்க்கங்களும் அநித்தியமானவைகள். அதனால் அவைகளும் தள்ளப்பட வேண்டியவைகளே.
ஆனால் மற்ற விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாது எப்போது ஒருவன் “நான்” என்று தன்னிருப்பை மட்டும் உணர்ந்து தன்னிலே இன்புற்று இருப்பானோ, அப்போது அவனுக்கு மற்ற விஷயங்களில் நாட்டமும் இல்லை. அவை வந்தாலும் அதனால் இன்பமும் இல்லாமல், போய்விட்டால் அதனால் துன்பமும் இல்லாமல் ஆகிறது. மற்றவர்கள் என்று அவனுக்குத் தெரிந்தாலும், அவர்களும் தன்னைப் போலவே இருப்பவர்கள் என்றுதான் அவனுக்கு இருக்கும். ஆன்மஞானம் என்பது எவருடைய தனிஅனுபவம் என்றாலும் அது எந்தத் தனி மனிதருடைய சொந்தச் சொத்து அல்ல. சொத்து என்று வந்துவிட்டாலே அதற்கு சொந்தக்காரன் என்றும், அதில் பன்மையும் வந்துவிடும். ஞானம் தொன்றுதொட்டு இருக்கும் அதீத அனுபவம் என்பதாலேயே அதன் துவக்கத்தை வேதத்தினின்று காணலாம் என்பதை உணர்த்தவே இங்கு வேத வாக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
அதனால் முந்தைய ஸ்லோகத்தில் ஸ்தூலமான பொறி, புலன்களைக் களையச் சொன்னது போல, இங்கு பிராணன், மனம் ஆகிய எந்தவித சூக்ஷ்ம விகாரங்களும் இல்லாது தூய்மையாய் இருப்பதே அந்த “நான்” என்னும் உணர்வு என்று வேத வாக்கியங்கள் சொல்வதால் அதனையே எப்போதும் நினைத்து, அதையே தனது தாரக மந்திரமாக்கி, அதனையே தியானித்து அதன் கருத்தை நன்கு உணர்ந்து தெளிவாய் என்று சொல்ளுகிறார். இன்னும் இந்த ஆத்ம தெளிவிற்கு உபநிஷத் கதை ஒன்று சொல்கிறேன்.
பல உதாரணங்களைக் கொடுத்து, படிப்படியாகத்தனது மகனான சுவேதகேதுவுக்கு ஆருணிமுனிவர் முற்றிலும் உணர வைக்கின்றார். அவனுடைய ஆன்மிக இருளைப் போக்கி ஆத்மாவை உணரவைக்கிறார். அதனை நாம் படித்தால் இந்த இடத்தில் நமக்கு இன்னும் தெளிவு உண்டாகும்.
மண்ஒன்று, அதை வைத்துக்குயவன் பல மண்பாண்டங்களைச் செய்கின்றான். பாண்டங்கள் பெயரிலும் உருவத்திலும் வெவ்வேறாக இருக்கலாம். அவற்றிற்கு அடிப்படை மண்தான்.
தங்கம்ஒன்று. தங்கத்திலிருந்து தட்டான் பல ஆபரணங்களைச் செய்கின்றான். அவற்றிற்கு மூலம் தங்கம்தானே.
சூரியனைக் காண்கின்றோம். சூரியனுடைய கிரணங்களில் பல நிறங்கள் கலந்து நிற்கின்றன. ஆனால், அவையெல்லாம் சூரியனிடமிருந்து எழுந்தவைதான்.
பால் தயிராகிறது தயிர் வெண்ணெய் ஆகிறது. வெண்ணெய் நெய் ஆகிறது. எல்லாவற்றிற்கும் தயிர்தான் அடிப்படையாக இருப்பது.
பரம்பொருளே. நாம் பார்ப்பது, அனுபவிப்பது போன்றவைக்குப் பரம்பொருளே ஆதாரமாகும். அதுவே மூலப்பொருள்.
தேனீக்கள் பல பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கின்றன. ஆனால் தேன் ஒன்றே உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாமுமே பரம்பொருளில் சேருகின்றன. உலகெங்கிலும் பல நதிகள் கிழக்கிலும் வடக்கிலும், மேற்கிலும் தெற்கிலும் பாய்ந்து கடலை அடைந்து அங்கே தங்குகின்றன. கடலை அடைந்தவுடன் நதிகளுக்கெனத் தனிப்பெயர் கிடையாது. உருவம் கிடையாது.
மனிதன் விழித்திருக்கும்பொழுதும், உறங்கும்பொழுதும், கனவு காணும் பொழுதும், அவனுடைய உயிரானது தொடர்ந்து இயங்குகின்றது.
ஒரு சிறிய ஆலமரவிதை நாளடைவில் பெரிய மரமாக விழுதுகளுடன் வளருகிறது. விதையிலும் மரத்திலும் இருக்கின்ற மூலப்பொருள் ஒன்றே.
ஒரு பாண்டத்தில் தண்ணீரை வைத்து அந்தத் தண்ணீரில் சிறிது உப்பைக் கலக்கும்பொழுது தண்ணீர் முழுவதும் உப்பாகின்றது. அதேபோல பரம்பொருள் எல்லாவற்றிலும் அடிப்படையாக, மூலமாக, ஸாரமாக நிற்கின்றது. இதுவே உண்மை. *அதுவேஆத்மா அதுவே நீ ஆகிறாய்* என்று ஆருணிரிஷி சுவேதகேதுவிற்கு விளக்குகின்றார்.
இனி நேரடியாக சொல்ல வருகிறார் சங்காரர். அவரைத் தொடருவோம்……

நிர்குணோ நிஷ்க்ரியோ நித்யோ நிர்விகல்போ நிரஞ்சன: |
நிர்விகாரோ நிராகாரோ நித்யமுக்தோஸ்மி நிர்மல: ||

நிர்க்குணன் நிரஞ்சனன் நித்தன் நிராகாரன்
நிர்விகாரன் சுத்தன் நிட்கிரியன் – நிர்விகற்பன்
நித்த முக்தன் முன் நிகழ்த்திடப்பட்டவை
அத்தனையும் நான் என்று அறி

குணங்களற்றவன், பற்றற்றவன், என்றும் இருப்பவன், உருவமில்லாதவன், மாறுபாடுஇல்லாதவன், பரிசுத்தமானவன், செயலற்றவன், செய்யவேண்டும் எனும் சிந்தனையில்லாதவன், எப்போதும் விடுபட்டவன் இப்படியாகச் சொல்லப் பட்டவை அனைத்தும் என்னைப் பற்றியே என்று அறிந்து கொள்.

இதன் விரிபொருள்:
நமது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களில் இந்த குணங்களின் பெயரையே அம்பாள் பெயராக உள்ளதை நாம் அறிவோம். நிர்குணா, நிஷ்க்ரியா. நித்யா. நிர்விகல்பா, நிர்விகாரா, நிராகாரா நித்யமுக்தா நிர்மலா – பாருங்கள் இந்த பெயர்களை வைத்தே ஆத்மபோதம் ஸ்லோகத்தை செய்கிறார். இந்த பெயர்கள் அத்தனையும் நான் தான் என்கிறார். நான் பலதடவை சொல்லியுள்ளேன். நாம் வழிபடும் லலிதை நம்மைத்தவிர வேறல்ல என்று. சிதானந்த அலையும் இதையே சொல்கிறது.
முன்பு “அது அல்ல” என்ற பொருள்படும் “நேதி”பற்றி சொல்லப்பட்டது. இங்கும் அதே போன்ற எதிர்மறையான சொற்றொடர்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. சொல்வதை நேரடியாகச் சொல்ல முடியாதா என்ற சந்தேகம் எவருக்கும் வரலாம். முதலில் அதைப் பார்ப்போம்.
நமது தினசரி வாழ்வில் நாம் காண்பதெல்லாம் மெய்யானது என்றும், அந்த உணர்வை நம் எண்ணங்களாலும், செய்கைகளாலும் நாம் மேலும் வலுப்படுத்திக் கொண்டேபோய் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் நமது கனவில் வரும் அனுபவங்கள் எப்படி விழித்தபின் மாயமாய் கரைந்து போகின்றன என்பது நமக்கு நன்றாகவே தெரிந்தும், அந்த நிகழ்வுகள் நமக்கு ஏதேனும் படிப்பினையைத் தெரிவிக்கிறதா என்று நம்மில் பலர் சிறிதும் யோசனை செய்துகூட பார்ப்பதில்லை. இது இப்படி என்றால், நம் ஆழ்ந்த உறக்கத்தில் வழக்கமாக “நான்” என்ற உணர்வுடன் இருக்கும் நம்மையே நாமிழந்து, அத்துடன் நாம் சாதாரணமாகக்காணும் உலகத்தையும் இழந்து போனாலும், மீண்டும் நனவு நிலை திரும்பும்போது நமது முந்தைய கனவு-உறக்க நிலை அனுபவங்கள் எதையுமே ஒரு பொருட்டாகக்கூட எண்ணாது, அது அப்படித்தான் இருக்கும் என்ற மனநிலையில், சாதாரணமாக உலக வழக்கில் ஈடுபட்டுவிடுகிறோம்.
இந்த நமது உலகப் பார்வையும் கயிற்றை பாம்பாகப் பார்ப்பது போலத்தான். அப்படி இருக்கும்போது அவனிடம் முதலில் “அது பாம்பு அல்ல” என்றுதானே ஆரம்பிக்க முடியும்? இல்லாவிட்டால் அவன் பார்ப்பதை பாம்பாகத்தான் பார்த்துக்கொண்டே இருப்பான். அதிலிருந்து அவன் கவனத்தைத் திருப்ப “அது பாம்பு அல்ல” என்றுதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அதே போல ஆன்மீகத்திலும் “நீ பார்க்கும் ஒன்று அதுவல்ல” என்ற எதிர்மறையாகவே தொடங்குகிறது. உலகில் நாம் எதை எடுத்துக்கொண்டாலும் அதனைச் சில குணங்களோடுதான் பார்ப்போம். அதுதான் நாம் வழக்கமாகச்செல்லும் வழி. அதனாலேயே நல்லது-கெட்டது, நண்பன்-எதிரி, பாவம்-புண்ணியம், மேலானது-கீழானது என்ற இருமைகள் புகுந்துவிடுகின்றன. இந்த பாகுபாடுகள் இல்லாமல் ஒன்று இருக்க முடியும் என்பதை நம்மால் அறிவுபூர்வமாகக் கூட உணரமுடிவதில்லை. அப்படியே இருந்தாலும் அது கிடைப்பதோ, அல்லது அதைக் காணுவதோ மிகவும் அரிது என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ஒன்று இருப்பதால் தான் நாமே இருக்கிறோம் என்பதை சீடனுக்கு உணர்த்துவது குருவின் கடமையாகிறது. அதனால் அனைவர்க்குமே நன்கு தெரிந்தவைகளில் ஆரம்பித்து அவர் சீடனுக்கு “அவை-அவை அல்ல” என்று உபதேசம் செய்கிறார். அதனாலேயே எதிர்மறை விளக்கங்கள் இங்கு சொல்கிறார்.
ஒருவனை வாழ்த்தும்போது நல்ல குணங்களான “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்” என வாழ்த்துவோம். ஆனால் குணங்கள் புத்தியைச் சார்ந்தவை. அத்தகைய குணங்கள் ஒருவனின் சாதாரண வாழ்வுக்கு உதவி அவனை மேலும் நன்கு சிந்திக்க வைக்கும். ஆனாலும் ஒரு முற்றிய ஆன்மீக நிலையில் அவன் “அந்தக் குணங்கள்” யாருக்கு என்றும் சிந்திக்க வேண்டிவரும். அப்போது புத்தியைச் சார்ந்த குணங்கள் எதுவும் இல்லாத ஆன்மாவாகிய “நான்” என்பதை அறிந்து கொள்வதால் “நான் நிர்க்குணன்” என்ற நிலை தெரியவரும். ஒருவன் கர்மங்களைச் செய்யும்போது அதன் விளைவுகளிலும் மனம் ஈடுபடுவதால், அவை மனத்தைச் சார்ந்தவை. நான் மனமல்ல என்பதால், அந்தப் பற்றுக்களினால் வரும் அழுக்கு ஏதும் இல்லாத நிரஞ்சனன். காலத்தை எவ்வளவு நீட்டினாலும், குறுக்கினாலும் நான் எப்போதும் உள்ளவன் என்பதால் நான் நித்தியன். உருவம் என்று ஒன்று இருந்தால் அது இருக்கும் இடம் என்றும், இல்லாத இடம் என்றும் சொல்லவேண்டி வரும். ஆனால் எனக்கோ எங்கு இருந்தாலும் நான் என்ற உணர்வு இருப்பதால் நான் நிராகாரன் (உருவமற்றவன்). தேகம் என்ற உருவத்திற்குத்தான் இளமை, முதுமை போன்ற நிலைகள் ஏற்படுவதால் தேகம் விதவிதமான மாறுபாடுகளை அடைகின்றன. நான் என்ற உணர்விற்கு இந்த மாறுபாடுகள் ஏதும் இல்லாததால் நான் நிர்விகாரன் (மாறுபாடு இல்லாதவன்). உருவம் என்று ஏதும் இல்லாத உணர்வாகிய நான் என்பதால் உருவத்தை ஒட்டும் தூசுகள் ஏதும் இல்லாத பரிசுத்தன். (துரிசறுத்து… என்கிறார் மணிவாசகர்.) ஏதும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாததால், நான் ஸங்கல்பம், விகல்பம் அற்றவன். அப்படியே ஏதேனும் செய்தால் “நான் செய்கிறேன்” என்ற சிந்தனை இல்லாததால் நான் நிஷ்கிரியன். பந்தம் என்ற ஒன்று இல்லாததால் அதிலிருந்தும் விடுதலை என்றும் இல்லாது போகிறது. எனக்கு பந்தம் ஏதும் இல்லாததால் நான் நித்யமுக்தன். இப்படியாகச் சொல்லப்பட்ட அனைத்தும் நானே என்பதை தீர உன்னுள் விசாரித்து “நான்தான் அது” என்று அறிவாயாக என்று அறிவுறுத்துகிறார்.

ஆத்மபோதம் -27 *ஆன்மா எங்கும் உள்ளது*

ஒரு அறியாகக்குழந்தையிடம் ஒரு வேற்றுதாளை கொடுத்தால் அது அதனை கிழித்துவிடும். அதுபோல் ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுங்கள். அதையும் முன்போல்தான் கிழிக்கும். ஏன்? அதற்கு இரண்டின் மதிப்பும் தெரியாது. அப்போது அதற்கு ரூபாய் நோட்டின் மதிப்பை தெரியவைத்து பின் கொடுத்தால் அப்போது கிழிக்காது. மதிப்பை உணரும். இதுபோல் அமையில்லாமால், ஸதா பறந்து கொண்டிருக்கிற மனதுக்கு எத்தனை உபதேசம் செய்தாலும் ஏறாது. அதனால் மனதை நெறிப்படுத்தி உபதேசம் ஊட்டினால் சட்டென பிடிக்கும். அதனால் தான் திருவருட்பாவில் *பரப்பமைய்ந்துகேண்மின்* என்றார். மேலும் உலக நுகர்ச்சியிலேயே மனம் இருப்பதால் இது புரியாது. பால் பாத்திரத்தின் அருகில் உள்ள ஒரு பூனை பாலை குடிக்காமல் பக்கத்தில் இருக்கிற கரப்பான் பூச்சியை பிடிக்க போவதுபோல் இருக்கிறது என்று உதாரணம் சொல்கிறார். எனவே உலக நுகர்ச்சியில் அமுங்கி கிடக்கும் மனவேகத்தை அடக்கி உபதேசத்தைக் கேட்கவேணும்.
எந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலையில் நாம் இருக்க வேண்டியது அவசியமல்லவா!. எந்தவேலையைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச்செயலில் ஈடுபடுவது சிறப்பல்லவா! அதனால் தான் நமது ஆலயங்களை சுற்றி பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம். ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம்விட்டுவிட்டு, கடைசியாக கருவறையில் சென்று கடவுளை தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது. அதற்காகத்தான் *அனுபூதிக்கருவுக்கு* மூலமான உபநிஷதங்களை, ஆத்மஞான நூல்களை படிக்கப் புகுமுன், அல்லது குரு உபதேசத்துக்கு முன் நமது சிந்தனையை அவற்றுடன் இசைவுபடுத்தி மனதை சுத்தமாக வைத்துக்கொள்ளவேணும். ஆன்மாவின் இயல்பை புரிந்து கொள்ளவேணும். *ஆன்மாவின் இயல்பு* என்ன என்று யஜுர்வேதம் ஈசாவாஸ்யஉபநிஷதம் சொல்கிறது. “ஆன்மா அசைவற்றது, ஒன்றேயானது, மனத்தை விட விரைவானது. புலன்கள் அதனை அடைய இயலாது. அது நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது. ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது. அது நிலையாக இருப்பதால் பிராணன் அனைத்தையும் இயக்குகிறது என்று.
ஒரு பொருள் அசையவோ இயங்கவோ வேண்டுமானால் அந்த இயக்கத்திற்கு ஓர் இடம் வேண்டும். எங்கும் நிறைந்த ஒன்று எங்கே அசையும்? எனவேதான் ஆன்மா அசைவற்றது. மனம் புறத்திலுள்ள ஒரு பொருளை நினைக்கும் போது, அது வெளியில் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுப்பதாக நமது தத்துவ நூல்கள் கூறுகின்றன. இதுவரை விக்ஞானம் கண்டறிந்துள்ள ஒலியின் வேகத்தைவிட, ஒளியின் வேகத்தைவிட மிகமிக வேகமாக மனம் சென்று அந்த பொருளின் வடிவை எடுக்கிறது. அவ்வளவு வேகமாக மனம் சென்றாலும், மனம் செல்வதற்கு முன்பே அங்கே ஆன்மா இருக்கிறது.
புலன்களால் ஆன்மாவை அறியமுடியாது. ஒவ்வொரு கருவியும் ஒரு குறிப்பிட்ட பணியைச்செய்யத்தான் செய்யும். தொலைநோக்கிக் கருவியால் தூரத்திலுள்ள பொருளை மட்டுமேதான் பார்க்க முடியும். அருகில் உள்ளவற்றைப் பார்க்கமுடியாது. மைக்ராஸ்கோப் என்கிற நுண்ணோக்கியால் மிகச் சிறியனவற்றைக் காணமுடியும். அதுபோல் புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவை. அகவுலக உண்மைகளையோ ஆன்மாவையோ காண அவற்றால் முடியாது. இதையே கீதையில், ‘உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன்’ என்று கண்ணன் கூறுகிறார்.
அசைகின்ற பிராணன் இயங்குவதற்கு அசைவற்ற ஆதாரமாக உள்ளது ஆன்மா. அசைவற்ற ஆதாரம் என்றவுடன் ஆகாயம் நினைவுக்கு வருகிறது. அதைத்தான் அடுத்த பாடலுக்கு சங்கரர் எடுத்துக்கொள்ளுகிறார்.
அஹமாகாசவத்ஸர்வ பஹிரந்தர்கதோச்யுத: |
ஸதா ஸர்வசம: சித்தோ நிஹிசங்கோ நிர்மலோச்சல: ||

ஆகாயம் போல அகிலத்தின் உள் வெளியான்
சாகாதான் சர்வசமன் சித்தன் – தேகாதி
யாவற்றும் பற்று அற்றான் என்றும் அமலன் சலியான்
ஆவன் நான் என்றே அறி

ஆகாயத்தைப் போல அனைத்துப் பொருட்களிலும் உள்ளும் புறமும் வியாபித்துள்ளவன், மரணமில்லாதவன், கீழோ மேலோ எங்கும் ஸமமாயிருப்பவன், எப்போதும் உள்ள சித்தன், ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண தேகங்கள் முதலிய அனைத்கிலும் இருந்தாலும் அவைகள் எதனிலும் பற்றில்லாதவன், சலனமற்றவன் இப்படியாக நான் இருப்பவன் என்று நன்கு அறிந்துகொள்வாயாக.

இதன் விரிபொருள்:

முன்பு எதிர்மறையான சொற்றொடர்களை வைத்துக்கொண்டு ஆன்மாவைப் பற்றி விளக்கம் சொன்னாரால்லவா!. இங்கு *ஆகாயம்போல* என்று நேர்மறையாகத் தொடங்கிவைத்து ஆன்மாவின் சொரூப லக்ஷணம் துல்லியமாக விளக்கப்படுகிறது. இங்கும் எதிர்மறைகள் தவிர்க்கப்படவில்லை என்பதையும் காணலாம். ஆகாயம் என்பதை Sky என்று குறுகிய அளவில் கொள்ளாது, Space என்று விரிந்த அளவில் பொருள் கொண்டால் நன்கு விளங்கும்.

ஒரு காலியாக உள்ள குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்வோம். ஆனால் அந்தக் குடத்திற்குள் ஆகாயம் இருப்பதை அக்குடத்தை உடைத்தாலோ, அல்லது அதை அங்கிருந்து நீக்கினாலோ தானே நமக்கு விளங்குகிறது. அது மட்டுமில்லை அந்தக் குடம் ஜடமாக ஓர் இடத்தை முன்பு அடைத்துக்கொண்டு இருந்தாலும், குடத்தை அகற்றியதும் அந்த இடம் கூட ஆகாயத்துடன் ஒன்றாகிவிடுகிறதல்லவா? அதனால் ஆகாயத்தை எந்தப் பொருளின் உள்ளும் புறமும் வியாபித்துள்ளது என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும். அதாவது இருப்பது ஆகாயம் ஒன்றுதான், மற்றதெல்லாம் வந்து போவது என்றுதான் ஆகிறது. அந்த ஆகாயம் ஓரிடத்தில் தொடங்கி மற்றோர் இடத்தில் முடிகிறது என்று சொல்ல முடியாது என்பதால் அதற்குப் பிறப்பும் இல்லை, மரணமும் இல்லை என்று ஆகிறது.
எங்கும் என்று சொன்ன பிறகு, அதற்கு கீழ்-மேல் என்றோ ஒரு வருணனை எப்படி இருக்க முடியும்? திடமாக இல்லாது வாயுவாக ஸூக்ஷ்மதாக காற்று போல ஒரு பொருள் இருந்தால், அது கூட இவ்வளவு உயரம் வரைதான் இருக்க முடியும் அதற்கு மேல் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால் அந்தக் காற்றே இருக்கும் பரந்த வெளியோ எங்கும் வியாபித்து இருப்பதால் அதற்கு கீழ்-மேல் என்று ஒன்றும் இல்லாது இருப்பதுதானே லக்ஷணம்! அப்படி வேற்றுமைகள் ஏதும் இல்லாததால் எங்கும் சரி சமமாக இருப்பவன் ஆன்மா என்று விவரிக்கப்படுகிறது.

இல்லாத ஒன்றை உருவாக்கும் போது, அதனைச் செய்வதற்கு என்று சில வரைமுறைகள் இருக்கும். அந்த வரைமுறைகளே பலரும் பாடுபட்டு சில-பல தோல்விகளைச் சந்தித்தபின் கண்டறிந்ததாக இருக்கும். அதுதவிர அதைத் தற்போது செய்வதற்கும் ஓர் ஈடுபாடுடன் கூடிய மனம் ஒன்றும் வேண்டும். அதனையே சித்தம் என்பார்கள். அந்தச் சித்தம் வருவதற்கோ, வளர்வதற்கோ முன்னாலேயே ஒருவனது இருப்பு என்பது ஒரு முன்னோடியாதலால், அந்த இருப்பையே என்றுமுள்ள சித்தன் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. “ஸித்தர்கள்” என்று நாம் சொல்வோமே அவர்களை இங்கு நினைத்து குழம்பிக்கொள்ள கூடாது. ஸித்தர்கள் காட்டும் சித்து எல்லாமே மனம் என்ற கருவியைக்கொண்டே செய்யப்படுவது.
அதையே பகவான் ஒரு பாட்டில் சொல்கிறார்.
சித்தத்தின் சார்பு இன்றி சித்தியாச் சித்திகளில் சித்தம் தோய்வார்,
எங்கண் சித்தக் கலக்கம் தீர் முக்தி சுகம் தோய்வார் மொழி
அதாவது சித்தம் என்ற ஒன்று தீர்ந்தால் முக்தி என்னும்போது, அதை எப்படி சித்தத்தைக் கொண்டு செய்யப்படும் ஸித்திகள் மூலம் அடையமுடியும்? என்று கேட்கிறார். ஆதலால் என்றுமுள்ள சித்தன் எனப்படுவது அந்த முக்தி நிலையைக் குறித்துச் சொல்லப்படுவது என்றும், அதாவது நம்மைப் பொருத்தவரை நமது எந்த நிலையிலும் நம்மை நாம் என்று உணர்கின்ற என்றும் உள்ள இருப்பு என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆத்மபோதம் – 28

சித்து எல்லாமே மனம் என்ற கருவியைக்கொண்டே செய்யப்படுவது என்றால் நாம் நினைவும் கூட அவ்வாறுதானே!
ஆத்மாவை தனித்து பார் என்றால் சிறிது கடினம் தான். இன்று காலை நினைத்து பார்த்தேன். உடம்புக்கு வியாதி வரது. உடம்பில் எங்கோ வலிக்கறது. டாக்டர் வந்து ஊசி போடுகிறார். வியாதி வலி ஒருபக்கம். ஊசி போடும்போது அதன் வலி ஒருபக்கம். இரண்டையும் இந்த மனம் தனித்தனியாக உணர்கிறது அல்லவா! அப்பாடி ! டாக்டர் வைத்தியம் பார்த்து விட்டார். டாக்டர் பேரில் ஒரு நம்பிக்கை. மருந்திலும் நம்பிக்கைதான். சிந்தியுங்கள். வலி உணர்வு மனத்தில். சௌக்கிய உணர்வும் அதே மனதில்தான். மனசுக்கு இரண்டு இடமா? இல்லை. நம்மால் நாம் மனதை இரண்டாக பிரித்து உணர முடிகிறது என்பதுதான் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது. அப்போது இந்த “நான்” என்பதை மட்டும் தனித்து பார்க்க முடியாதா என்ன? முடியும். ஒருநாள் முடியும். *குருவாக்கியத்திலும், சாஸ்திரத்திலும் நம்பிக்கைவைக்க* நமது தர்மம் சொல்வதை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். இன்னும் பாருங்கள். வேறு ஒரு உதாரணம். ஸ்ரீரமணபகவான் கையில் ஆபரேஷன் நடந்தது. அவருக்கு வலி உணர்வு இல்லை என அவர்களது சரித்திரத்தில் கண்டுள்ளது. இது எப்படி? நமது காஞ்சி ஸ்ரீமஹா பெரியவாளுக்கு கண் ஆபரேஷன் நடந்தது. அப்போது கூட வலிதெரியாமல் இருக்க முதலில் ஊசி போடவேணும் என டாக்டர் பத்ரிநாத் சொன்னதுக்கு பெரியவா “அதெல்லாம் வாண்டாம். என்னை கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடு” அப்படியென்று சொல்லி 15 நிமிடங்கள் கழித்து ஆபரேஷன் செய்ததாக படித்துள்ளேன். அவராலும் வலியை உணராமல் கட்டுப்பாட்டில் வைக்க முடிந்தது. உடனே நாம் சொல்லுவோம். நான் என்ன பெரியவாளா ? அல்லது மகரிஷியா ? என. ஆம். சந்தேகமில்லாமல் நாம் மஹானே! எவனால் இதுபோல் மனதை தனியாகவும் “நானை” தனியாகவும் வைக்க முடிக்கிறதோ அவனும் மஹானே! இந்த ஆத்மபோதம் படித்து இதன் பரிணாமத்தல் நம்மில் பலர் ஞானிகளாக நிச்சயம் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
नघटितघटना पटीयसी माया நகடிதகடனா படீயஸீ மாயா… சங்கரர் மாயா பஞ்சகம் என்று ஒன்று எழுதியுள்ளார். அதில் இந்த வாக்கியம் வருகிறது. அர்த்தம் சொல்லட்டுமா? “இந்த மாயை இருக்கிறதே அடாடா, அதைப் போல் ஆட்டிவைப்பது வேறெதுவும் இல்லை. வேத சாஸ்திரங்கள் நியாயங்கள், சகலமும் கற்றவர்களும் நாலு கால் விலங்குகளும் ஒன்று தான் என்பது போல் எல்லோர் மனதையும் கெடுத்து மாற்றி விடுகிறது இந்த மாயாசக்தி. அது தான் அவர்களை ஆசை காட்டி மோசம் செய்வது . அந்தோ என்ன கொடுமை இது!” நமது உபாஸனையில் மாயா என்பதே பராசக்தி தான். அவள் கருணை நமக்கு உண்டு. இப்போது சொல்லுங்கள். உங்களால் ஏன் மஹானாக ஆகமுடியாது? முடியும் என்று Positive ஆக நினையுங்கள். நாம் பணக்காரனாக ஆகிவிடுவோம், பெரிய வீட்டில் வாழுவோம் என்றெல்லாம் நினைத்ததில்லையா ! அதுபோல் ஆத்மஞானியாக ஆவோம் என்று நினையுங்கள். இது என் அனுபவம். ஆத்மஞானியான, பரமஹம்ஸர் போன்ற ஒரு மஹான் எனக்கு குருவாக வர வேணும் என்று 55 ஆண்டுகளுக்கு முன் நினைத்துக்கொண்டு இருந்தேன். அதுபோல் கிடைத்தாரா இல்லையா! குரு மட்டுமா எனக்கு ஆத்மஞானி – இல்லையே! பத்நியும் அல்லவா அப்படியே வந்தாள். உண்மை அல்லவா! எண்ணங்களுக்கு என்றும் பலமுண்டு. எனவே இன்று நமது ஆத்மபோதம் சிந்தனை இவ்வாறாக தொடங்கி விட்ட இடத்தை தொடுவோம்.
நமது அன்றாட நனவு-கனவு-உறக்க அனுபவங்களில் வந்து போகும் ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண தேகங்களுக்கு ஏற்றாற்போல் விதவிதமான மலங்கள் இருக்கின்றன. ஸ்தூல தேகத்துக்கு வியர்வை, சிறுநீர் போன்ற நமது கழிவுகளான மலங்கள் உள்ளன. இவை அவ்வப்போது அகன்றால் தான் நமது ஸ்தூல தேகமே இந்த உலகில் தங்க முடியும். அவை போன்றே கனவில் நாம் ஸூக்ஷ்மதேக அடைவின் காரணமே நமது ஆசை, பொறாமை, பழி வாங்கும் மனம், துயரம் போன்ற மலங்கள் தான். அவை எதுவும் இல்லாது போனால், எந்தக் கனவும் இல்லாது ஒரு மனிதன் அமைதியாகத் தூங்கியிருப்பான். நமது ஆழ்உறக்கத்தில் வரும் காரண தேகத்தின் மலமோ “தான் இருக்கிறோம்” என்றுகூட தன்னைப் பற்றியே அறிய முடியாத தன்மையான அவித்தை எனப்படும் அறியாமைதான். இப்படி தேகங்கள் பல வந்து போனாலும், இவை எதையுமே பற்றிக்கொள்ளாது, அதனால் இவை எதனாலுமே பாதிக்கப்படாது, நிர்மலமாய் இருப்பவன் என்று இந்த *ஆத்மா* சொல்லப்படுகிறது.
ஸ்தூல வடிவில் ஜடப்பொருளாக இருந்தால் இங்கே அங்கே என்று அசைவுகள் இருக்கும். ஜடமாக இல்லாமல் எங்கும் பரவி இருப்பதால் ஓர் இடைவெளியும் இல்லை, அது அசைவதற்கு இடம் என்றும் ஏதுமில்லை. அதனால் சலனம் ஏதுமில்லை. ஸூக்ஷ்மவடிவில் மனம் போல இருந்தாலோ ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்றோ அல்லது செய்ய முடியவில்லை என்றோ, அது அப்படி இருக்க வேண்டும் என்றோ அல்லது கூடாது என்றோ, விதவிதமான வகைகளில் சலித்துக்கொண்டு இருக்கும். அப்படி இல்லாததனால் அது நிச்சலத்தன்மை கொண்டுள்ளது. இந்த நிச்சலத்தன்மை வந்தாலே *ஜீவன்முக்தி* என்று இதே சங்கரர் வாக்கியமாக அவரின் பஜகோவிந்த ஸ்லோகத்தில் காணலாம்.
இப்படி எல்லாத் தன்மைகளும் கொண்ட ஒன்றே ஆத்மா ஆகும், அதுவே நான் என்பது என்றும் அறிந்துகொள்வாயாக என்று முதல் ஸ்லோகத்தில் கூறினார். அடுத்ததில் இங்கு வேத-உபநிடத வாக்கியங்களையே வைத்து இந்த ஆத்மாவை விளக்குகிறார்.

நித்யசுத்தவிமுக்தைகமகண்டானந்தமத்வயம் |
ஸத்யம் ஞானமனந்தம் யத்பரம் ப்ரஹ்மாஹமேவ தத் ||

எது நித்தம் சுத்தம் எது முக்தம் ஏகம்
எது அகண்ட இன்பு இரண்டல்லது – எது சத்து
சித்து அனந்தம் ஆகும் திகழ் அப்பரப் பிரம
வத்து யானேயா மதி

எந்தப் பொருள் என்றும் இருப்பதாயும், எப்போதும் பரிசுத்தமாய் இருப்பதாயும், எந்தப் பந்தமும் இல்லாததாயும், இரண்டற்ற ஒன்றேயாக இருப்பதாயும், இடைவிடாத ஆனந்தவடிவானதாயும், இருக்கும் பொருள் உண்மையாயும் அறிவுமயமாயும், முடிவில்லாது விளங்குகிறதோ அந்தப் பரப்பிரம்மமே நான் என்பதை உணரவேணும்.

*இதன் விரிபொருள்*
தொடர்ந்து இந்த செய்யுளிலும், ஆன்மாவின் லக்ஷணங்களைப் பற்றிக் கூறுகிறார்.
வருவது போவது என்றில்லாமல் என்றும் இயல்பாய் உள்ளதால் அது *நித்தியன்*
எந்த விதமான மலங்களும் அதற்கு இல்லாமையால் அது *பரிசுத்தன்*
அது ஒன்று இருப்பதால்தான் தேகம் போன்ற மற்றவைகள் இருக்க முடியும் என்பதாலும், எதனையும் பற்றுவதற்கு அதற்கு ஏதும் பற்றுக்கோடுஇல்லாததாலும் அது எந்தப் பந்தமும் இல்லாது இருப்பது எனச் சொல்லப்படுவதால் *அத்வயன்*
அதனால் வேறு எவை தோன்றினாலும் அவை எதனாலும் பாதிக்கப்படாது, ஆனாலும் அவை அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் *ஏகன்* வேறு ஒன்று வேண்டும் என்றால்தான் எதிர்பார்க்கப்படுவது வருமோ, வராதோ என்ற சம்சயங்கள் இருக்கும். வந்தால் இன்பமும், வராவிட்டால் துன்பமும் அடைவது இயல்பான தொடர் நிகழ்வுகள். தன்னைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றால் எதிர்பார்ப்பதற்கும் ஒன்றுமில்லை, அதனாலே வரக்கூடிய எந்த மாறுபாடான நிகழ்வுகளுக்கும் இடமில்லை. தான் மட்டும் இருப்பதால் தன்னிலே இன்புற்று *தனியன்*
அதற்கு வேண்டுவது ஏதும் இல்லையாதலால் அது எப்போதும் *ஆனந்தம்*
உள்ள பொருளான அது ஒன்றே இருப்பதால் அதைத் தவிர வேறு இருக்கிறது என்று சொல்வதற்கு ஏதுமில்லை என்பதால், அது ஒன்றே *ஸத்யம்*
இருப்பது என்று மட்டும் இல்லாது, தான் இருப்பதை உணர்ந்துகொண்டும் இருப்பதால் அது ஒன்றே *சுத்தஅறிவு*
*ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்மா* இது உபநிஷத் வாக்கியம்.
அதனாலேயே உலகில் உள்ள மற்ற அனைத்திற்கும், அவைகள் இருக்கின்றனவா இல்லையா என்று சொல்வதற்கு சாக்ஷியும், நிரூபணமும் தேவை என்னும்போது, எவருக்கும் தான் இருக்கிறேனா என்ற சந்தேகம் எப்போதும் வருவதில்லை. அதனாலேயே எவரிடமும் அதைக் கேட்பதும் இல்லை. அவரவர் புத்தியின் மூலம் வரும் தன்னைப் பற்றிய அந்த சிற்றறிவு கூட, அந்தப் பேரறிவு இருப்பதால் வரும் அறிவே என்பதை உணர்ந்தே தெரிந்துகொள்ளமுடியும். சிற்றறிவு என்பது கண்ணாடியில் பிரதிபலிக்கும் நம் மறுவடிவம் அல்லது நம் நிழல். நாம் அவைகளைப் பிடிக்கலாம்; ஆனால் மறு உருவமோ, நிழலோ நம்மைப் பிடிப்பது எப்படி? அதுபோல பேரறிவைப்பற்றி சிற்றறிவு எப்படி அறிய முடியும்? நம் அறிவால் அதனை அறியும் முயற்சியை விட்டுவிட்டு, அதுவாக இருப்பதால் மட்டுமே அந்தப் பேரறிவை உணர்ந்துகொள்ள முடியும்.
இருக்கிறோம் என்ற உணர்வுக்கு ஒரு தொடக்கம் இல்லாததால் அதற்கு ஒரு முடிவும் கிடையாது. அந்த உணர்வு கூட முடிவு என்றில்லாத அந்தப் பேரறிவின் இயல்பினால்தான் ஒருவனுக்கு வருவதாகும்.
இப்படியாக மேலே சொல்லப்பட்ட அனைத்து இயல்புகளும் ஆன்மாவினுடையதாக உணர்ந்துகொள்ளவேணும். அதுவே “நான்” என்ற உணர்வாக நம்மிடம் விளங்குகிறது என்று தெளிக.

ஆத்மபோதம் -29 *ஆத்மஸித்தி*
தினமும் நீங்கள் ஆத்மபோதம் படிக்கிறீர்கள். இது கதையில்லை. நிகழ்வும் இல்லை. மனதில் அனுபவிக்கவேண்டியது. Chemical Reactions தெரியுமா உங்ளுக்கு. அதுபோல் இது. நம்மை கொஞ்ச கொஞ்சமாக மனதளவில் மாற்றவேணும். உங்களுக்கே தெரியாமல் இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும். நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ரஸாயனமாற்றம் இது. இன்று எப்போது ஆத்மபோதம் பகிர்வு எப்போது வரும் என நீங்கள் எதிர்நோக்குகிறீர்கள் என்றால் அதுதான் மாற்றத்தின் அறிகுறி. சங்கரரும் அடுத்த ஸ்லோகத்தில் இது பற்றியே பேசுகிறார்.
ஏவம் நிரந்தராப்யஸ்தா ப்ரஹ்மைவாஹஸ்மீதி |
ஹரத்யவித்யாவிக்ஷேபான் ரோகாநிவ ரஸாயனம் ||

நிரந்தரம் இவ்வாறு நிகழ்த்தப்படும் அப்
பிரமமே யான் ஆவன் என்னும் – உறுதி
அழிக்கும் அறியாமை அலைவுகளை நோய்கள்
ஒழிக்கும் இரசாயனம் ஒத்து

அந்தப் பிரம்மமே நான் என்ற பாவத்துடன் ஸதா சர்வகாலமும் தியானிக்க, அதன் பயனாகப் வரும் உறுதியானது, தீர்க்கமுடியாது என நினைத்துக்கொண்டிருக்கிற நோய்களையும் குணமாக்கும் மஹாமருந்தாகிய ரஸாயனக்கலவை போல, அஞ்ஞானத்தினால் ஏற்படும் மனக் குழப்பங்களையும் அழித்துவிடும்.

*இதன் விரிபொருள்*
நாம் பெறுவதிலேயே பெறற்கரிய பெரியபேறு ஆத்மாவை உணர்வதுதான். அந்தப் பேற்றை அடையும் நேரடியான வழி இங்கே சொல்லப்படுகிறது.
இதுவரை ஆத்மாவின் லக்ஷணங்களைப் பற்றி விவரமாகப் பார்த்தோம். அதனை உணரும் நேர்வழியை இனி சொல்கிறார். எல்லாவற்றிலும் ஒன்றை அடைய முடியாதபடி தடுத்துக்கொண்டிருப்பது ‘அதுமுடியுமா, முடியாதா’ போன்றதில் தொடங்கி அடுக்கடுக்காக வரும் பலவிதமான மனக்குழப்பங்கள்தான்.
இங்கும் அதே பிரச்சினை என்றால் ஆன்மாவைத் தேடி அலைவதும் மற்ற உலகியல் பிரச்சினைகள் போன்றதுதானா என்ற சந்தேகம் எவருக்கும் வரலாமே? தொடக்கத்தில் அதுதான் உண்மை என்றால் எங்கோ கொஞ்சம் இடிக்கிறது போல் இருக்கிறதல்லவா.
தியானம் என்றால் என்ன?
சொன்னவற்றை மனத்தில் இருத்தி, அதில் உள்ள உண்மைகளை மனத்தில் ஏற்றி, அதைப்பற்றி ஸதாசர்வகாலமும் சிந்தித்து, சிறிதுசிறிதாக அறிவினால் அலசி ஆராயப்பட்ட அந்த உண்மைகளை தன் சொந்த அனுபவத்தில் காண முயற்சிப்பதுதான்.
இந்தப் பயிற்சியில் ஆரம்பம் முதல் இதுவரை சொல்லப்பட்டது எல்லாமே மனம், புத்தி இவைகளின் துணை இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என்பதுதான். அந்த தொடர்முயற்சியின் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவம் என்று வந்த பின்தான் அனைத்தும் ஒருவன் உள்வாங்குகிறான். அதனால் வெளி உலகைக் காணும் கருவிகளான மனமும், புத்தியும் இயங்கும் வரை ஆன்மாவைத் தேடும் முயற்சியும், மற்ற எந்தவிதமான உலகியல் பிரச்சினைகள் போலவே, குழப்பங்களும் நேரிடலாம். இப்படி வருவதெல்லாம் எனக்கு என்றால், “நான் யார்?” என்று கேட்கப்படும் கேள்வியும் தொடக்கத்தில் அறிவுடன் கேட்கப்படுவதுதான். அதற்குப் பதிலை அறிவோடுகூட புத்தியின் துணையுடன் தேட முயற்சித்தால் ஆன்மாவை உணரமுடியாது. ஆனாலும் இடைவிடாது கேள்வி கேட்டு, கேட்டு பயிற்சியைத் தொடர்ந்துகொண்டே இருக்க, போகப்போக அறிவுபூர்வமாகக் கேட்பவனும் மறைந்து, கேள்வியும் மறைந்து, கேட்கும் ஒருவன் தனது இருப்பை உணரும்போது, உறுதியாக உணரப்படும் தன்னைத் தானே அறிய, அதுவரை *தான்அறியவில்லை* என்ற அந்த அஞ்ஞானமும், தீராது என நினைக்கப்பட்ட நோய்களைப் போல அழியும். அப்படி இருக்கும் ஒன்றான ஸத்தை மறைத்து நின்ற அனைத்தும் அழிய, இறுதியில் இருப்பதானது அறிவுமயமாய் நின்று ஆனந்தமாய் இருப்பது அனுபவத்திலே உணரப்படும் என்கிறார்.
அருட்சக்தியால் சிந்திக்கப்பட்டு எழுதி வெளிவந்த *லலிதா ஓர் இன்பக்கலப்பு* என்ற நூலில் இந்த ஆனந்த அனுபவம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அங்கு சென்று சற்று அந்த நூலை எடுத்துப்பார்த்தீர்களானால் தெரியும்.
அடுத்த ஸ்லோகம் தொடருகிறது…

விவிக்ததேஷா ஆஸினோ விராகோ விஜிதேந்த்ரிய: |
பாவயே தேகமாத்மானம் தமனந்தமன்யதீ: ||

ஏகாந்த தேசத்து இருந்து ஆசையின்றி வெளி
போகாது வென்று பொறிகளை – ஏகமாய்
அந்தமில் ஆன்மாவை அன்னியமில் புந்தியனாய்ச்
சிந்திக்க வேண்டும் தெரி

தனிமையான இடத்தில் இருந்துகொண்டு ஆசைகள் அற்றவனாய், வெளி விஷயங்களை நோக்கிப் போகும் ஐம்புலன்களை வென்று, தன்னைத் தவிர வேறெந்த விஷயத்திலும் மனத்தை விடாத ஒரே சிந்தனை உடையவனாகி, எல்லா ஜீவர்களையும் உள்ளடக்கிய ஆன்மாவை மட்டுமே சிந்திக்கவேண்டும் என்று தெரிந்து கொள்வாய்.

*இதன் விரிபொருள்*
மனமும் புத்தியும் இயங்கும் போதுதான் நான் யார், நம்மால் ஆவதென்ன, நம் வாழ்க்கையின் பொருள் என்ன என்றெல்லாம் நம்மைப் பற்றி சிந்திப்போம். அப்படி சிந்திக்கும்போது எவருக்கும் தன் முன்னே தெரியும் உலகமும், அதில் தானொரு அங்கம் என்றும், அந்த உலகத்தில் தான் செய்யவேண்டியது என்ன என்றபடி எண்ணங்கள் தோன்றும். வெகு சிலருக்கே அப்படி யோசிப்பவன் யார் என்ற எண்ணம் வரும். அப்படி தன்னைப் பற்றி யோசிக்காது, தனக்கு வெளியே உள்ளவற்றைப் பற்றியே யோசிப்பவனுக்கும் தன்னைப் பற்றிய யோசனை ஒரு காலத்தில் வரும். அப்படி வரும்போது, அவனை அதுவரை இயக்கிக்கொண்டிருந்த அவனது மனத்தையும், புத்தியையும் உள்முகமாக்கி தன்னைப் பற்றி அறிய, அவன் முழு முயற்சி எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
அப்போது அவன் அதுவரை தன்னை ஆட்கொண்டிருந்த உலக வாஸனைகள் அனைத்திலுமிருந்து விலகுவது என்பது முதல் படி. அதற்கு அவன் தனிமையை நாட வேண்டும். இல்லையென்றால் பழையபடி அவனால் உலகத்தைத்தான் கவனிக்க முடியும்; கவனிக்கும் தன்னை அறிய முடியாது. தனிமையில் இருக்கும் அவன் அதுவரை தன்னை வெளியே இழுத்து அலைபாயக் காரணமாகத் தன்னுள் இயங்கிக்கொண்டிருந்த தனது இந்திரியங்களையும் அடக்கி, அவைகளால் முன்பு வெவ்வேறு விஷயங்களில் வைத்திருந்த ஆசை முதலான குணங்களையும் விட்டு, அவை எப்போதெல்லாம் மறுபடி எழுகின்றதோ அப்போது அவன் தனது உள்முக நாட்டத்தை உறுதியாக்கிக் கொள்ளவேண்டும். இப்படி உறுதி வரும்வரை பழகப் பழக, அவன் தன்னைப் பற்றிய ஒரே சிந்தனையுடன் இருக்க முடியும். அந்த உறுதி வரவில்லையென்றால் தனித்திருந்தும் பயன் இல்லாமல் போய், மனத்தின் கண் இருக்கும் வாஸனைகளால், உடலால் இல்லாது போனாலும் உள்ளத்தால் உலக விஷயங்களில் நாட்டம் ஏற்படும்.
ஒரே சிந்தனையுடன் இருக்கும் அவன் “தன்னையன்றியாருண்டு?” என்றும், தன்னுணர்வுக்குப் பின்பே மற்றெவரையும் உள்ளடக்கும் உலகம் வருகிறது என்பதையும் உணரும்போது, அவனுக்கு மற்ற ஜீவராசிகளும் தன்னைப் போலவே இருப்பதையும் உணர வாய்ப்பு வருகிறது. அதனால் தான் மட்டுமன்றி எவரும் இருப்பது அனைவரையும் உள்ளடக்கும் *ஆன்மா* என்பதை இடைவிடாது சிந்திக்க வேண்டும். மனம், புத்தி இவற்றால் உந்தப்பட்டு இப்படி முயற்சி எடுக்கும் ஒருவனுக்கு, அவைகளையும் கடந்து இருக்கும் ஒன்றான ஆன்மா விரைவில் ஸித்திக்கும்.

ஆத்மபோதம் – 30 *சிதானந்தசிந்தனை*

ஐந்துபூதமுமாறு சமயமுமந்த்ர வேதபுராண கலைகளும் ஐம்பதோர்விதமான லிபிகளும் …… வெகுரூப – என்ற அருணகிரியின் திருப்புகழ் தெரிந்திருக்கும். அதில் எல்லாமே சிவயோகம் என்கிறார். சிவயோகம் தான் ஆத்மயோகம் என்று இங்கே சங்கரர் சொல்கிறார். தினம் தினம் நமது சிந்தனை வரவர சற்று உயர்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் கவனமுடன் தொடருங்கள். நிதானமாக படியுங்கள். அப்போதுதான் நாம் புத்திமான் என்று சங்கரரும் பகவானும் சொல்லும் நிலைக்கு நாம் உயரலாம். அடுத்த பாடல் அதையே வலியுறுத்துகிறது…..

ஆத்மன்யேவாகிலம் த்ருச்யம் பிரவிலாப்ய தியா சுதி: |
பாவயே தேகமாத்மானம் நிர்மலாகாசவத் ஸதா ||

புத்திமான் காணும் பொருள் எவையும் ஆன்மாவில்
புத்தியால் ஒன்றல் புரிவித்தே – சுத்தமாம்
விண்ணென ஒன்றாய் விளங்கிடும் ஆன்மாவை
எண்ணுக எப்போதுமே

கேட்டல், சிந்தித்தல் முதலான வழிகள் மூலம் கற்றுணர்ந்து தேர்ந்தபுத்தியை உடையவன், தான் ஆன்மாவாய் இருப்பதால், தான் காணும் வெளியுலகப் பொருட்கள் எல்லாவற்றையுமே அந்த ஆன்மாவின் பிரதிபலிப்பாக தனது புத்தி மூலம் அறிகிறான். எப்படி ஆகாயமானது நிர்மலமாக பரந்து விரிந்து எங்கும் காணப்படுகிறதோ அதே போல எல்லாவற்றிலும் பிரகாசிக்கும் ஆன்மாவை எப்போதும் தியானம் செய்யவேணும்.

*இதன் விரிபொருள்*
நம்மை யாராவது அவதூறு பேசினால் அதைப் பொருட்படுத்தினால் மட்டுமே அது நம்மை பாதிக்கும். அந்தப் பழிச்சொல்லை நாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? அது பேசியவரோடு நின்றுபோய்விடும் அல்லவா? அதே போலத்தான் ஒரு பொருளை நாம் பார்க்கிறோமென்றால் அந்தப் பொருள் இருப்பது என்பது தவிர, நம்மைப் பொருத்தவரை அது இருப்பது என்பது நாம் பார்ப்பதால்தான் என்கிற உலகியல் தத்துவம் இங்கு நமக்குக் கை கொடுக்கிறது.
நான் தேகம் மட்டுமில்லை, அதனிலும் ஸூக்ஷ்மதான மனம். அதைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் புத்தி. இப்படி இருந்தாலும் நம்மை நாமே அறியாதவாறு உள்ள நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதைப் பார்த்தோம். அதனாலும் அது தவிர நமக்குத் தெரிந்த மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் இதுபோன்ற நிலைகள் உள்ளது. எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஆன்மாவே நாம் என்றும் பார்த்தது. அப்படி நாமே ஆன்மா என்றால் நாம் பார்ப்பது, கேட்பது எதுவும் ஆன்மாவைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும் என்று நிச்சயிப்பதுதானே அடுத்த நிலை. நாம் நம்மைப் பற்றி நன்கறிய இப்படியாகக் கேட்டு, சிந்தித்து அதனால் தெளிவு பெற்ற புத்தியுடன் இருக்கும்போது, நம் ஒவ்வொருவரையும் முதலாகக் கொண்டே மற்றது எதுவும் அமைகிறது என்பது விளங்கும். இந்த வாதம் எவருக்குமே பொருந்தும்.
ஆன்மாவைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று இவ்வாறாக உணர்வதை பரந்து, விரிந்த ஆகாயத்திற்கு ஒப்பாக இங்கு சங்கரர் விவரிக்கிறார். மாசுகள் எதுவும் இல்லாதது ஆகாயம். அப்படி மாசுகள் எதுவும் இருந்தால், (மேகம் போன்றவை) அவை ஆகாயத்தைப் பாதிக்காது. அதேபோல ஆன்மாவும் அகன்று விரிந்து இருப்பது மட்டுமன்றி, ஆசைகள், எண்ணங்கள் எதனாலும் ஆன்மா பாதிக்கப்படாது. எங்குதான் ஆகாயம் இல்லை, அதேபோல எங்குதான் ஆன்மா இல்லை என்பதை இவ்வாறாக புத்தியளவில் அறிவது போதாது. அது உள்ளத்தளவில் உறைந்து நிற்பதற்கு ஆன்மாவைப் பற்றி எப்போதும் தியானம் செய்யவேண்டும். எப்போதெல்லாம் ஸாதனை தளர்ந்து மனமும், புத்தியும் வெளியுலகை நோக்கிச் செல்ல முனைகிறதோ அப்போதைக்கு அப்போதே அதனைத் தடுத்து உண்முகமாக ஆன்மாவைத் தியானித்தல் அவசியம் என்று ஆகிறது.
அடுத்த பாடல்….

ரூபவர்ணாதிகம் சர்வ விஹாய பரமார்தவித் |
பரிபூர்ண சிதானந்தஸ்வரூபேணாவதிஷ்டதே ||

உள்ளது உணர்ந்தோன் உருவம் வருணம் முதல்
உள்ள மயல்கள் ஒருங்கு ஒழித்து – உள்ளம்
திகழ் பரிபூரண சிதானந்தம் தானாத்
திகழ்ந்திடுவன் நாளும் தெளி

உள்ள பொருளான ஆன்மாவை உணர்ந்தவனாக, தான் காணும் பொருட்களின் உருவம், நிறம் முதலாக பலவிதமான வேற்றுமைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அவைகளின் உள்ளத்தில் பரிபூரணமாய் நிறைந்து ஒளிர்கின்ற சிதானந்தமே, தன்னுள்ளும் எப்போதும் ஒளிர்கின்றதென்று தெளிவாய்.

*இதன் விரிபொருள்*
ஒரு பொருளைப் பார்க்கும்போது நமக்கு அதன் உருவம், நிறம் போன்ற தன்மைகள்தான் முதலில் தெரியும். அதேபோல ஓர் மனிதனை சந்திக்கும்போது நமக்கு அவரது நிறம், உருவம் தவிர நம் மனதளவில் அவருடைய வேறு பல குணங்கள், செய்கைகள் என்று ஞாபகத்திற்கு வரும். இதுதான் உலகியல் நியதி. எப்படி ஒரு பொருளைக் காண்பதைவிட ஓர் மனிதனை சந்திக்கும்போது, வெறும் ஜட சம்பந்தமானவைகள் தவிர பல ஸூக்ஷ்மத்தன்மைகளும் புலனாகிறது. அதுபோல மேலும் ஸூக்ஷ்மதான பார்க்கப்பட்டதின் உண்மைத் தன்மை என்று ஒன்று இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும் என்று பலருக்கும் தோன்றுவதில்லை. அதாவது நமது நண்பன் ஒருவன் நீண்ட நாட்கள் பார்க்கவில்லை. திடீரென்று ஒருநாள் பார்க்கிறோம். “என்னப்பா! எப்படியிருக்கே? சௌக்கியமா? என்று கேழ்க்கிறோம். அவரும் “சௌக்கியம்” என்கிறார். உடனே நமக்கு அவனது இளமை பழக்கமான கிண்டல், கேலி பேசுவது நமக்கு ஞாபகம் வருகிறது. இதைத்தான் இங்கே சொல்கிறார் – ஸூக்ஷ்மத்தன்மைகளும் புலனாகிறது என்று. எவரும் தனது உண்மைத் தன்மையை அறியாமல் இருப்பதே. நம்மை எப்படிப் பார்க்கிறோமோ அதேபோல மற்றவரையும் பார்க்கும் வழக்கம்தான் நம்மில் ஓங்கியிருக்கிறது.
உருவம், நிறம் போன்ற தன்மைகள் எல்லாம் ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் குணங்கள். பார்த்தவுடன் முதலில் அப்படித் தெரியும் வேற்றுமைகளைப் பார்த்துக்கொண்டே இருப்பவனுக்கு அவை மட்டும்தான் தெரியும். எப்படி ஒருவனைப் பார்க்கும்போது அவனுக்கும் நமக்கும் இருக்கும் வேற்றுமைகளைப் பாராட்டாது, நாம் அவனையும் நம்மைப்போல மனிதன்தான் என்ற ஒற்றுமையைப் பார்ப்பது உலகியல் வழக்கப்படி முன்னதைவிட உயர்ந்ததோ, அதேபோல ஆன்மீகத்திலும் நாம் பார்க்கும் பொருளின் வேற்றுமைகளை நீக்கிவிட்டு அவைகளின் உண்மைத் தன்மையை அறிய முயற்சிக்கவேண்டும்.
பகவான் உபதேசத்தை இங்கு நினைவு படுத்திக்கொள்வோம். ஒரு ஸாதகர், ‘‘பகவானே இந்த மனம் தானாகவே சென்று ஆத்மஸ்தானத்தில் சென்று உட்கார்ந்து கொள்ளக் கூடாதா‘‘ என்று கேட்டார். பகவான் அமைதியாக இருந்தார். அருகே அணில் ஒன்று நிறைய குட்டிகள் போட்டிருந்தது. அங்கும் இங்கும் தலையை தூக்கி ஓட எத்தனித்தது. மகரிஷி அதை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு சிறியகுடுவையில் எடுத்து பத்திரமாக வைத்து உணவும் கொடுத்தார். எதிரே இருந்தவர் முகம் மலர்ந்தது. பகவான் புரிகிறதா… என்பதுபோல பார்த்தார்.
‘‘இந்த அணில் குஞ்சுகளுக்கு நாம வெளியபோனா நம்மள பூனையோ, வேறு பிராணியோ கொத்தி தூக்கிண்டு போயிடும்னு தெரியாது. அதுக்கு அந்த விவேகம் வரவரைக்கும் நாமதான் அதை உள்ள போட்டுண்டே இருக்கணும். அதுமாதிரிதான் மனசுக்கு வெளிய போறதுனால துக்கம் வரும்கற விஷயம் தெரியாது. மனசுக்கா தெரியற வரைக்கும் நாமதான் அதை வெளியிலிருந்து உள்ள பிடிச்சு போட்டுண்டே இருக்கணும்’’ என்று எளிமையாக கூறினார். எத்தனை உண்மை பாருங்கள்.
நாம் காண்பதெல்லாம் எப்போதும் நமக்குச் சரிவரத் தெரிவதில்லை. அவையெல்லாமே நம் நம்பிக்கைக்குத் தகுந்தபடியும், சில சமயம் நம் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றவாறும் இருப்பதைத்தான் பார்க்கிறோம். ஆனாலும் ஒன்றின் தன்மைகளைப் பற்றி அறியும் முன்பாக, நாம் காண்பது முதலில் அங்கு இருக்கிறது என்பது உண்மைதானே? அதைக் காண்பதற்கும் முன்னால் நாம் இருக்கிறோம் என்பதும் உண்மைதானே? ஆக காணப்படும் ஒன்று எப்படி இருக்கிறதோ, அதேபோல காணும் ஒன்றாகிய நாமும் இருக்கிறோம் என்பதை யார் மறுக்க முடியும்? அப்படிக் காண்பவன் தன்னை அறிவதுபோல, காணப்படும் அதுவும் தன்னை அறிந்திருக்கலாம் என்று சொல்வதும் சரிதானே?
இப்படி இருப்பதும், அறிவதுமாய் உள்ள அந்த நிலை எவர்க்கும் பொதுவானதே. அந்த நிலையிலேயே நிற்பவனுக்கு எந்தவிதமான வேற்றுமைகளும் தெரியாது. அப்போது அவன் ஸதாசர்வகாலமும் ஆனந்தமாகவே இருப்பான். அந்த நிலையிலிருந்து வழுவி விடுபவனுக்கு மட்டுமே வேற்றுமைகளும், அதனால் வரும் இன்ப-துன்பங்களும் வரும்.

ஆத்மபோதம் 31 *த்ருபுடி*

பலநாட்களுக்கு முன்பு பாவனோபநிஷத் என்கிற நமது உபாஸனைக்குரிய வேத வாக்கியங்களைப்பற்றி சொல்வதாக எழுதி இருந்தேன். ஞாபமிருக்கும். அதனை விளக்கவேண்டிய நேரமிது. அந்த தத்துவங்களையே இங்கு சங்கரர் சொல்லப்போகிறார். எனவே இங்கு சங்கரர் சொல்வதை முதலில் படிப்போம். பிறகு பாவனோபநிஷத் விளக்கம் சொல்கிறேன். ஓரளவு ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ர நவாவரணபூஜை தெரிந்தவர்களுக்கும், சிதானந்தஅலையை நன்றாக படித்தவர்களுக்கும் பாவனோபநிஷத் என்பது நன்றாக புரிய வாய்ப்பு உண்டு. “பாவனோபநிஷத்தோ, ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ர நவாவரணபூஜையோ தெரியாத வர்கள்கூட ஆத்மஞானம் அடைவதில் எந்த தடையும் இல்லை.” ஆனால் ஒன்று. ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ர நவாவரணபூஜையும் அதற்கான தீக்ஷையும் ஸ்ரீஸத்குரு முகாது பிறவிப்பயானால் அடைந்தவர்களுக்கு வெகு சீக்கிரம் ஆத்மஞானம் கிட்டும் என்பது ஸத்யம். மற்றவர்களுக்கும் பிறவிப்பயனும், ஸாதனா பலமும், குருவாக்கியத்திலே சிரத்தையும் இருக்கும் பக்ஷத்தில் நிச்சயம் அவர்களும் ஞானம் அடைவதில் எந்த தடையும் இல்லை. அனைத்துக்கும் மூலம் தத்துவஞானமே! விசாரமே! முதலில் அதனை புரிந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து சங்கரரை பின்பற்றுவோம்….

ஞாத்ருஞானஞேயபேத: பரே நாத்மனி வித்யதே |
சிதானந்தைகரூபத்வாத்திப்யதே ஸ்வயமேவ தத் ||

அறிவான் அறிவோடு அறிபடுவ பேதம்
உறு பரமான்மாவில் உறாதே – அறிவின்
புருவாய் ஒன்றாய் அஹ்து உறுவதனால் தன்
உருவாலே தான் ஒளிரும் ஓர்

அறிபவன், அறிவு, அறியப்படுவது என்ற மூன்றுபுடிகளான வேற்றுமைகள் என்பது சாசுவதமான ஒன்றேயான ஆத்மாவிற்குப் பொருந்தாது. ஆன்மா அறிவுமயமாய், ஆனந்த வடிவாய், ஒரே பொருளாக இருக்கும் தன்மையதால் தானே தானே ஒளிரும் என்று உணர்ந்துகொள்.

*இதன் விரிபொருள்*
நாம் ஒன்றைத் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்றால் தெரிந்துகொண்டுள்ள அந்தப் பொருளையும், நம்மையும் தவிர, நமக்கு அந்த பொருளை பற்றியுள்ள அறிவு என்று மூன்றையும் பிரித்துச் சொல்வது வழக்கம். அதாவது அறிவு என்பது நம்மையும் அந்தப் பொருளையும் இணைக்கும் ஓர் உறவு என்று கூட சொல்லலாம். ஆத்மாவைப் பற்றிச் சொல்லும்போதும் அத்தகைய பிரிவுகள் உண்டா என்ற சந்தேகத்திற்குப் பதில் சொல்வதுபோல அமைந்திருக்கிறது இந்த ஸ்லோகம். இன்பம்-துன்பம், நல்லது-கெட்டது என்பன போன்ற குணங்கள் என்று வந்தால் இருமைகள் வந்துவிடும் என்று முன்பே பார்த்தோம். அதைப் போல அறிவு என்ற ஒன்று வந்துவிட்டால் முப்புடிகள் உண்டு என்று இங்கே பார்க்கிறோம். அதனால் ஆன்மாவைப் பற்றிய அறிவு வரும்போதும் இத்தகைய வர்ணனை உண்டா என்ற சந்தேகம் வருவது சகஜமே!
முப்புடிகளாகிய வேற்றுமைகள் வருவது புறநோக்கு இருக்கும்போது தான். அப்போதுதான் பார்ப்பவன் என்ற ஒரு ஆள் உண்டு. ஆன்மாவைப் பற்றி நாம் குறிப்பிடும்போது அங்கு ஆன்மாவைப் பார்ப்பவன் என்ற ஒரு ஆள் இல்லை. அப்படியிருந்தால் பார்க்கும் நான், பார்க்கப்படும் ஆன்மாவாகிய நான் என்ற இரு “நான்”கள் அல்லவா இருக்கவேண்டும். “நான்” என்ற நமது உணர்வு எப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளதால், அது என்றும் ஒன்றே. அங்கு இரு “நான்”கள் இல்லாததால் முப்புடிகளான வேற்றுமைகள் ஆன்மாவிற்குப் பொருந்தாது. ஆனால் ஒருவன் ஆன்மாவைப் பற்றிப் பேசும்போது, அப்படிப் பேசுபவன் “நான்” என்று எண்ணுபவனாதலால் ஆன்மா ஒரு பேசப்படும் பொருளாகி வேற்றுமைகள் தெரியும். அந்த வேற்றுமைகள் “தான்” என்று உணரப்படும் ஆன்மாவிற்குப் பொருந்தாது.
இங்கு சற்று மனசாந்திக்கு உதாரணம் காணலாம். நமது பூஜையை எடுத்துக்கொள்வோம். எதிரில் பூஜை செய்ய வைத்துள்ள ஸ்ரீசக்ரம் – ஸ்ரீமேரு அல்லது சாளக்கிராமம் ஏதோ ஒன்று. பூஜை செய்ய உள்ள நாம். பூஜா திரவ்யங்கள். அதாவது நீர், புஷ்பம் முதலியன. சரியா? இங்கு மூன்று விஷயம். ஆதனால் இது திருபுடி-முப்புடி என்பர். (ஞாத்ருஞானஞேயனாம் அபேதபாவனம் ஸ்ரீசக்ரபூஜனம் – இது பாவனோபநிஷத் வாக்கியம். அறிபவன் – அறிவு – அறிபடும் பொருள் என்று.) (we know in English subject – predicate – object. These are not separate)
இங்கு ஆத்மா – அறிவு – நான் மூன்று இருக்கிறதா? இல்லை. இங்கு ஆத்மா ஒன்று மட்டுமே இருக்கிறது. மேலும் அது தன்னையே உணர்ந்து கொள்ளும் அறிவுமயமாயும் இருக்கிறது. “நான்” என்று சாதாரணமாக நம்மை நினைத்துக்கொண்டு செயலாற்றும் போது நமக்கு உள்ள புத்தியும் அந்த அறிவின் பிரதிபலிப்பாய் அதிகரிக்கிறது. ஆன்மாவோ அறிவுமயமாய் மட்டும் இல்லை, எப்போதும் ஆனந்தம். அப்படி அது இருப்பதற்குக் காரணம் அது தங்க்குத்தானே ஒளிர்வதால் மட்டுமேதான். அதனால் ஒருவன் தான் பார்க்கும் வேற்றுமைகள் அனைத்தையும் விலக்கி ஆன்மாவின் இருப்பிலே தனித்து இருந்தால் அறிவதற்கு என்று வேறு ஒன்றும் தனியாக இருக்காது; ஆனந்தம் என்பதும் அவனுக்கு வெளியில் இருந்து வரவேண்டும் என்ற அவசியமும் ஏற்படாது. அவனுக்கு அவனே ஆனந்தம். இப்படி உள்முக தியானம் செய்துவர வர அறியாமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும். அதைத்தான் அடுத்து சங்கரர் சொல்கிறார்……

ஏவாமாத்மாநௌ த்யானமதேனே சததம் க்ருதே |
உதிதாவகதிர்ஜ்வாலா ஸர்வஞானேன்தனம் தஹேத் ||

ஆன்மாவெனும் அவ்வரணியில் இவ்வித
ஆன்மத் தியான அகமதனம் – தான் முயன்று
சந்ததம் செய்தலால் சார் ஞானத் தீ மடமை
இந்தனம் எல்லாம் எரிக்குமே

உள்முகநோக்கம் கொண்ட ஜீவான்மாவெனும் அரணிக்கட்டையில் இப்படியாக ஆன்மத்தியானம் என்ற உள்முகக் கடைதலை ஒருவன் இடைவிடா முயற்சியால் எப்போதும் செய்துவந்தால், அதிலிருந்து கிளம்பும் ஞானம் எனும் தீ அறியாமை என்ற விறகுக்கட்டைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் எரித்துவிடும்.

*இதன் விரிபொருள்*
ஆன்மா எத்தகையது என்றும் ஆன்மத் தியானம் எத்தகைய பாவனையுடன் செய்யப்பட வேண்டும் என்றும் இதற்கு முன் நாம் படித்த பாடல்களில் சொல்லப்பட்டன. இரு அரணிக்கட்டைகளை ஒன்றின்மேல் ஒன்று வைத்து, தொடர்ந்து வெகு வேகமாகக்கடைந்து அதிலிருந்து வரும் தீப்பொறிகளில் தேங்காய்நார்களை வைத்து, (யாக) வேள்விகளுக்குத் தேவையான அக்னியை அந்தணர்கள் உண்டு பண்ணுவார்கள். அதைப்போல ஆத்மஸாதகனும் தன் மனமாகிய கருவியைக்கொண்டு, அதனை வெளியுலகில் செல்லவிடாது உள்முகமாக திருப்பி, தொடர்முயற்சியினால் ஆன்மாவைப் பற்றிய தியானத்தைப் பழகவேண்டும்.
ஆரம்பத்தில் வெளியுலக விஷயங்களை விடுவதிலும், தான் தேகத்தையும், மனஸையும் கடந்த ஆன்மா என்று பாவிப்பதிலும் தடைகள் பலவரும். இது எல்லாமே அவரவர்களுடைய பழைய வாஸனைகளினால் வரும் இடையூறுகளே!. அதனால்தான் தொடர்பயிற்சியும், எடுத்துக்கொண்டுள்ள விஷயத்தில் வைராக்கியமும் அவசியம் வேணும். எப்படி அரணிக் கட்டைகளை மிருதுவாக உராசுவதாலும், தொடர்ந்து கடையாமல் விட்டுவிட்டுச் செய்வதாலும் தீப்பொறிகளை உண்டாக்குவதில் பயனிருக்காதோ, அதேபோல ஆத்மஸாதகனின் தொடர் முயற்சியும், மனோபலமும் இல்லாவிட்டால் அவனுக்குத் தேவையான பலன்கள் கிடைக்காது.
மனத்தை அரணிக் கட்டையாகவும், இடைவிடாத ஆத்மத்தியானத்தை கடைவதற்கு உண்டான மற்றொரு கட்டையாகவும், அதனால் வரும் ஆத்மாகார மனோவிருத்தியை கடைவதால் கிளம்பும் நெருப்பு பொறியாகவும் இங்கு உருவகப்படுத்திச் சொல்லப்படுகிறது. ஆத்மாகாரமனோவிருத்தி (இதை விருத்திஞானம் என்பர்.) (அதாவது ஆங்கிலத்தில் Perceivable Knowledge என்பர்) பரவி கொழுந்துவிட்டு எரியும் ஞானத்தீயை (ஸ்வரூபஞானம் என்பர்.) (அதாவது ஆங்கிலத்தில் Existential Knowledge என்பர்.) கிளப்பி, இறுதியில் ஆன்மாவேறு தான்வேறு என்ற பாவனையை அழித்துவிடும்.
இவ்வாறாக முயற்சியும், பாவனையும் சரிவர அமைந்துவிட்டால் ஸாதகனுக்கு அதனால் வரும் ஞானம், (தீயானது தன்னைச் சூழ்ந்திருக்கும் கட்டைகளை ஒன்றுவிடாமல் பொசுக்கி சாம்பலாக்கி விடுவதைப்போல,) அதுவரை தன்னைப் பற்றி அவன் அறியாதிருந்தது என்று அவன் எண்ணிய நிலையை சுத்தமாக நீக்கி அவனது எப்போதுமுள்ள உண்மையான நிலையை அனுபவிக்க வைக்கும். ஆன்மா இருப்பதும் அல்லாது அறிவுமயமாயும், ஆனந்தமாயும் இருப்பதை அவனுள் காட்டுவதோடல்லாமல், அவனது வெளியுலகமும் அதே அறிவோடும், ஆனந்தமாயும் இருப்பதை உணர்த்தும். எல்லாம் ஒன்றே என்ற நிலை அமையும். அதன்பின் எப்படி இருமைகளோ, முப்புடிகளோ இருக்கும் அல்லது தோன்றும்?

ஆத்மபோதம் – 32 *ஆன்மஒளி-ஞானத்தங்கம்*

அருணேனேவ போதேன பூர்வ சந்தமசே ஹ்ருதே |
தத் ஆவிர்பவேதாத்மா ஸ்வயமேவாம்சு மானிவ ||

அருணனாலே அல்லகலுதல் போல் முன்
மருவு அறிவால் அம்மடமை – இரியவே
பொங்கும் ஆன்மா பரிபூரணமாகவே
பொங்கும் ஆதித்தனைப் போல்.

அருணன் ஓட்டிவரும் ஸூரியரதம் கிளம்‌பினதும் இருள் தானே அகன்று விடுவது போல அதற்கு முன்பு இருந்த மடமையான அக்ஞானம் விலகி, ஒளி வீசும் சூரியனைப்போல பரிபூரணமான ஆன்மா தானாகவே பொங்கி ஒளிரும்.

இதன் விரிபொருள்

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல *அருணோதயம்* என்பது விடியற்காலையில் ஸூரியன் உதிப்பதற்கு முன்பாக வரும் ஒளியை குறிப்பிடுவோம். அதை அருணன் என்ற ஸாரதி ஓட்டிக்கொண்டு வருவதாக சொல்லுவார்கள். ஸூரியன் வருவதற்கு முன்பாகவே அவனது வரவைக் கட்டியம் கூறுவதுபோல வரும் ஒளியால் இரவு முழுதும் கவிந்திருந்த இருள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிவிடும். இந்த இயற்கை நிகழ்வை உவமையாக எடுத்துக் கொண்டு, ஸாதகனின் தீவிர ஸாதனையால் அடையப்பெறும் விருத்திஞானத்தால் ஆன்மாவைப் பற்றின அறியாமை அதாவது அக்ஞானம் அகலும் நிலையோடு பகவத்பாதர் ஒப்பிடுகிறார். முதலில் கிளம்பும் தீப்பொறி அதனைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் சுட்டு எரிக்கமுடியாது. அது சுற்றி இருப்பதைப் பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரியும்போதுதான் அதற்கு வலிமை கூடும். அதேபோல இங்கும் விருத்திஞானம் கிளம்பியதும் அது ஸ்வரூபஞானமாகி அனுபவத்தில் கொண்டு விடுமுன் உள்ள நிலை பற்றி இங்கே சொல்கிறார்.
முதலில் நாம் பார்த்த மாதிரி அறியாமை என்ற ஒரு நிலைக்கு இருப்பு என்பது தனியே கிடையவே கிடையாது. ஆன்மாவைப் பற்றிய அறிவு இல்லாமையே தான் அறியாமை அறியாமை என்கிறோம். அப்படி ஆத்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் நமது வாஸனைகளான மறைப்புகள் ஒவ்வொன்றாக அகலும் நிலைதான் இங்கு குறிப்பிடப்படும் அருணோதயநிகழ்வுகள்.
வாஸனைகள் முற்றும் அகலவே, திடீரென்று கண்ணைக்கூசுகிற அளவு ஒளி மிகுந்த சூரியன் உதிப்பதுபோல ஆன்மா தானே ஒளிர்ந்து, அதுவரை இடைவிடாத தியானத்தால் (நிதித்யாஸனம்) ஸாதகன் முயன்று அடைந்த விருத்திஞானத்தையும் அழித்து அவன் தானே தானாக இருக்கும் ஸ்வரூபஞானத்தை அளிக்கும்.
(நடுவில் நம்நிலையை சற்று பார்ப்போம். இதுதான் *ஸ்வரூபநிரூபணம்* என்பது. இதனை இவ்வளவுதூரம் பயிற்சி செய்யாமல் தன் ஒரு சொல், ஒரு ஸ்பர்சம், ஒரு பார்வை இதானாலேயே தன் சீடனை ஆத்மஞானியாக்குகிறார் நமது ஸத்குரு. சிலர் அதிலேயே அப்போதே ஆகிவிடுகின்றனர். பலருக்கு உலகியல் ரீதியாக வாஸனை, பந்தங்கள் இருப்பதால் அவனுக்கு தொடர் பயிற்சி தேவையே! அதுக்குத்தான் இது. கை வலிக்க தட்டச்சும், படி படி என்ற ஊக்குவிப்பும்.)
அந்த நிலை ஓர் அறிவுபூர்வமான நிலையாக இல்லாது ஓர் அனுபவ நிலையாதலால், அதை அனுபவிப்பவனுக்கு தான் வேறு, தான் காணும் காக்ஷி வேறு என்று இல்லாத *பரிபூரணமானஞானம்* கிட்டுகிறது. ராமராஜ்ஜியத்தில் எவரும் உண்மையைத்தவிர வேறு எதுவும் பேசியதில்லை என்பதாலே குடிமக்களுக்கு உண்மை என்றால் என்ன என்றே தெரியாது. அதைப்போல அனைத்தையும் உள்ளடங்கிய ஆன்மாவிலேயே லயித்து இருப்பவனுக்கு அனைத்தும் ஆன்மாதான். அதனால் அனுபவிப்பவன் என்றும் தனியாக ஒருஆள் என்று அங்கில்லை. எல்லாம் ஒன்றே, அதுவே பேரறிவு, அதுவே அன்பு, அதுவே ஆனந்தம் என்பதால், அது மட்டுமே இருக்கிறது என்பதுதான் ஸத்யம். அதுவே இப்போதும் எப்போதும் எவருக்கும் உள்ளநிலை என்பதே உண்மை. அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதைத்தான் ஒருபாடல் சொல்கிறது…
“இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே” என்று.
சரிதானே! ஆத்மஞானம் அடைந்தவர்களுக்கு அனைவரும் எதுவும் எப்போதும் எங்குமே *ஞானத்தங்கமே!* ஆனால் நமக்கு இது புதிதாக அடையப்பட்டதுபோல் தெரிகிறதே என்றால் தொடர்ந்து சொல்கிறார்..

ஆத்மா து சததம் ப்ராப் தோப்ய ப்ராப்தவத வித்யயா |
தன்னாசே ப்ராப்தவத்பாதி ஸ்வகண்டாபரணம் யதா ||

ஆன்மா எப்போதும் அடைந்துளதே ஆனாலும்
தான் மடமையால் அடையாதாய் அமரும் – மால் மடிய
எய்தப் பெற்றார் போல் இலகும் தன் கண்ட அணி
எய்தப் பெற்றார் போலவே

ஆன்மாவானது எப்போதும் நம்மால் அடையப்பட்டதே ஆனாலும், நமது அரியாமையால் நாம் அதை அடையவில்லை என்று தோன்றும். தன் கழுத்திலே இருக்கும் நகையொன்று தொலைந்து போய்விட்டதே என்று எண்ணித் தேடுபவன் அது தன் கழுத்திலேயே இருப்பதைக் கண்டது போல, அஞ்ஞானம் அழிந்தவனுக்கு ஆன்மா புதிதாக அடையப்பட்டது போலப் தெரிகிறது.

இதன் விரிபொருள்

ஸ்ரீபகவான் சொவார் – எண்ணங்களே மனம் என்று. மனம் என்று ஒன்று வந்துவிட்டால் அது நம்மைப் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. இருப்பதை இல்லாததாகக் காட்டும்; இல்லாததை இருப்பதாகக்காட்டும். நமக்கு வேண்டியது என்றால், அது நல்லதல்ல என்று எல்லோரும் சொன்னாலும், அதை எப்பாடு பட்டாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பெற்றதை வைத்துக்கொண்டு ஆளவும் வேண்டும் என்றும் தோன்றும். நமக்கு வேண்டாதது என்றால், அது கிடைப்பது நல்லது என்றாலும், அதுவே நம்வீட்டு வாசலைத் தட்டிக்கொண்டு தானே உள்ளே வரநினைத்தாலும், நம் முகத்தை வேறு பக்கம் திருப்பி அது இல்லாதது போல நடிக்கும். இன்றைய தேவை நமக்கு நாளை வேண்டாததாகும்.
இன்று ஒன்றைத் தேடி அலையும் மனஸ், நாளை காரணம் ஏதும் அறியாமலேயே அதை வெறுத்து ஒதுக்கும். இவை யாவும் மனஸின் குணங்கள்.
தன்னிடம் என்ன இருக்கிறது என்பதைக்கூட அறிய முடியாதபடி தடுப்பதும் அந்த மாதிரியான மனஸின் விளையாட்டுக்களில் ஒன்றுதான். பெரும் தனிகனாக இருக்கலாம். ஆனால் தான் ஓர் ஏழை என்று மனது நினைத்தால் அவன் ஏழைதான். இருக்கும் செல்வமெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியாது. அதேபோல விலை மதிக்க முடியாத பெருநிதி ஒன்று தன்னிடம் இருக்கிறது என்பதையும் அறிய முடியாது தடுப்பதும் அந்த மனம்தான். ஏன்? நம்மையே எடுத்துக்கொள்ளுங்கள். பிறவியை போக்கும் வித்யை இது, 21 தலைமுறைகள் கரயேற்ற வைக்கும் வித்யை இது, எத்தனை ஆண்டுகள் தவமிருந்தாலும் கிடக்காத வித்யை இது என்றெல்லாம் நமது உபாஸனையை நமது குருமண்டலமும், அறநூலும் எத்தனை சொன்னாலும் நாம் கேழ்க்கிரோமோ? அதுபோல்தான்.
அதனால் ஒருவன் தான் போட்டுக்கொண்டிருக்கும் நகை காணாது போய் விட்டதே என்று நினைக்கிறான். அது அவன் கழுத்தில் இருக்கும்போதும் காணாமல் போன நகைதான். அவன் எங்கெங்கெல்லாம் சாதாரணமாக நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோனோ, அங்கு கூட சென்று தொலைந்து விட்டதாக நினைத்த நகையைத் தேடி அலைவான். ஆனால் அவன் காதிலோ, கழுத்திலோ அந்த நகையைப் பார்த்த நண்பன் இவன் தேடுவதைபார்த்து “நீ தேடும் நகை உன்னிடமே உள்ளது” என்று சொல்லி, அவனது கையைக் கொண்டோ அல்லது ஒரு கண்ணாடி கொண்டோ அவனுக்கு நிரூபித்தான் என்றால், அப்போது அவன் மனம் மகிழ்ந்து விடும். நகை தொலையவும் இல்லை ஆனால் அது தொலைந்து விட்டதே என்று விசனப்படுவதும், தொலைந்து போனதாக நினைத்த நகை மீண்டும் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்ததுமான இந்த உதாரணத்தை காட்டி, ஆன்மாவைத் தேடி அலையும் ஸாதகனின் மனநிலையை பகவத்பாதாள் இங்கு விளக்குகிறார். நகை கெட்டுப்போனது இல்லை. திரும்பக்கிடைத்தது என்பதும் இல்லை. இரண்டுமே ஸத்யமல்ல. இருந்தாலும் அவை நடந்தது போல நினைப்பது மனத்தின் லீலைகள். இல்லையானால் முதலில் துக்கமும், பின்பு சந்தோஷமும் ஏற்படுமா? ஆகவே கடைசியில் தொலைந்தது மனஸின் காக்ஷிகளே. ஸாதகனின் பயிற்சிகளும், முயற்சிகளும் அதே போல இல்லாத நினைப்புகளை நீக்குவதற்கே என்று உறுதி செய்கிறார்.
இதனையே தொடர்ந்து நாளை காண்போம்…..

ஆத்மபோதம் – 33 *ஒன்றே ஆத்மா*

அவன் ஆன்மாகவாகவே இருந்துகொண்டு ஆன்மாவைத் தேடி முயன்று ஆன்மாவை அடைந்துவிட்டதாக எண்ணுகிறான். உண்மையில் ஆன்மா அப்படியேதான் எப்போதும் இருக்கிறது. மாற்றங்கள் எல்லாம் தான் ஆன்மா இல்லை* என்று அஞ்ஞானத்தினால் எண்ணிய இவனுக்குத்தான். அஞ்ஞானம் அகல *ஞானம்* புதிதாக வந்திருக்கிறது என்று சொல்வதை விட, தான் எப்போதும் அப்படியேதான் இருக்கிறோம் என்றுணர்ந்ததால், தானாக வரவழைத்த அஞ்ஞானம்தொலைந்தது என்று சொல்வதுதானே இங்கு பொருத்தமாக இருக்கிறது.
அடுத்த பலடலில் வேறு ஒரு உதாரணம் சொல்லி இதை உறுதி செய்கிறார்.

ஸ்தாநௌ புருஷவத் ப்ரான்த்யா க்ருதா ஜீவதா |
ஜீவஸ்ய தாத்விகே ரூபே தச்மின்த்ருஷ்டே நிர்வததே ||

பிரமத்தில் சீவன் பிராந்தியால் கட்டை
புருடன்போல் கற்பிதன் பொய்யாம் – உருவத்தின்
தத்துவம் யாது என்று உணரின் அவ்வுருவம்
வத்து ஆகாது மதி

இருட்டில் இருக்கும் மரத்துண்டு ஒன்று மனிதனாகத் தோன்றுவது போல, மனப்பிராந்தியால் பிரம்மத்தில் ஜீவன் கற்பிக்கப்படுகிறான். கற்பனையில் உருவான இந்தப் பொய்யாகிய உருவத்தின் உண்மை எதுவெனத் தான் உணரும்போது அந்தக் கற்பனையுருவம் பொருளற்றது என்று அறியவேணும்.

இதன் விரிபொருள்

ஓவ்வொருநாளும் மாலை வந்ததும் இருள் பரவத்தொடங்கும், அப்போது நிலவு மற்றும் விளக்குகள் ஒளிரும். தவிர, சிற்சில இடங்களில் இருள் கவிந்திருக்கும். அத்தகைய சூழலில் ஒரு மரத்துண்டை பார்த்துவிட்டு ஏதோ ஓர் மனிதன் நிற்பதுபோலத் தோன்றினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நம் மன நிலைக்குத் தகுந்தவாறு அந்த ஆள் திருடனோ அல்லது வேறுயாரோ தெரியவில்லை. ஒரு மனிதன் நிற்கும்போது எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரிந்த உருவகத்தை நாம் அந்த மரக்கட்டை மேல் ஏற்றிப் பார்க்கும் நம் பார்வையே தவிர, உண்மையில் அங்கு ஒருவன் இல்லை; இருப்பது மரத்துண்டுதான். இந்த உபமானத்தை வைத்து பகவத்பாதாள் இருக்கும் பிரம்மத்தின் மேல் இல்லாத ஜீவனை ஏற்றிப் பார்ப்பதை விளக்குகிறார். இருளில் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு போனால் அது யார் அல்லது என்ன என்று தெரிந்துவிடும். இருள்தான் நமது அறியாமை. அங்கு ஆன்மஅறிவு என்னும் விளக்கை ஏற்றிவிட்டால் (குரு உபதேசம்) உண்மை என்ன என்று தெரிந்துவிடும்.
இதற்கு எனது தாத்தா தன் நண்பருக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை என்னிடம் சொல்லியுள்ளார். அது அப்படியே இதுபோல் நடந்தது. சரியான சமயத்தில் எனக்கு ஞாபகம் வந்தது. சொல்கிறேன். கிராமத்தில் தாத்தாவின் நண்பர் விடியற்காலை ஒருவரை பார்க்க சுமார் 1 கிலோமீட்டர் நடக்கணும். தூரத்தில் ஒருமரத்தடியில் கருப்பாக ஏதோ ஆடியது. இவருக்கு உள்ளூர பயம். ஏனெனில் அது ஒரு பிசாசு என இவருக்கு எண்ணம். அது மரத்தின் அடியில் ஆடிக்கொண்டுள்ளது. பார்த்துக்கொண்டே கையில் ஒரு குச்சியுடன் தான் செல்கிறார். இருந்தும் பயம். மெதுவாக அடிமேல் அடி வைத்து நடக்கிறார். அருகிலும் சென்றுவிட்டார். மிகுந்த பயம், நடுக்கத்துடன் தைரியத்தை வரவழத்துக்கொண்டு, தெய்வங்களையெல்லாம் மனதில் வேண்டிக்கொண்டு கண்ணையும் மூடிக்கொண்டு கையில் உள்ள கம்பால் ஓங்கி அதை ஒரே அடி வைத்தார். அவ்வளவுதான். பொலபொலவென ஒரு கொடி மரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்த அது (இதை ஓணாங்கொடி என்பர்.) தூள்தூளாக விழுந்தது. ஏனென்றால் அடி அவ்வளவு பலம். உடனே “ச, கொடிதான், பிசாசு இல்லை”. என்று தானாகவே சொல்லிகொண்டு சற்று ஆசுவாசபடுதிக்கொண்டு போகவேண்டிய இடம் சென்றுவிட்டார். மாலையில் சொந்த வீட்டுக்கும் வந்து விட்டார். மறுநாள் முதல் நல்லஜுரம் கண்டு 4 நாட்கள் படுத்திருந்து இறந்தும் விட்டார் என்பது தாத்தா சொன்ன உண்மை நிகழ்ச்சி. பாருங்கள். இல்லாத பிசாசு இவருக்கு எமனாக வந்தது. அழுத்தமாக பிசாசு உண்மையில் இருக்கிறது என்றுதான் நினைத்தாரே தவிர அழுத்தமாக இல்லை என்று நினைக்கவில்லை. இவர் ஆன்மவிளக்கை ஏற்றவே இல்லை. அதுதான் காரணம்.
எவரும் தாம் இருப்பதை அறிந்துள்ளனர். அதேபோல தன் விழிப்பு நிலையில் தம் புலன்கள் மூலம் உலகம் இருப்பதையும் அறிகின்றனர். இரண்டும் தனக்கு உண்மையாகத் தோன்றுவதால், மனிதர்களில் பலரும் அதற்கு மேல் தனது அனுபவங்களைப் பற்றி மேலும் சிந்திப்பதில்லை. வெகு சிலரே தாம் காண்பது, அனுபவிப்பது என்பது எல்லாம் தனது கனவு என்று யோஜிக்கின்றனர். மற்றவர் அனைவரும் காணப்படுவதுதான் உண்மை என்றும், தானும் உலகமும் இருப்பதால் அவைகள்தான் அந்த உண்மையின் பாகங்கள் என்று உறுதி செய்து விடுகின்றனர். அதற்கும்மேல் சிந்திக்கும் சிலருக்குத்தான் ஜீவராசிகளின் படைப்பில் காணப்படும் வேற்றுமைகள் உண்மையல்ல; அந்த வேற்றுமைகளைக் கடந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படையான மூலகாரணம் ஒன்று உண்டு என்று அறிகின்றனர்.
தங்கள் வளர்ந்த விதத்தால் அவர்கள் அந்த மூலத்தை வெவ்வேறு வடிவில் சொல்கின்றனர். அனைத்தையும் கடந்தும் அதேசமயம் அனைத்தின் உள்ளும் இருப்பதால் அதைக் கடவுள் என்று சொல்லி சிலர் அதை கும்பிடுகின்றனர். அனைவரிடமும் இருப்பது ஒன்றே, அதுவே பலப்பலவாகக் காணப்படுகிறது என்று சிலர் அந்த ஸத்தை ஆன்மா என்று சொல்கின்றனர். ஒன்றாய் இருப்பது பரமாத்மா என்றும், தனித்தனியாய் காணப்படுவது ஜீவாத்மா என்றும் கூறி, தனி என்று சொன்னாலும் அந்தப் பரம்பொருள் இருப்பதால்தான் ஜீவன் இருக்கிறது என்று விளக்குகின்றனர்.
இந்த விளக்கங்களைச் சரியாக தெரியாதவர்கள், காணப்படும் ஜீவன்தான் இருக்கும் ஒன்றே என்று மரத்துண்டில் காணப்படும் மனிதனைப்போல ஜீவனை பரத்தின் மேல் ஏற்றிக் காண்கின்றனர். இப்படி அவர்கள் தவறாக அறிந்துள்ளதைப் புரியும் காலம் அவர்களுக்கு வரும்போது, தான் கண்டது வெறும் கற்பனையே, பொய்யே என்றும், உண்மையில் உள்ளது பரம்பொருளான ஆத்மா ஒன்றே என்றும் அறிகின்றனர். இதற்கு குரு கிருபை வேணும்…
அடுத்த பாடல் பார்ப்போம்.

தத்வரூபானுபவாதுத்பன்னம் ஞானமஞ்சஸா |
அஹம் மமேதி ச ஞானம் பாததே திக் ப்ரமாதிவத் ||

தத்துவ சொரூப அனுபூதியால் தானுதி
உத்தம ஞானம் உடனே அம் – மித்தையாம்
நான் எனது அஞ்ஞானம் நசிப்பிக்கும் திக்பிரமை
பானு உதயத்து எனவே பார்.

இருட்டில் திசைகளை அறியமுடியாத திக்பிரமையானது சூரியன் உதித்தவுடன் நீங்குவதுபோல, இல்லாத ஒன்றான ‘நான்’ என்ற அகங்காரத்தையும் ‘எனது’ என்ற மமகாரத்தையும், உள்ள ஒன்றேயான பிரும்மஸ்வரூப அனுபவத்தில் தனக்குத் தானே உதிக்கும் ஞானம் அழித்துவிடும்.

இதன் விரிபொருள்

ஒரு புதிய ஊரில் திசைகளுக்கு எப்போதும் தடுமாட்டம் இருக்கும். அதுவும் அப்போது இருட்டு என்றால் குழப்பம் வருவதற்கு வேறு காரணம் கேட்கவே வேண்டாம். அப்போது வேறொருவர் சொல்லி நமக்குத் திசைகளைப் புரியவைப்பார். ஆனால் சூரியன் உதித்து விட்டால், அது கிழக்குத் திசை என்பதால், வேறு எவருடைய துணையும் இல்லாமல் குழப்பம் தனக்குத் தானே தீர்ந்துவிடும். அதைப்போல தன் *ஸ்வரூபஞானம்* வந்ததும் ஜீவனுக்கு தன்னையும் உலகையும் பற்றிய குழப்பம் நீங்கிவிடும்.
ஜீவன் எனத்தன்னைப் பாவிக்கும் ஒருவன், இப்பரந்த உலகத்தில் தான் மற்ற எல்லோரையும் போல இன்னுமொருவன் என்றே நினைக்கிறான். “நான்என்று ஒருவன்” என்ற அந்த எண்ணத்தில் இருக்கும் அவனுக்கு, “தனக்கு” என்று சில பொருட்களும் சில மனிதர்களும் இருப்பதாகவும் எண்ணங்கள் வளர்கின்றன. இந்த எண்ணம் அவனுக்கு எப்படி வந்தது என்று கேட்டால் அவனுக்கே அது புரியாது. அவனைப் போலவே மற்றவர்களும் “தான் – தனது” என்று இருப்பதால் அவனுக்கு தனக்கு உள்ள அந்த எண்ணத்தைப் பற்றிய சந்தேகமும் வருவதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவனது உண்மை நிலையை அவன் அறியாமல் இருப்பதே. இந்த அறியாமைதான் அவனது இருள்.
வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் அவனுக்கு தனது நிலையைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, அவனை அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான சூழ்நிலைகளும் அமைகின்றன. (ஆத்மவிசாரம்) அப்போது அவனுக்குப் பொதுவாக இரண்டு வழிகளே இருக்கின்றன என்று ஸ்ரீபகவான்ரமணர் சொல்கிறார்.
ஒன்று அவன் தன்னை யார் என்று கேட்டு தன் உண்மை ஸ்வரூபம் தெரிந்துகொள்வதற்கு ஞானவிசாரம் செய்து தெளிவடைவது.
இரண்டாவது தேர்ந்த குருவிடம் தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டி அவரைத் சரண் அடைவது. அப்படி நீரே கதி என சரணாகதி வேண்டிச் சென்றவனின் மனத்தை குரு நிர்மூலம் ஆக்கி அவனது உண்மை ஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டுவார்.
ஸ்ரீபரமஹம்ஸரும் அதே போலச் சொல்லி, நரேந்திரர் எப்படி தனது அஹங்காரத்தை பூதாகாரமாக்கி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொண்டார் என்றும், நாகமகாசயர் எப்படி தனது அஹங்காரத்தைச் சுருக்கி தன்னை ஒன்றும் இல்லாமல் செய்துகொண்டார் என்றும் சொல்கிறார்.
1. விசாரம் செய்து பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே தான் என்று உணர்வது,
2. குருவே எல்லாம் என்று அடிபணிந்து தன்னை ஒன்றும் இல்லாமல் ஆக்கிக்கொள்வது.
இந்த இரண்டு வழிகளில் தனக்கு ஒத்துக்கொள்ளும் வழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முன்னேறி தனது உண்மை சொரூபத்தை அறிபவனுக்கு, உதிக்கும் சூரியன் முன் இருள் ஓடிப்போவதூம், திசைகள் தானே விளங்குவதுபோலவும், பிசாசு இல்லை இது கொடிதான் என்று அறிவது போலும், அதுவரை அவனை ஆட்கொண்டிருந்த அறியாமை தானே விலகும். எல்லாம் அப்போது ஒன்றே என்று தெரியவருவதால் “நான்-எனக்கு” என்ற எண்ணங்களும் அங்கு நிலைப்பதில்லை.
தொடர்ந்து நாளை பார்ப்போம்…..

ஆத்மபோதம் – 34 *ஆத்மவேதம் – மனப்பாலம்*

அறியாமை விலகி எல்லாம் தானே என்ற எண்ணம் திடப்படும் என்றோமே அது எப்படி என்று காணுவோம்…

ஸம்யாக்விக்ஞானவான் யோகீ ஸ்வாத்மன்யேவாகிலம் ஜகத் |
ஏகம் ச சர்வமாத்மானமீக்ஷதே ஞானசக்ஷுஷா ||

நன்று தனை அறி விக்ஞானியாம் யோகியும்
ஒன்றும் எலாம் தன்னில் உறுவதை – ஒன்றான
தான் எல்லாமாய் உளதைத் தன் ஞானக் கண்ணினால்
தான் காண்பான் என்றே தரி.

தன்னை நன்கு அறிந்த விக்ஞானியான யோகி தன்னுடன் ஒன்றி இணைந்து உலகில் காணப்படும் எல்லாம் தன்னில் இருப்பதையும், ஒன்றேயான ஆன்மாவாகும் தானே எல்லாமாய் இருப்பதையும் தனது ஞானக் கண்ணினால் காண்பான் என்பதை உறுதியாக அறிந்துகொள்.

இதன் விரிபொருள்

இங்கு விக்ஞானி என்ற சொல் அனுபவத்தில் காண்பவன் என்ற பொருளைக் குறிக்கும். (Scientist என்ற பொருளில் இங்கு வராது.) எப்போது ஒருவன் ஆத்ம விசாரம் செய்து அனுபவத்தில் தன்னைத்தான் நன்கு தெரிந்து கொள்ளுகிறானோ அப்போதே அவன் யோகியாகிறான். அவனுக்குத் தான் காணும் உலகில் உள்ள எல்லாமும், தான் பார்ப்பதால், தன்னுள்ளே இருப்பதாகவும் தெரியும். தன்னுடைய இருப்பைச் சார்ந்தே அனைத்தும் காணப்படுவதால் பார்க்கும் அனைத்தும் தன்னைப் போலவே ஆத்மமயமாக இருப்பதாகவும் உணர்கிறான். இதுதான் யோகம் என்பதன் பொருளாகும். பகவத்கீதை சொல்கிறது:

அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்….

இந்த ஸ்லோகம் கேட்டிருப்பீர்கள். இதற்கு என்ன பொருள்? வேறு எண்ணமின்றி, அனவரதமும் என்னையே நினைத்துக் கொண்டு என்னையே என்றும் உபாஸித்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பவர்களின் யோகக்ஷேமத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
நமது யோகக்ஷேமம் என்றால் என்ன? தெரியுமா? இதுதான். தன்னையன்றி வேறு ஒன்றும் இல்லை என்ற யோகம் தான். இதனை உணர்ந்தால் இதுவே க்ஷேமம்தான். எனவே ஸாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காக்ஷி என்ற திரிபுடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காக்ஷி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காக்ஷி. ஒரு யோகிக்கு அந்த ஸாதாரண ஊனக்கண் காக்ஷி கிடையாதா என்று கேட்டால் உண்டு. ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும். அதாவது முற்றும் உணர்ந்த யோகிக்கும் உலகம் உண்டு. அவனுக்கும் வலிக்கும். பசிக்கும். ஆனால் அது ஆன்மவடிவாய்த் தெரியும். அதனாலேயே அவனைப் பொருத்தவரை எல்லோருமே ஞானிகள்தான். சிலர் அதை அறிந்தவர்கள், வேறு சிலர் அதை அறியாதவர்கள். ஸாதாரணப் பார்வையில் எல்லோரும் வேற்றுமையைக் காண்கின்றனர். யோகியோ அனைத்திலும் ஒற்றுமையைக் காண்கிறான். இந்த இரண்டையும் ஸமஸ்க்ருதத்தில் முறையே “பேததிருஷ்டி” என்றும் “அபேததிருஷ்டி” என்றும் சொல்லுவார்கள். இதையே “யாதுமாகி நின்றாய் காளி…” என்பான் பாரதி! அருட்சக்தியின் குருப்ரகாசமலரில் “எல்லாம் நானே! …. என ஒரு கவிதை இருக்கும். அது நாம் தேவிக்கு செய்யும் உபசாரங்கள் அத்தனையையும் ஆத்மாதான் என்றபடி அமைந்திருக்கும். அங்கு சென்று படித்து பாருங்கள். 1989-90 களில் இந்த நினைவை – அனுபவத்தை ஸ்ரீகுருஜி அவர்கள் அருளினார்கள். தேவிக்கும் எனக்கும் ஒரு மனப்பாலம் போட்டார். நடந்தேன். அதற்காக அருட்சக்தியை யோகி என்று சொல்ல வரவில்லை. இந்த அனுபவத்தில் இந்த சிந்தனையில் மனம் தோய்ந்திருந்ததை உங்களுக்கு சொல்லுகிறேன். நீங்களும் இந்த மனப்பாலத்தில் நடங்கள். நீங்கள் யோகியாகலாம்.
அடுத்த பாடலில் இதே கருத்தை சங்கரர் வலியுறுத்துகிறார்…….

ஆத்மைவேதம் ஜகத்ஸர்வம் ஆத்மனோன்யன்ன வித்யதே |
ம்ருதோ யத்வத்கடாதீனி ஸ்வாத்மானம் ஸர்வமீக்ஷதே ||

ஆன்மாவே இவ்வுலகு எல்லாமாகும் அற்பமும்
ஆன்மாவுக்கு அந்நியமாய் இல்லை – ஆன்மாவாய்க்
காண்பன் எல்லாமும் கடாதிகள் மண்ணின் வேறாய்க்
காண்பதும் உண்டோ கழறு.

காணப்படுகிற இவ்வுலகில் இருப்பது எல்லாமே ஆன்மாதான். எந்தச் சிறிய பொருளை எடுத்துக்கொண்டாலும் அது ஆன்மாவுக்கு அந்நியமானதாக இல்லை. எல்லாவற்றையும் ஆன்மாவாக பார்ப்பவன் மண்பானைளை அவைகளின் மூலபொருளான மண்ணிலிருந்து வேறானதாகக் பார்க்கமுடியுமோ, சொல்லுங்கள்.

இதன் விரிபொருள்

இருப்பது ஒன்றே என்று கண்டபின், எல்லாமும் ஆன்மாவே என்று சொல்வதில் உள்ள “எல்லாம்” என்றால் என்ன? காணப்படும் சிறு துரும்பு கூட ஆன்மா வடிவம்தான். அது தன்னை அறிந்ததாக இருந்தால் அதுவும் நம்மைப்போல ஆன்மாதான். தன்னை அறியாததாக அது இருந்தாலோ, அதன் இருப்பதைத் தெரிந்துகொள்வதும் ஆன்மாவாகிய ஒருவனால்தான் என்பதால், அதன் இருப்பே ஆன்மாவால்தான் என்று சொல்கிறார். ஆக இவ்வுலகில் காணப்படுகிற எல்லாமும் ஆன்மாவே என்று ஆகிறது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. இது குறள்.

இல்லையென்றால் நாம் காண்பதின் நாமத்தையும் ரூபத்தையும் பார்த்து அவைகள் ஒவ்வொரு பொருளுக்கும் வேறாக இருப்பதால் அந்த வேற்றுமைகளைப் பார்த்து ரஸித்துக்கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் அவைகளே உண்மை என்று நினைத்து, அதில் நமது மனமும் லயித்து, அதற்குண்டான உணர்வுகளையும் உள்ளத்தே காட்டுவிக்கும். அதனால்தான் நாம் ரஸித்துப் பார்க்கும் சீடிவிரியலின் காக்ஷிகளுக்கு ஏற்ப நமக்கு சிரிப்பும் துக்கமும் வருவதோடு மட்டுமில்லை. வில்லிகளிடம் நமக்கு கோபமும், வெறுப்பும் வருகிறது. இவையெல்லாம் நாம-ரூபங்கள் உண்மையென நம்புவதால் வரும் விளைவுகள்தான். இதேபோல உலகின் நிகழ்வுகளையும் உண்மையென நம்புவோரிடம் அதேபோன்ற சலனங்கள் நிச்சயமாக இருக்கும். ஆனால் அனைத்தையும் ஆன்மாவாகக் பார்ப்பவன், அதாவது எதனையும் ஆன்மாவுக்கு அன்னியமாகக் காணாதவன், எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் மெய்ப்பொருளை மட்டுமே உன்னிப்பாக கவனிப்பான். குடம், பானை, பொம்மை என்று விதவிதமான பெயரும் உருவமும் கொண்ட பொருட்களை பார்க்கும்போது அவை அனைத்துக்கும் மூலகாரணமான மண் ஒன்றுதான் அவனுக்குத் தெரியும். அதேபோல விதவிதமான ஆபரணங்களைப் பார்க்கும்போதும் அவை அனைத்துக்கும் மதிப்பு கொடுக்கும் தங்கம் ஒன்றுதான் பார்வையில் பதியும். அந்தப் பார்வைதான் உள்ள பொருளை உள்ளதாகப் பார்க்கும் பார்வை. அதனால் தன்னை உணர்ந்து அனுபவிக்கும் ஞானிக்கு ஆன்மா ஒன்றைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. இருக்கும் அந்த ஒன்றே பலவாகத் தெரிவதாகவும் அவன் தெளிவான். இடையே ஆத்மதரிசனம் என்றும் சொல்லலாம்.
தொடரும்….