மெய் பதினாறு – ஷோடச ஸத்யம்

ஜயசக்தி.

மெய் பதினாறு – ஷோடச ஸத்யம்

அன்றொரு நாள் காலையிலே எழுந்திருந்தேன்
வானமதை நோக்கி நின்றேன் அதிசயித்தேன்
பகலவனின் கிரணத்தை
பார்த்திருந்தேன்
தகதகக்கும் சுடரை யார்
தோற்றுவித்தார்? -1

சற்று முகமசைக்க சீராக
மரத்தினது இலை கண்டேன்
கொத்தாக மலர் கொட்டும்
கொன்றைப் பூக்கள்
மெத்த அதிசயித்தேன் மனதில்
மகிழ்ச்சி
சத்தமின்றி செய்தது யார் ? யோசித்திருந்தேன்-2

பூனையொன்று குறுக்காலே போனதப்பா
பூனைவந்தால் சகுனமோ நான் படைப்பைப் பார்த்தேன்
பானையிலே நின்றுகொண்டு
அது எட்டிப் பார்க்க
பானைக்கு குயவனைப்போல்
படைத்தவன் யாரோ?-3

நாய் குழையும் மோப்பமிடும் நன்றாய்ப் படைத்தார்!
வேய்ங்குழலை வாய்வைக்க இசை வளரும்
பாய்ந்து வரும் அவ்வோசையினை
ஒலிப்பதாரோ?
ஆய்ந்து அதில் இராகமொன்று ஆவதென்னே?-4

மேயும் பசுமடியில் மூன்று
குடம் பால் கறப்பார்
தூய்மை மிகு பாலதனை தினம் தருவதாரோ?
தாயதனின் மடி பற்றி பசியாறும்
கன்றைப் பார்த்தேன்
ஓய்ந்துவிடும் என் ஆராய்ச்சி மூலம் அறிந்தால்!-5

ஒருவனுக்கு ஒருத்தி என்னும்
மனிதக் கூட்டம்
கருத்தோடு வாழுமந்த வாழ்க்கை முறைகள்
தருகின்ற வேதத்தின் சாகை நூல்கள்
அருமையாக ஆக்கியது எந்த சக்தி?-6

கண்ணுக்கு மை தீட்டும் காதல் மனைவி
பெண்ணுக்கு நகை பூட்டும் அழகுக்கழகு
மண்ணுக்குள் வாசனையாம் மழையும் பெய்தால்
விண்ணுக்குள் உட்கார்ந்து இவை வார்த்ததாரோ?-7

கை படைத்தான் அதில் பத்து விரல் படைத்தான்
கால் படைத்து காலணியை அணிய வைத்தான்
தோல் படைத்தான் தோளியர்மேல்
துவள வைத்தான்
வேல் விழியார் கூட்டத்தில் விழவும் வைத்தான்-8

இலை பரப்பி இன்சுவையாய்
உணவு வகைகள்
கலையதனை காசினியில் கொடுத்ததாரோ?
தலைவாரி பின்னலிடும்
மாதர் கூட்டம்
பலப்பலவாய் பகன்றிடலாம்
போதும் இதுவே-9

இது யாவும் மாயையென்று ஒரு வரியில் சொல்வார்
இல்லையில்லை மாயையென்று ஒதுக்க மாட்டேன்
பல்வகையாய் படைத்து நிற்கும் பரத்தின் சக்தி
நல்லோர்க்கு நாயகியாம் அவள் நிஜத்தின் சொந்தம்-10

இல்லையப்பா இல்லையில்லை மாயை இல்லை
கல்லைதினம் கும்பிடலாம் காணும் காசினி பொய்யோ
தொல்லையென்று தந்துணையை தவிக்க விட்டு
கால்வலிக்க காட்டினுள்ளே நடப்பது நன்றோ!-11

அன்னையவள் கருக்குழியில் கிடந்தது பொய்யோ
பின்னையவள் யோனியதில் பிறந்தது பொய்யோ
கண்ணே முத்தென்று அவள் கொஞ்சலும் பொய்யோ
தன்னுயிரை தந்து காக்கும் தாய்மையும் பொய்யோ-12

அத்வைதம் என்பதுவோர் கொள்கை சொல்வார்
அத்தனையும் பொய்யில்லை அறியாமை பொய்யாம்
மித்தையென்று மேதினியை ஒதுக்க வேண்டாம்
வித்தையினை வகுத்தாரே வீணோ சொல்வீர்-13

குணம் காப்பீர் மனை காப்பீர் மனைவி காப்பீர்
பணம் பாத்து மயங்காமல் மனதைக் காப்பீர்
இனம் காப்பீர் இல்லறமாம் நல்லறம் காப்பீர்
வனப்போடு வாழ்வதுவே சிறந்த வாழ்வாம்-14

துறவு மனம் கொண்டோர்கள் வனம் புகட்டும்
அறமாற்றி அனுதினமும் வாழ்தல் மேன்மை
உறவாடி உதவிடுதல் உலகில் உண்மை
பிறந்ததற்கு பொருள் வேண்டும் புரிந்து கொள்வீர்-15

மனைமகவு பொய்யென்று ஒதுக்க வேண்டா
தினையளவும் தப்பிதமாய் நடக்க
வேண்டா
தனையறியும் தனிக்கலையே வேதாந்த மாண்டா
சனைச்சனைச் சொல்லுகின்றேன் துன்ப மண்டா!-16

(வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)