நமது குரு தேவேந்த்ரர்‌ – ஸ்ரீஸ்ரீசிதானந்தநாதர்

நமது குரு தேவேந்த்ரர்‌ – ஸ்ரீஸ்ரீசிதானந்தநாதர்


This story written by (Sri Padmanantha Natha:) Sri Ramamurthi Iyer of Tiruvallikeni.
We extracted the Story contained in the Centenary Malar
published by him on 1982.

நமது குருதேவர்‌ சித்திரபானு ஐப்பசி 30௨ (1882) சுக்ல சதுர்த்தி பானுவாரம்‌ மூல நக்ஷத்திரம்‌ கூடிய சுபதினத்தில்‌ நெடிமிண்டி நரசய்யா என்கிற அந்தண ச்ரேஷ்டருக்கும்‌, காமாக்ஷி அம்மாளுக்கும்‌ உதித்தவர்‌. நமது குருதேவர்‌ தகப்பனார்‌ தணிகை மூருகனை வள்ளியை மணக்க வந்த கோலத்திலேயே தரிசித்தவர்‌. இவர்கள்‌ குலதெய்வம்‌ தணிகை முருகனாகும்‌. தனது தகப்பனாரிடம் வேதாத்யயனம்‌ செய்தவர்‌. அவர்‌களுக்கு வெங்கடராமன்‌, குப்புசாமி என மற்றும்‌ இரு புத்திரர்கள்‌. பழவந்தாங்கலைச்‌ சார்ந்த நங்கை நல்‌.லூரைச்சேர்ந்த ஸ்ரீமான்‌ சேஷய்யாவின்‌ புத்ரி ஸ்ரீவிசாலாக்ஷி அம்மாளை விவாகம்‌ செய்துகொண்டார்‌. 1898-ல்‌ தம்பியர்‌ இருவருடனும்‌ காஞ்சீபுரத்திற்கு வந்து சகோதரர்களை பள்ளியில்‌ சேர்த்தார்‌. தனக்கும்‌ ஆங்கிலம்‌ கற்க வேண்டும்‌ என்ற அவா ஏற்பட்டதன்‌ பேரில்‌ ஸ்ரீ.வைத்தியனாதய்யர்‌ என்பவர்‌ ஸஹாயத்தால்‌ படிப்பை முடித்து, 1901-ல்‌ பரீக்ஷையில்‌ சென்னை ராஜதானியில்‌. மூன்றாவதாகத்‌ தேர்வு பெற்று, ஐந்தாவது பாரத்துக்கு இரட்டைப்‌ ப்ரமோஷன்‌ கிடைத்தது. இதற்கிடையில்‌ 1901 மார்ச்சு மாதத்தில்‌ நமது குருதேவர் தகப்பனார்‌ விதேஹ முக்தியடைந்தார்‌.

குடும்ப பாரத்தை வகிக்க வேண்டிய நிர்பந்தத்தின்‌ பேரில்‌ 1904-ல்‌ சைதாப்பேட்டை டிரெயினிங்‌ ஸ்கூலில்‌ தேர்ச்சி பெற்று 1905 ஜுன்‌ மாதம்‌ சென்னை கார்ப்பரேஷன்‌ போதகாசிரியராக அமர்ந்தார்‌. 1913 பிப்ரவரி முதல்‌ சென்னை திருவல்லிக்கேணி, வவ்லப அக்ரஹாரம்‌ கார்ப்பரேஷன்‌ பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு அது முதல்‌ வேலையிலிருந்து 1937 ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ ஒய்வு பெற்றார்‌.

1911-ம்‌ வருஷம்‌ பிப்ரவரி 11உ தன்‌ தாயார்‌ அபிலாஷைக்கு இணங்கி உத்திர தேச யாத்ரைக்கு தாயாருடன்‌ கிளம்பி அலஹாபாத்‌ சென்று தாராகஞ்சு சிவமடத்தில்‌ இறங்கினார்‌. அவ்வமயம்‌ கும்பமேளா மஹோதயபுண்ணிய காலமாகையால்‌ எண்ணிறந்த சாதுக்களையும்‌ யோகிகளையும்‌ தரிசித்தார்‌. பரமசிவனது நெற்றிக்‌ கண்ணில்‌ இருந்து கிளம்பிய தேஜஸுக்கு சமானமான ஒளியோடும்‌, விசால நயனங்களோடும்‌ பரமானந்தம்‌ ததும்பும்‌ முக மண்டலத்தோடும்‌ விளங்கும்‌ ஒரு மஹாத்மாவைக்‌கண்டார்‌. “ஆஹா” இம்‌ மகானுபாவர்‌ என்தந்தையை ஆட்‌ கொண்ட ஷண்முகமூர்த்தியே! அடியேனையும்‌ ஆட்‌ கொள்ள இங்கு தோன்றியிருக்கிறார்‌ ‘* என்று நினைத்து மெய்‌ மறந்து ஆனந்த பாஷ்யம்‌ சொறிய அடியற்ற மரம்‌ போல்‌ விழுந்து நமஸ்கரித்து ‘ஹே ஸத்குரோ!’ அடியேனை, இந்த ஸம்ஸார ஸாகரத்தினின்றும்‌ கடையேற்றி ரக்ஷிப்பீராக’ என்று கதறியழுதார்‌. கருணைக்‌ கடலாகிய அம்மஹான்‌ “குழந்தாய்‌, எழுந்திரு! பயப்படாதே” என்று கூறி இரண்டு கைகளாலும்‌ வாரியெடுத்து தழுவிக்‌ கடைக்கண்‌ பார்வையாகும்‌ அமிர்தத்தால்‌ அஞ்ஞானத்தைப்‌ போக்கி “எந்த ஊர்‌?” உனக்கு என்ன வேண்டும்‌” -என்று விசாரித்தார்‌. நவது குருதேவர்‌ நான்‌ தென்‌ தேசவாஸீ. காஞ்சீபுரத்தில்‌ பிறந்தவன்‌. தற்காலம்‌ சென்னையில்‌ இருக்கிறேன்‌. கும்பமேளாவை தரிசிக்க இங்கு வந்தேன்‌. அடியேன்‌ பூர்வ ஜன்மங்களில்‌ செய்த மஹத்தான புண்யத்தால்‌ தங்களைத்‌ தரிசிக்கும்‌ பாக்யம்‌ பெற்றேன்‌. தங்கள்‌ அனுக்ரஹம்‌ தவிர மற்றெதுவும்‌ வேண்டிலேன்‌”-என்று கூறினார்‌. இவ்வார்த்தையைக்‌ கேட்டதும்‌ அப்பெரியார்‌ சிறிது நேரம்‌. கண்‌ மூடித்யானத்திலிருந்து பிறகு புன்‌ முறுவலுடன்‌ “குழந்தாய்‌ ! “நாளை தினம்‌ கழித்து மறுநாள்‌ திங்கட்கிழமை மஹோதய புண்யகாலம்‌ அன்று காலை சூர்யோதயத்துக்கு இங்கு வா:*–என திருவாய்‌ மலர்ந்தருளினார்‌. மஹோதயத்தன்று காலை அம்மஹானை அணுகி வந்தனம்‌ செய்து நின்றனர்‌.
உடனே அந்த மஹாத்மா தீர்த்த பாத்ரத்தை எடுத்து அபிமந்த்ரணம்‌ செய்து குருநாதருக்கு அபிஷேகம்‌ செய்வித்து. ஹம்ஸ மந்த்ரத்தையும்‌, ஸ்ரீவித்யா மஹாஷோடசீ மந்த்ரத்தையும்‌ உபதேசித்தனர்‌. பிறகு இப்‌ ப்ருஹ்ம வித்யைக்கு குருபரம்பரை அவசியம்‌. குரு ப.ரம்பரா ஞானமில்லாமல்‌ ஆத்மஞானம்‌ ஏற்படாது என்று தன்‌ தீக்ஷாநாமம்‌ ஸ்ரீகுஹாநந்தநாதர் என்றும், தன்‌ குரு ஸ்ரீஆத்மாநந்தநாதர்‌ என்றும்‌, அதற்குமேல்‌ ஸ்ரீப்ரகாசாநந்த நாதர்‌ என்றும்‌, கூறி இவர்கள்‌ யாவரும்‌ பரமஹம்ஸர்கள்‌ என்றும்‌, ஸ்ரீஆத்மாநந்தநாதர்‌ மஹாயோகி என்றும்‌ ஸுப்ரமண்ய உபாஸனையில்‌ கரைகன்டவர்‌ என்றும்‌, விளக்கி ஸ்ரீப்ரஹ்மண்ய மந்திரத்தையும்‌, குருபாதுகா மந்திரத்தையும்‌ அருளினார்‌. நமது குருதேவருக்கு ஸ்ரீசிதாநந்தநாதர்‌ என்ற தீக்ஷாநாமத்தையும்‌ சூட்டினார்‌. அளவற்ற புதையல்‌ கிடைத்த சந்தோஷத்தோடு புளகாங்கித மடைந்து, ஜன்மா கிருதார்த்தமடைந்த திட நம்பிக்கையோடு ஸத்குரு ஸார்வபெளமராகிய ஸ்ரீகுஹாநந்தநாதர்‌ பாதகமலங்களில்‌ பன்முறை ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து
கைகட்டி வாய்‌ புதைத்து நின்றனர்‌.

ஸ்ரீகுஹாநந்தநாதர்‌ ஆக்ஞைப்படி தான்‌ தங்கியிருந்த ஸ்ரீபைரவசாஸ்திரிகள்‌ இல்லத்துக்கு வந்து சாஸ்திரிகளுக்கும்‌, தாயாருக்கும்‌ ஆதியோடந்தகமாக வ்ருத்தாந்தத்தைச்‌ சொல்லி, அவதூதர்‌ அனுக்ரஹத்தை உரைத்தனர்‌. பிறகு சாஸ்‌த்திரிகளும்‌, குருநாதர்‌ தாயாரும்‌ அவதூதருக்கு உச்சிபொழுதில்‌ பிக்ஷை செய்வித்தனர்‌, சாஸ்திரிகளும்‌, ஸ்ரீகுஹானந்தநாதரும்‌ வெகு நேரம்‌ ஹிந்தி மொழியில்‌ சம்பாஷித்தார்கள்‌. அன்று தைஅமாவாசை-மஹோதய பர்வாவானதால்‌ சாஸ்திரிகள்‌ தான்‌ செய்யும்‌ தேவியாராதனத்துக்கு அவதூதரை ஆஹ்வானம்‌ செய்தார். அவதாதரும்‌ இணங்க சாஸ்திரிகள்‌ அவதூதருக்கு பாத பூஜை செய்து, உயர்ந்த ஆஸனத்தில்‌ அமர்த்தி யாவரும்‌ வந்தனம்‌ செய்து கொண்டு, தேவி யஜனத்திற்கு ஆரம்பித்தனர்‌. ஸூர்யாஸ்தமனம்‌ வரை இருந்து பிறகு அவதாதர்‌ கங்காதீரம்‌ சென்றனர்‌. இங்கனம்‌ சுமார்‌ ஒரு மாதகாலம்‌ பிரயாகையில்‌ குருகுலவாசம்‌ செய்து. காலையிலும்‌ மாலையிலும்‌, குருபரம்பரை, ஸுப்ரமண்ய தத்வம்‌ அத்வைத வேதாந்த நுட்பங்களையும்‌ அவதாதர்‌ நமது குருநாதருக்கு போதித்தார்‌. பிறகு ஸ்ரீகுஹாநந்தநாதரிடம்‌ உத்தரவு பெற்றுக்‌கொண்டு தாயாருடன்‌, அயோத்தி. காசி, கல்கத்தா. பூரிஜகந்நாதம்‌, கோதாவரி. கிருஷ்ணா வழியாக சென்னை வந்தடைந்தார்‌.

ஸ்ரீகுஹாநந்தநாதரின்‌ இறுதி கட்டளைப்படி நமது குருநாதர்‌ ரகஸ்யமாக ஷோடசீ உபாஸனையையும்‌, சூதஸம்ஹிதா, மஹாவாக்ய ரத்னாவளி பாராயணமும்‌ 12 வருஷங்கள்‌ செய்தார்‌. இந்த 12 வருட இடைவெளியில்‌ கல்லிடக்குறிச்சி ராஜாங்கஸ்வாமிகளைத்‌ தரிசித்து. ஸித்திப்ரஹ்மாநந்‌தீயம்‌, கீதை, உபநிஷத்து பாஷ்யங்கள்‌ கற்றுக்கொண்டார்‌. சுவாமிகளும்‌, “உனக்கு குரு அனுக்ரகம்‌ பூர்ணமாக இருக்கிறது” என்று ஆசீர்வதித்தார்‌. 1933-ம்‌ வருஷம்‌ திருவட்டீச்வரர்‌ சந்நிதியில்‌, “அருட்‌கவி” என்ற பட்டம்‌ பெற்றார்‌. தற்சமயம்‌ காமகோடி பீடத்தை அலங்கரிக்கும்‌ ஸ்ரீபெரிய பெரியவாள்‌ ஆக்ஞைப்படி, கஞ்சி ஸ்ரீகாமாக்ஷி சன்னிதானத்திலுள்ள ஸ்ரீசக்ரத்துக்கு சுமார்‌ 20 வருடகாலம்‌ பிரதி பெளர்‌ணமியிலும்‌ நவாவரண பூஜை செய்து வந்தார்‌ நம்குரு தேவேந்திரர்‌. ஆயிரக்‌ கணக்கான சிஷ்யர்களுக்கு மந்த்ரோபதேசம்‌, தீக்ஷை செய்திருக்‌கிறார்‌. நூற்றுக்‌ கணக்கானவர்களுக்கு பீடாதிகாரம்‌ கொடுத்து, நவாவரண பூஜை செய்யும்படி கட்டளை யிட்டிருக்கிறார்‌. ஸுவாஸினிகளுக்கு பீடாதிகாரம்‌ கொடுத்து, பகிரங்கமாக நவாவரண பூஜை செய்வித்த பெருமை தமது குருநாதர்‌ ஒருவருக்குத்தான்‌ சாரும்‌. இங்ஙனம்‌ பலருக்குத்‌ தீக்ஷை செய்வித்து, அவர்களை அஹங்க்ரஹோபாஸனையில்‌ திருப்பி, ப்ருஹ்ம வித்யாப்யாஸம்‌ செய்வித்து வருங்கால்‌, ஒவ்வொருவருக்கும்‌ தனித்தனியாய்ப்‌ போதிப்பதை விட யாவரையும்‌ ஒருங்கே சேர்த்து போதிப்பது ஸுலபமென ஒரு சபை நிர்மாணிக்கப்‌பட்டது. அதற்கு “ஸ்ரீ ப்ரஹ்மவித்யாவிமர்சினி ஸபா” என்று பெயர்‌ வழங்கப்பட்டது. இந்த சபையின்‌ சார்பில்‌ நம்‌ குரு நாதர்‌ அநேக நூல்களை இயற்றியிருக்கிறார்‌. அவைகளில்‌ முக்கியமானவை சில……

ஸ்ரீ நகர விமர்சனம்‌.
குரு தத்வ விமர்சனம்‌.
வரிவஸ்யாரஹஸ்யம்‌ (தமிழாக்கம்‌)
ஸ்ரீவித்யா ஸபர்யா பத்ததி.
ஸ்ரீ வித்யா ஸபர்யாவாஸனை (தமிழ்‌ ஆங்கிலம்‌)
ஸ்ரீ லலிதோபாக்கியான விமர்சனம்‌.
ஸ்ரீ ஸுப்ரமண்ய தத்வம்‌
ஸ்ரீ வித்யா நித்யான்ஹிகம்‌
மனீஷா பஞ்சகம்‌
ஞானபிரகாசம்‌.
லலிதா த்ரிசதீ பாஷ்யம்‌.
ஸ்ரீ காமகலா விலாலம்‌.
திருத்தணி பிரபந்தத்‌ திரட்டு முதலியன

மஹான்‌ ஸ்ரீபாஸ்கரராயர்‌ எழுதிய வரிவஸ்யாரஹஸ்யத்துக்கு தமிழாக்கம்‌ கொடுத்ததும்‌ ஸ்ரீவித்யாஸபர்யாவாஸனை யென்னும்‌ – ஸ்ரீ வித்யா நவாவரண பூஜா விளக்கமும்‌ நமது குரு நாதரின்‌ தலை சிறந்த நூல்கள்‌. நமது குருநாதர்‌ ஸ்ரீவித்யையை பிரகாசப்படுத்த காரணபூதராய்‌ இருந்ததை முன்னிட்டு, நமது குரு நாதருக்கு “அபிநவபாஸ்கர” என்ற விருது அளிக்கப்பட்டது. நமது குரு தேவேந்திரர்‌ சுமார்‌ முப்பதுக்கும்‌ மேற்பட்ட நூல்கள்‌ இயற்றிஇருக்கிறார்‌.

1937ஆம் வருடம் மே மாதம் ஸ்ரீகுஹாநந்தஅவதூதரின்‌ சரணாரவிந்தத்தின்‌ அனுக்ரஹத்தால்‌ பல நூல்கள்‌ வெளிவந்தனவாயினும்‌ அவதூதரின்‌ திருவாக்கனின்று வெளிவந்த பல ரஹஸ்யங்களடங்கிய “ஸ்ரீசுப்ரமண்யதத்வம்‌” எனும்‌ ஒப்பற்ற நூல்‌ வெளிவந்தபோது, நமது குருநாதர்‌
மேற்படி சபைக்கு “ஸ்ரீகுஹாநந்தப்ரஹ்மவித்யா விமர்சினிமண்டலி” என்று திருநாமம்‌ சூட்டி அன்று வரை வெளி வந்துள்ள பல நூல்களையும்‌ ஸ்ரீகுஹாநந்தபாதுகைகளுக்கு அர்ப்பணம்‌ செய்துள்ளார்‌.

1920 ஆம் வருடம் ஒருநாள்‌ இரவு 9 மணிக்கு பரதேவதாஸ்வரூபமான ஸ்ரீசேஷாத்ரி ப்ரம்மத்தை திருவண்ணாமலை கம்பத்திளையனார்‌ கோயிலில்‌
சந்தித்து வந்தனம்‌ செய்தபோது ஸ்வாமிகள்‌ சிரித்து “விடியற்‌ காலம்‌ 3 மணிக்கு வா” ன்று கட்டளையிட்டனர்‌. நமது குருநாதர்‌ பரமசந்தோஷமடைந்து இரவு முழுதும்‌ தூங்காமல்‌ இருந்து விடியற்‌காலம்‌ தரிசித்த போது ஸ்ரீஸ்வாமிகளின்‌ சரீரம்‌ முழுதும்‌ ஒரே சிவப்பாயிருந்தது. நமது குருநாதர்‌ ஸாஷ்டங்கமாக நமஸ்கரித்தார்‌. அப்போது ஸ்ரீஸ்வாமிகள்‌ “நன்றாய்ப்‌பார்‌. தெரிந்ததா? சந்தேகமில்லையே? உனக்கு கிடைத்ததை பத்ரமாய்க்‌ காப்பாற்று போ,” என்று ஆசிகூறிப்‌ போய்‌விட்டார்‌. நம்‌ குருநாதர்‌, சின்னசேஷாத்ரி என்று வழங்கிய பசுவான்‌ ஸ்ரீரமணமஹரிஷியைக்‌ கண்டு பல அரிய, பெரிய வேதாந்த விஷயங்களை விவாதித்திருக்கிறார்‌. ஸகல சாஸ்திர பாரங்கதரும்‌, மஹாவித்வானும்‌, ஸ்ரீவித்யோபாஸகதுரந்தரருமாகிய ஸ்ரீவத்ஸஸோம தேவசர்மா அவர்கள்‌, நம்‌ குருதேவர்‌ இயற்றிய காமகலாவிலாஸம்‌ என்ற நூலின்‌ மதிப்புரையில்‌ கீழ்கண்ட வாறு நம்‌ குருநாதரை மதிப்பிடுகிறார்‌.

“உலக நன்மையை நாடி ஸர்வாவயவஸுந்தரியான அன்னை அவனியில்‌ புருஷரூபம்‌ எடுத்தனளா? ஸ்ரீசங்கரர்‌, பாஸ்கரர்‌ என்னும்‌ இரண்டு வித்வான்‌ளின்‌ ஒரே அவதாரமா ? உபாஸக சிஷ்ய ஜனங்களின்‌ புண்ய ராசியா? இக்காலத்து மஹாஜனங்களின்‌ பெரும்‌ பாக்யமா? நற்குணங்‌களின்‌ ராசியே உருவெடுத்ததா? இதுவரை கிடைத்த குருக்களுக்‌கெல்லாம்‌ குருவா! இவர்‌? இங்ஙனம்‌ போற்றுதற்குரிய அரும்பெரும்‌ குணம்‌ படைத்த ப்ரம்மஸ்ரீ அபிநவபஸ்கர வரகவி ந. ஸுப்ரமண்ய ஆர்யர்‌ ஸ்ரீபாரததேவியின்‌ அருந்தவப்‌ புதல்வராவர்‌.”

நம்‌ குருநாதர்‌ 1957-ம்‌ வருஷம்‌, சண்டி நவராத்ரி ஷஷ்டி திதியன்று தமது குல தெய்வமான முருகன்‌ திருவடியை மஹா வஜ்ரேச்வரி திதி நித்யா ஸ்வரூபமாக அடைந்தார்‌.


ஸ்ரீசிதாநந்த நாத பாதரேணு, ஸ்ரீ பத்மாநந்தநாத :